ஞாயிறு, 8 ஜூலை, 2012

California நித்யானந்தா குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு


நித்யானந்தா குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு! - கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வாஷிங்டன்: வேத பல்கலைக்கழகம் தொடங்க பக்தர் கொடுத்த ரூ 10 கோடி நன்கொடையை மோசடியாக பயன்படுத்திய வழக்கில், நித்யானந்தா குற்றவாளி என்றும் அவர் மீதான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆசிரம கிளைகள் அமைத்து பகட்டாக வலம் வந்தவர் நித்யானந்தா.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் நடத்திய அந்தரங்க சேட்டைகளால் உலகமே ஏளனமாய் சிரிக்கிறது. காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்துள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன், நித்யானந்தா இன்வெஸ்ட் மென்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல்யூஷன் போன்ற பல நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழில் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர்.

அமெரிக்காவில் இருந்தாலும், தாய் நாட்டு கலாச்சாரத்தில் இவர்களுக்கு அபார பற்று.

கடந்த 2005-ல் அமெரிக்காவில் நித்யானந்தா சுற்றுப்பயணம் செய்த போது அவரது ஆன்மீக உரையையும், வேத பாராயண திறமையையும் பார்த்து பாபட்லால் தம்பதியினர், நித்யானந்தாவை ஆன்மீக குருவாக ஏற்றனர்.

பாபட்லாலின் வசதி வாய்ப்புகளை புரிந்து கொண்ட நித்யானந்தா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதா பல்கலைகழகம் நிறுவ ஆசைப்படுவதாக கூறினார். அதை வரவேற்ற பாபட்லால் 1.7 மில்லியன் டாலர் அதாவது ரூ.9.35 கோடி பணம் நன்கொடையாக வழங்கினார். அந்த பணத்தை வைத்து நித்யானந்தா வேத பல்கலைக்கழகம் தொடங்கவில்லை. மாறாக தனது நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டார்.

இதற்கிடையில் நித்யானந்தா- ரஞ்சிதா சல்லாப சி.டி. வெளியானதை பார்த்ததும் பாபட்லால் அதிர்ந்து போனார். நித்யானந்தாவின் இன்னொரு முகத்தை பார்த்த பாபட்லால் கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடும்படி கேட்டுள்ளார். ஆனால் நித்யானந்தா திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பாபட்லால் கலி போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் வில்சன் தனது அதிரடித் தீர்ப்பில், "நித்யானந்தா பவுண்டேஷன் அமெரிக்க நிதிச்சட்டப்படி செயல்படவில்லை. அதனால் இது ஒரு மோசடி நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஏமாற்றப்பட்ட பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரை திருப்பி தர வேண்டும். இந்த வழக்கின் தண்டனை விபரம் 19-ந்தேதி அறிவிக்கப்படும்", என்றார்.

19-ந்தேதி நித்யானந்தாவுக்கு என்ன தண்டனை என்பது தெரிய வரும்.

அமெரிக்க சட்டங்கள் மோசடியை தீவிரமாக தண்டிக்கக் கூடிய வகையில் உள்ளன. கடுமையான தண்டனைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை அளிப்பது உறுதி என்பது தெரிந்ததும், மதுரை ஆதீன மட விவகாரமும் பரபரப்பாகியுள்ளது. மதுரை ஆதீன மீட்பு குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இது பற்றி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை கண்ணன் கூறும் போது, இனியாவது மதுரை ஆதீனம் சுதாரித்து கொண்டு இளைய ஆதீனம் பட்டத்தை திரும்ப பெற வேண்டும். அப்போதுதான் மதுரை ஆதீனத்தின் கவுரவம் காப்பாற்றப்படும் என்றார்.

இந்த சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி என்று தனது வக்கீல்கள், சிஷ்ய கோடிகளுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளாராம் நித்தியானந்தா.

கருத்துகள் இல்லை: