திங்கள், 9 ஜூலை, 2012

தலை வழுக்கையா? Stem Cell சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம்

உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர். மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, மன இறுக்கம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் தலை வழுக்கைக்குக் காரணிகளாவதாகக் கூறப்படுகிறது.
தலை வழுக்கை ஏற்பட்டாலே ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. இதற்கு காரணம் முடி உதிர்ந்தாலே முழு அழகும் போய்விட்டது என்று கருதுவதுதான். இதனால்தான் கூந்தல் தைல விற்பனையில் அருவிபோல பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. காலகாலமாக, வழுக்கை தலையில் முடி வளர்த்துப் பார்க்க உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர். தலை வழுக்கையானவர்கள் இனி கவலை வேண்டாம், ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் என்று ஜப்பானிய பல்கலைகழக ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை அளிக்கிறது.

ஸ்டெம்செல் உதவியுடன் வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஜப்பானின் டோக்கியோ பல்கலையில் உள்ள சுஜி அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். எலிகளை வைத்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர்கள் ஸ்டெம்செல்லில் இருந்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக்கிள் எனப்படும் வேதிப் பொருளை மட்டும் எடுத்து, வழுக்கை எலியின் தலையில் பொருத்திப் பார்த்ததில், ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
எலியின் தலையில் வழக்கம்போல முடி முளைப்பதாக ஆராய்ச்சி குழுவின் தலைவர் டகாஷி சுஜி கூறியுள்ளார். எனவே இனி வழுக்கை ஆகிவிட்டதே என்று கவலைவேண்டாம் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் முடியை வளர்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கைத் தருகின்றனர் ஆய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை: