வியாழன், 12 ஜூலை, 2012

காஷ்மீர் பாகிஸ்தானுக்குக் கிடைக்காமைக்கு இந்தியா காரணமல்ல


 What Do With Kashmir
பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.
இந்த நூலில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்...
எனது கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் சற்று அமைதியாக இருந்திருந்தால் காஷ்மீர் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் தானாகவே கிடைத்திருக்கும். காரணம், இந்தியா காஷ்மீரை முதலில் விரும்பவே இல்லை. குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல் விரும்பவில்லை.
காரணம், காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள் என்பதால்.
ஆனால் பாகிஸ்தான் பொறுமையாக இல்லாமல், பழங்குடியின மக்களைத் தூண்டி விட்டு, தனது ராணுவத்தினரையும் அனுப்பி இந்தியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்ததால்தான் காஷ்மீரை விடுவதில்லை என்ற முடிவுக்கு இந்தியா வந்தது, போரும் வெடித்தது. இன்று வரை பிரச்சினையும் தொடருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீரை யாருடன் இணைப்பது என்ற சர்ச்சை வந்தது. காஷ்மீ்ர் மன்னர், தனது பகுதி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறார். எனவே காஷ்மீர் இந்தியாவுடன்தான் இணைய வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் அதை ஆட்சேபித்தார் சர்தார் வல்லபாய் படேல்.
இதுகுறித்து பின்னாளில், நான் ஷேக் அப்துல்லாவை சந்தித்தபோது அவர் என்னிடம் கூறுகையில், காஷ்மீர் குறித்து நேருவுக்கும், படேலுக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது. காஷ்மீர் முஸ்லீ்கள் நிறைந்த பகுதி, எனவே அது பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும் என்றார் படேல். ஆனால் அதை நேரு ஏற்கவில்லை.
அப்போது காஷ்மீ்ர் மகாராஜா, இந்தியாவுடன் தனது பிராந்தியத்தை இணைக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்தார் படேல். ஏற்கனவே இந்தியாவிலேயே பல பிரச்சினைகள் உள்ளன. இதில் காஷ்மீரையும் நாம் ஏன் சுமக்க வேண்டும் என்று கேட்டார் படேல்.
இந்த நேரத்தில்தான் பாகிஸ்தானிலிருந்து பழங்குடியினரை காஷ்மீருக்குள் அனுப்பி இந்தியாவுடன் போரை ஆரம்பித்து விட்டது பாகிஸ்தான். இதனால் நேரு கோபமடைந்தார். இதையடுத்து பாகிஸ்தானிய பழங்குடியினரை எதிர்த்துப் போரிடுமாறு ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டு விட்டார் என்றார் ஷேக் அப்துல்லா.
இந்துவான காஷ்மீர் மன்னர் முதலில் சுதந்திரத்தையே விரும்பினார். தான் யாருடனும் இணைய விரும்பவில்லை, எங்களை தனி நாடாக அறிவித்து விடுங்கள் என்பதே அவரது முதல் கோரிக்கையாக இருந்தது. ஒரு வேளை அது முடியாவிட்டால் இந்தியாவுடன் இணைய விரும்பினார்.
ஆனால் அப்படி இந்தியாவுடன் இணைந்தால் தனக்கு முதல் மரியாதை போய் விடும், ஷேக் அப்துல்லாவுக்குத்தான் அதிக மரியாதை கிடைக்கும் என்பதால் அவர் முதலில் மறந்து விட்டார். ஆனால் பின்னர் அதுகுறித்து அவர் யோசித்து சுதாரிப்பதற்குள், காஷ்மீரை உரிமை கொண்டாடி விட்டது இந்தியா.
காஷ்மீர் வேண்டாம் என்பதை, படேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருந்தால் அதை நிச்சயம் நேரு கேட்டிருப்பார். காஷ்மீரையும் விட்டுக் கொடுத்திருப்பார். ஆனால் அதற்கான வாய்ப்பைக் கூட தர மறுத்து விட்டதுதான் பாகிஸ்தான் செய்த தவறு. இதையே பின்னாளில்  மெளன்ட்பேட்டனும் கூறியிருந்தார். காஷ்மீர் பாகிஸ்தானுக்குக் கிடைக்காமல் போக இந்தியா காரணமல்ல, மாறாக பாகிஸ்தான்தான் காரணம்.

கருத்துகள் இல்லை: