சென்னை: "நடராஜன், ராவணன், திவாகரன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள்
என்னவாயிற்று?' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, அரசுக்கு கேள்வி
எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: அந்தக் கால அரசர்களைப் போல், கொடநாட்டிற்கு
அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப்
பெய்கிறதா? என, முதல்வர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அன்றாடம் முதல்வர்
பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே வந்து
கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும்,
அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகின்றனவா? அரசு செயல்படுகிறதோ
இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா? முதல்வர்
நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய
ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான
வழக்குகளைப் பதிவு செய்வார். அவ்வாறு கொடுக்கப்பட்ட புகார்களின் மேல்,
முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? அந்த வழக்கிலே
சம்பந்தப்பட்டவர், சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை, "என்கவுன்டர்'
செய்ய முயற்சி நடைபெற்றதாக, இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினார்.
அதற்கு அரசின் பதில் என்ன? அதன் பின் அவர் வாயே திறக்கவில்லையே? வாயைத்
திறக்கக் கூடாது என, அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா அல்லது பயமுறுத்தப்பட்டு
விட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக