வெள்ளி, 13 ஜூலை, 2012

லஞ்சத்தை தடுக்க முயன்றவருக்கு அமைச்சர் தண்டனை

கில்லாடி அ.தி.மு.க. அமைச்சர்: தூக்கியும் எறிந்தார்… தூதும் அனுப்பினார்!

Viruvirupu
அதிகாரிகள் மட்டத்தில் இப்படி ஒரு அதிரடியை எந்தவொரு அதிகாரியும் சந்தித்திருக்க முடியாது. நேர்மையாக பணியாற்றிய காரணத்தால் சிக்கலுக்கு உள்ளான ஆட்சியர் ஒருவர் பற்றிய விவகாரம் இது.
‘பைசா பார்க்கக்கூடிய’ நியமனங்களை நேர்மையாக திறமை அடிப்படையில் (மெரிட்) செய்ய முயன்றதில், கரை வேட்டிகளால் சமீபத்தில் தூக்கி எறியப்பட்ட ஆட்சியர் அவர். எறியப்பட்டு அவர் போய் விழுந்த இடம், ‘காத்திருப்போர் பட்டியல்’ அதற்குள் இருந்து வெளியே வருவதென்றால், ‘புஷ்’ வேண்டும் என்பது, நிர்வாக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட விஷயம்தான்.
அது பழைய கதை. புதிய கதை என்ன?
நேர்மையான அதிகாரி வாழ்க்கையே வெறுத்துப் போய் உள்ளார். காரணம், அவருக்கும் வந்திருக்கிறது ஒரு தூது!
“நேர்மை, கருமை, எருமைன்னு இந்தாள் எதுக்கு கூச்சல் போடுகிறார்? ஆளை தூக்கிர வேண்டியதுதான்” என்று கட்சிக்காரர்களிடம் கூறியவர், ஒரு மா.செ.-கம்- அமைச்சர். அதிகாரியை தூக்கி எறிய சென்னையில் சக்தி கொடுத்ததும் அதே அமைச்சர்தான்.

இப்போது, தூது போனவர், அதே அமைச்சரின் ஆள்தான் என்பதே அதிகாரியை தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது.
“காத்திருப்பு பட்டியலில் இருந்து வெளியேறி மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?” என்று கேட்ட தூதர்,  அதற்காக கொடுத்த விலைப் பட்டியல்தான், முன்னாள் ஆட்சியரை கிறுகிறுக்க வைத்துள்ளது.
“என்னங்க இது? லஞ்சத்தை தடுக்க முயன்றவருக்கு தண்டனை. அந்த தண்டனையில் இருந்து மீள லஞ்சமா?”

கருத்துகள் இல்லை: