புதன், 11 ஜூலை, 2012

அழுகையை நிறுத்த சிறுமிக்கு சூடு: அங்கன்வாடி பணியாளர்கள் சஸ்பெண்ட்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே, குழந்தையின் அழுகையை நிறுத்த சூடு வைத்த அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கம்பம் அருகே சுருளிப்பட்டி காலனியில் அங்கன்வாடி உள்ளது. இங்கு பாரதி அமைப்பாளராகவும், ஜெயா உதவியாளராகவும் பணிபுரிகின்றனர். இம்மையத்தில் சசிக்குமார், முருகேஸ்வரி தம்பதியினரின் குழந்தை ரோஷினி,3, சேர்க்கப்பட்டிருந்தார். சில நாட்களாகவே மையத்திற்கு வந்ததும், ரோஷினி அழத் துவங்கியுள்ளார். ரோஷினியின் அழுகையை நிறுத்த, மையத்தின் உதவியாளர் ஜெயா, கொள்ளிக்கட்டையை எடுத்து கை, கால்களில் சூடு வைத்தார்.
வீட்டிற்கு வந்தபின் குழந்தையின் கை கால்களில் சூடு வைத்ததற்கான அடையாளங்களை பார்த்த தாய் முருகேஸ்வரி, ஜெயாவிடம் கேட்டதற்கு, சிறுமி கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் சூடு வைத்ததை அறிந்த கிராம மக்கள், ராயப்பன்பட்டி போலீசில் ஜெயா மீது புகார் செய்தனர். எஸ்.ஐ., முத்துப்பாண்டி விசாரித்து விட்டு, நடவடிக்கை எடுக்காமல் சென்று விட்டார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகபிரபா விசாரணை செய்து, அமைப்பாளர் பாரதி, உதவியாளர் ஜெயாவை சஸ்பெண்ட் செய்தார்.

கலெக்டர் பழனிசாமி கூறியதாவது: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை விசாரித்து விரிவான அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். முதற்கட்டமாக இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து அங்கன்வாடிகளிலும் குழந்தைகளை பாதுகாப்பாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை: