புதன், 11 ஜூலை, 2012

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் நெடுஞ்செழியனுக்கு அதிருப்தி



 நெடுஞ்செழியன் : நம்பர் 2
நிரந்தர முதல்வர், நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பன போன்ற பதங்களை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நிரந்தர இரண்டாம் இடம் என்றொரு பதமும் உண்டு. அது சிலருக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அரசியலில். கட்சிகள் மாறும். காட்சிகள் மாறும். தலைவர்கள் மாறுவார்கள். ஆனால் அந்த இரண்டாம் இடம் மட்டும் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். அவ்வப்போது அவர்களை முதலிடம் முத்தமிடும். ஆனால் நிலைக்காது. இத்தனைக்கும் முதல் இடத்தைப் பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் அவர்களுக்கு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியல் களம் கண்ட முக்கியமான நம்பர் 2 தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்.
அவரைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்று நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அவருடைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது அவர் பிறந்த தேதி கண்ணில்பட்டது. 11 ஜூலை 1920. அதாவது, இன்று.

சுயமரியாதை இயக்கம் தொடங்கி நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக, மக்கள் திமுக, அதிமுக என்று திராவிட இயக்கத்தில் இருந்து உருவான பெரும்பாலான கட்சிகளில் பங்களிப்பு செய்தவர் நெடுஞ்செழியன். நாகை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த நெடுஞ்செழியன், பட்டுக்கோட்டையில் பள்ளிக்கல்வியையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர்.
பெரியாரின் பேச்சை தனது தந்தையுடன் சென்று கேட்டவர். அதன் காரணமாகவே சுயமரியாதை இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நிறைய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். பிறகு சுயமரியாதை இயக்கத் தலைவர்களைத் தம்முடைய ஊருக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார். நன்றாகப் பேசக்கூடியவர் என்பதால் அவரையும் மாணவர்கள் வெளியூர்க் கூட்டங்களுக்குப் பேச அழைத்தனர். அதன்மூலம் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.
பேச்சாளராக இருந்த நெடுஞ்செழியன் நேரடியாகப் போராட்டக்களத்தில் இறங்கியது 1938ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போதுதான். அதன்பிறகு பெரியாரோடும் அண்ணாவோடும் நெருக்கமாகப் பழகி, அவர்களுடைய அன்பைக் கவர்ந்தார். அதன் விளைவு, சுயமரியாதை இயக்கம் சார்ப்பாக நடத்தப்படும் மாநாடு, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் அந்த இரண்டு தலைவர்களோடு நெடுஞ்செழியனும் இடம்பெறத் தொடங்கினார்.
நெடுஞ்செழியனின் கல்வியறிவு, மொழியறிவு, பேச்சாற்றல், சுறுசுறுப்பு, நேர்மை ஆகிய குணங்கள் பெரியாரையும் அண்ணாவையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டன. விளைவு, முக்கியமான வேலைகள் எல்லாம் நெடுஞ்செழியனிடம் தரப்பட்டன. பல விஷயங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 1944ல் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற பெரியார் முடிவெடுத்தபோது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா. அதனை வழிமொழிந்தவர் நெடுஞ்செழியன்.
‘தோழர் நெடுஞ்செழியனை பெரியார் தமது மேற்பார்வையில் வைத்துப்பார்த்தார் – அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் – ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம் அவராலும் ஒருகுறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்!’ – இது நாவலர் நெடுஞ்செழியனைப் பற்றி திமுக நிறுவனர் அண்ணா செய்திருக்கும் பதிவு.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட நெடுஞ்செழியனுக்கு எழுத்தின் மீது அதிக நாட்டம். குறிப்பாக, பத்திரிகைகளில் எழுதுவது. அந்த ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மன்றம் என்ற பெயரில் சொந்தப் பத்திரிகை தொடங்கி எழுதினார். பல கட்டுரைகளை அவரே எழுதினார். உதவிக்கு, அவருடைய சகோதரர் இரா. செழியன் இருந்தார். பல திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு மன்றம் இதழில் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
பெரியாரிடம் பழகி, அவரிடமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும் அண்ணாவின் மீதுதான் நெடுஞ்செழியனுக்கு அன்பு அதிகம். கருஞ்சட்டைப்படை, சுதந்தர தினம் உள்ளிட்ட விஷயங்களில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் முளைத்தபோதெல்லாம் அதனைக் களைவதற்கு முனைப்பு காட்டியவர் நெடுஞ்செழியன். எனினும், மணியம்மையைத் திருமணம் காரணமாக திகவில் இருந்து விலக அண்ணா முடிவெடுத்தபோது அண்ணாவின் பக்கம் முழுமையாக வந்துவிட்டார் நெடுஞ்செழியன்.
திமுக என்ற புதிய இயக்கத்தைக் கட்டமைத்தபோது அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் நெடுஞ்செழியன் முக்கியமானவர். அன்று தொடங்கி அண்ணா கொடுத்த பணிகளை எல்லாம் தயங்காமல் ஏற்றுக்கொண்டார். திமுகவில் அவர் பெற்ற முதல் பதவி, பிரசாரக்குழுத் தலைவர். அந்தக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களுள் ஒருவர் மு. கருணாநிதி.
அன்று தொடங்கி அண்ணா எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் நெடுஞ்செழியன். இன்று முதல் நீ கழகத்தின் பொதுச்செயலாளர் என்றாலும் சரி, நாளையில் இருந்து நீ கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்றாலும் சரி, அவைத்தலைவர் என்றாலும் சரி, அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் சரி, தயங்காமல் ஏற்றுக்கொண்டார். அவருடைய நேர்மையும் பக்குவமும் நிதானமும் அவருக்குப் பல பொறுப்புகளைப் பெற்றுக்கொடுத்தன.
1953ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன்.
தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்புகின்ற விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது. ‘அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரி.
அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன்.
இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியின் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.
அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தாற்காலி முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர்வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.
கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்தார் என்று வருத்தப்பட்டார் நெடுஞ்செழியன். பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.
1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன். என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.
நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தாற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.
எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தாற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.
எனினும், 1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார்.
திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.
நான் வாழ்வில் கண்டதும் கேட்டதும் என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையும் முக்கியமானது. நெருக்கடியான, சர்ச்சைக்குரிய காலகட்டங்களில் அவருடைய கருத்துகள், உரைகள் இடம்பெற்றுள்ள புத்தகம் இது. மேலும், எழுச்சி முரசு, மொழிப்போராட்டம் கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் ஆகியனவும் குறிப்பிடத்தக்க பதிவுகள். நெடுஞ்செழியன் எழுதிய பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகம்.
அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும்.
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: