செவ்வாய், 10 ஜூலை, 2012

ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!


ஜெயா அரசு, தனது “நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’’யைப் பற்றிச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த வேளையில், அவரது ஆதரவு ஏடான ஜூனியர் விகடன், “இந்த ஆட்சியில் எந்த வேலையையும் செய்ய ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை என்கிறாரே கருணாநிதி?” என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு இப்படி பதில் அளித்திருந்தது:
‘‘கமிஷன் தொகையையும் அதிகரித்துவிட்டார்கள்.  யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம்.  எப்படி வருவார்கள் ஒப்பந்தக்காரர்கள்?” (ஜூ.வி.,03.06.2012)
எதிர்க்கட்சியான தி.மு.க.வின் இந்தக் குற்றச்சாட்டை உண்மையென்று அவாள் ஏடு மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.  அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்தின் தலைவியான ஜெயாவும் உண்மைதான் என்று கூட்டம் போட்டு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் 169 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் வீட்டுக்கு மின் இணைப்பு தருவது தொடங்கி டாஸ்மாக் பார் வழியாக பிராத்தல் தொழில் நடத்துவது முடிய எந்தெந்த விதத்தில் எல்லாம் கமிஷன், கட்டிங் அடிக்கிறார்கள்; கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்ற விவரத்தைத் ‘துப்பறிந்து’ அறிக்கையாக ஜெயாவிடம் கொடுத்திருக்கிறது, உளவுத் துறை.  அதை வைத்துக் கொண்டு கவன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிய ஜெயா, “ரோடு போடுற காண்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்று விட்டது.  கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் (முந்தைய தி.மு.க. கவுன்சிலர்கள்) எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள்.  ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சிவிட்டீர்கள்” எனப் பிலாக்கணம் பாடியிருக்கிறார்.
மாட்டிக்கொண்ட இந்தத் திருடர்கள் அனைவரும் கூட்டம் முடிந்த பிறகு, “நாங்க மட்டும்தான் கமிசன் அடிக்கிறோமா?” எனப் பத்திரிகையாளர்களிடம் புலம்பித் தள்ளியதோடு, ஜெயா அரசில் தம்மைவிடப் பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் மற்ற திருடர்களைப் பற்றிய உண்மைகளையும் உளறிக் கொட்டினார்களாம்.
“நாங்கள் லட்சக்கணக்கில்தானே வாங்குகிறோம்; அமைச்சர்கள் கோடிக்கணக்கிலே தலைமைக்குக் கொடுக்க வேண்டுமென்று சொல்லியே வாங்குகிறார்களே, அவர்களை யார் எச்சரிக்கை செய்வது?  உதாரணமாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கே ஒரு நூறு கோடியாம்.  பீர் விலையை உயர்த்த சில நூறு கோடியாம்.  விரைவில் மற்ற மதுபானங்களின் விலையை உயர்த்தப் போகிறார்களாம்.  அதற்குப் பல கோடி வசூல் தொடங்கிவிட்டதாம்.  இதற்கெல்லாம் யார் நடவடிக்கை எடுப்பது? என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சில பத்திரிகையாளர்களிடம் கிண்டலாகச் சொன்னதாக” அம்பலப்படுத்துகிறார், மு.கருணாநிதி. (தினகரன், 22.06.2012)
கவுன்சிலர்களைக் கூட்டிவைத்து எச்சரிக்கை செய்தது போல, அமைச்சர்களைக் கூட்டிவைத்து, ஜெயா எச்சரிக்கை செய்யும் நல்ல நாள் விரைவில் வரலாம்.  அப்படி நடக்கும்பொழுது, அமைச்சர்கள் அம்மாவிற்குக் கொட்டிக் கொடுத்த விவரமும் அம்பலத்துக்கு வரும்.
கமிஷன், கட்டிங் விவகாரத்தில் மட்டுமல்ல, கடந்த தி.மு.க. ஆட்சியில் என்னென்ன விதத்தில் அதிகாரமுறைகேடுகள், கொள்ளைகள் நடந்து வந்தனவோ, அவை அத்துணையும் அம்மா ஆட்சியிலும் தொடர்வது மட்டுமல்ல, முந்தைய ஆட்சியை விஞ்சும் அளவிற்கும் நடந்து வருகின்றன.  உதாரணமாக, மணல் கொள்ளையை எடுத்துக் கொண்டால், கடந்த ஆட்சியில் ஆற்றுப் படுகைகளில் நடந்து வந்த மணற்கொள்ளை, இந்த ஆட்சியில் குளம், ஏரி, கண்மாய் என விரிவடைந்திருக்கிறது.
“மாவட்டம், வட்டம், ஊராட்சி வாரியாகப் பொதுப்பணித் துறை புறம்போக்கு இடங்களின் வண்டல் மண்ணுக்கான ஏகபோக உரிமை ஆளுங்கட்சியினருக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் கொடுக்கப்படுகிறது” என ம.தி.மு.க. தலைவர் வை.கோ. அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனைஇடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, மணல் கொள்ளையிலும் தி.மு.க. பாணியையே அ.தி.மு.க.வும் பின்பற்றி வருகிறது.  “தமிழகத்தில் எந்த ஆட்சி இருந்தாலும் மணலைப் பொருத்தவரை கோவையைச் சேர்ந்த ஒரு தனிமனிதரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.  அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், ஒட்டுமொத்த மணல் காண்ட்ராக்டும் அந்த கோவை பிரமுகரின் கைக்கே மீண்டும் போய்விட்டது” என அ.தி.மு.க. ஆதரவு பத்திரிகைகளே உண்மையை மறைக்கமுடியாமல் எழுதும் நிலைக்கு வந்துவிட்டன.
இந்த மணற்கொள்ளையை எதிர்த்து நின்றதற்காக உடுமலை நகரின் அருகே அமைந்துள்ள தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணபுரம் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்குக் குடிதண்ணீர் வழங்கும் கிணறுகளில் காப்பர் சல்பேட் என்ற இரசாயனப் பொருளைக் கொட்டி, அக்கிணறுகளைப் பாழாக்கியது மணற்கொள்ளைக் கும்பல்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதைத் தடுத்த சதீஷ்குமார் என்ற இளைஞர் மணல் மாஃபியாக்களால் லாரி ஏற்றுக் கொல்லப்பட்டார்.  அ.தி.மு.க. அரசு தனது முதலாண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஒரு கிராம உதவியாளரை மணல் மாஃபியாக்கள் உயிரோடு புதைத்துக் கொல்ல முயன்றனர்.  திருப்பத்தூர் பகுதியில் நடந்துவரும் மணற்கொள்ளையைத் தடுக்க முயன்றதற்காக  தருமராஜன் என்ற போலீசு கூடுதல் கண்காணிப்பாளர், அங்கிருந்து திருவள்ளூருக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.
மதுரையில் மு.க. அழகிரியின் கொட்டத்தை அடக்கிய மூம்மூர்த்திகளெனப் பத்திரிகைகளால் கொண்டாடப்பட்ட அம்மாவட்ட ஆட்சியர் சகாயம், போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், இன்ஸ்பெக்டர் ஜெனரல் கண்ணப்பன் ஆகிய மூவரும் அம்மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளனர்.  இந்த மாறுதலின் பின்னே கிரானைட் குவாரி காண்டிராக்டர்களின் கைவரிசை இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இக்கும்பல்களின் கொட்டம் இருந்து வந்தாலும், மு.க. தனது சாதனை என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்காவது, பள்ளிக் கல்வியில் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தியது, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் என ஒன்றிரண்டு காரியங்களைச் செய்துவிட்டுப் போனார்.  ஆனால், ஜெயா ஆட்சியில் . . .?  பொதுப் பாடத் திட்டத்திற்குக் குழி வெட்ட முயன்று, அதில் தோற்றுப் போனார்; கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்து, தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்குக் கதவை அகலத் திறந்துவிட்டார்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இழுத்து மூட முயன்று நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டார்; ஒரே கையெழுத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை வேலையை விட்டுத் துரத்தியடித்தார்; டாஸ்மாக்கில் டிலைட் பார்களை அறிமுகப்படுத்தினார்; கஜானா காலி, கஜானா காலி எனப் புலம்பியே, பால் விலை, மின் கட்டணம், பேருந்து கட்டணங்களை உயர்த்தியும் கூடுதலாக வரி போட்டும் ஆட்சியைப் பிடித்த ஒரே ஆண்டுக்குள் 18,000 கோடி ரூபாய்க்கும் மேல் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார்.
விலையில்லா அரிசி, கிரைண்டர் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவது சாதனையில்லையா எனக் கேட்பவர்களுக்கு,  அக்கவர்ச்சித் திட்டங்கள் பற்றி ஜெயாவின் துதிபாடிகளுள் ஒருவரான தமிழருவி மணியன் இப்பொழுது இப்படி எழுதுகிறார்: “இதற்கு எந்த அறிவுக் கூர்மையும் ஆட்சித் திறனும் அவசியம் இல்லை.”
இதுவொருபுறமிருக்க, கடந்த ஓராண்டில் ஜெயாவின் ஆட்சி மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையையாவது கண்டு கொண்டிருக்கிறதா?  “நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின் தட்டுப்பாடைத் தீர்த்து விடுவேன்” என நாக்கூசாமல் புளுகி ஆட்சியைப் பிடித்த ஜெயா, ஏதோ தனியாரின் கொள்ளையைச் சகித்துக் கொள்ளாதவர் போல, தமிழக மின் வாரியம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி வந்ததை ரத்து செய்தார்.  இதனால் மின்வெட்டு மேலும் தீவிரமாகும் எனத் தெரிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.  பின்னர் இக்கடுமையான மின்வெட்டு பிரச்சினையையே முகாந்திரமாகப் பயன்படுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்கியதோடு, மின் கட்டணத்தையும் உயர்த்தினார்.  தனது இந்த நோக்கங்களைச் சதித்தனமாக நிறைவேற்றிக் கொண்ட பிறகு, மீண்டும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டார்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமது வாழ்வாதாரத்திற்காகத் தன்னெழுச்சியாக அணிதிரண்டு போராடத் தொடங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசு தாக்குதலை ஏவிவிட்டு ஒடுக்கினார்.
ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனை
கரும்பாலைத் தொழிலாளர்களின் போரட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவராமல் ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்தடித்ததால், விளைந்த கரும்புகளை வெட்ட முடியாமல் போய் விவசாயிகள் பெருத்த நட்டத்தை அடைந்தனர்.  இதனால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி முருகையன் என்ற விவசாயி இந்த உண்மையைக் கடிதமாக எழுதிவைத்துவிட்டு சிதம்பரம் நகரில் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக்தின் தென்பகுதியில் கடையநல்லூரில் தொடங்கிய டெங்கு காய்ச்சல் இப்பொழுது வடசென்னையையும் தொட்டுவிட்டது.  அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படியே இதுவரை இந்நோய்க்கு 42 பேர் பலியாகிவிட்டனர்.  கொசு ஒழிப்பு, சாக்கடையைச் சுத்தம் செய்தல் போன்ற சாதாரண பொது சுகாதாரத்தைப் பேணும் நடவடிக்கைகள் ஒழித்துக் கட்டப்பட்டதால் வந்த வினை இது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசு மருத்துவமனைக்குள்ளேயே தாங்கள் தாக்கப்படுவதைக் காட்டிப் பயிற்சி மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் தவித்துப் போனார்கள்.  இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிடாமல், புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகுதான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனத் திமிராக அறிவித்தார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்திய மாணவர்களைச் சிறைபிடித்து வைத்துக்கொண்டு பெற்றோர்களை மிரட்டும் அளவிற்கு பள்ளி முதலாளிகள் கொட்டமடித்து வருகின்றனர்.  இந்த அடாவடித்தனத்தைக்  கண்டுகொள்ளாத ஜெயா அரசு, மறுபுறம் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோர்கள் நடத்திவரும் போராட்டங்களை போலீசைக் கொண்டு அச்சுறுத்தி அடக்கிவிடுவதில்தான் அதீத அக்கறை காட்டுகிறது.  பேருந்துக் கட்டணத்தை மலை போல உயர்த்திவிட்டு, மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்காமல் ஒரு மாதத்துக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறது.  எதிர்க்கட்சிகள் இந்த அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியவுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப் போவதாக பம்மாத்து காட்டுகிறது.
இப்படி எந்தவொரு மக்கள் பிரச்சினையானாலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல், சர்வ அலட்சியத்துடன் நடந்துவரும் ஜெயா அரசு, ஓராண்டில் நூறாண்டு சாதனை நிகழ்த்திவிட்டதாகப் புளுகி வருகிறது.  மோடி பாணியில், தனது இந்த சுயதம்பட்டத்தை அனைத்திந்திய அளவில், 50 கோடி ரூபாய் செலவில் நாளேடுகளில் முழுப் பக்க விளம்பரமாக அளித்து, கஜானாவைக் கொள்ளையடிக்கிறது.
இப்படிபட்ட இருண்ட கால ஆட்சியை போலீசைக் கொண்டுதான் மக்களின் கோபத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசிற்குத் தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறார், ஜெயா.  போலீசு துறையில் புதிதாக 13,320 பேரை நியமிக்க நடவடிக்கை; போலீசுக்கு 36,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க 337 கோடி ரூபாய் ஒதுக்கீடு; போலீசாரின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு; போலீசு நிலையங்கள் என்பதே வதை முகாம்கள் என அம்பலப்பட்டுப் போன பின்னும், அந்நிலையங்களை ஏதோ மக்கள் வசதிக்காக நவீனப்படுத்துவதாகக் கூறி, அதற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; இராணுவத்தினரைப் போல போலீசுக்கும் மது பாட்டில்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களை மலிவாக விற்கச் சிறப்பு அங்காடிகள் என இந்த ஓராண்டிற்குள் பல சலுகைகள் போலீசுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன.
இச்சட்டபூர்வ சலுகைகள் ஒருபுறமிருக்க, குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் போலீசு நடத்தி வரும் கொட்டடிக் கொலைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட எல்லா வகையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் போலீசைப் பாதுகாக்கும் திருப்பணியையும் செய்து வருகிறார், ஜெயா.
ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனைஉதாரணத்திற்குச் சொன்னால், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடந்த இருளர் இனப் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் ஒருபுறம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரண உதவி அளித்து விட்டு, இன்னொருபுறம் அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லை என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுக் குற்றவாளிகளான போலீசாரைக் காப்பாற்றி வருகிறது, ஜெயா அரசு.  போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ளத்தான் வேளச்சேரியில் ஐந்து வடமாநில இளைஞர்களைச் சுட்டுக் கொன்றனர் என சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தயாரித்து அளித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
தமிழக்தில் நடந்து வரும் திருட்டு, கொலைக் குற்றங்களை போலீசால் தடுக்க முடியவில்லை என்பதோடு, காக்கிச் சட்டை கும்பலே திருட்டுக் கும்பலாகச் சீரழிந்து போய் நிற்கிறது.  சென்னை மதுரவாயல் பகுதியில் குணாராம் என்ற அடகுக் கடைக்காரரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த ராமஜெயம், தான் கொள்ளையடித்த நகைகளை ஜெய்சங்கர் என்ற போக்குவரத்து போலீசின் வீட்டில்தான் பதுக்கி வைத்திருந்தான்.  போலீசு ராமஜெயத்தின் படத்தைத் தொலைக்காட்சியில் வெளியிட்டு, குற்றவாளி பற்றித் தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துவந்த சமயத்தில்கூட, ராமஜெயத்தைத் தனது வீட்டிலேயே பதுங்கிக் கொள்ளச் செய்து, அவன் மேலும் திருட்டுத் தொழிலைத் தொடருவதற்கும் உதவி வந்திருக்கிறான் ஜெய்சங்கர்.
முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் தமிழக போலீசு குற்றவாளிக் கும்பலைக் கண்டுபிடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, அக்கொலையைப் புலன் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் ராமஜெயத்தின் குடும்பத்தினர், உறவினர்களிடமிருந்து பெரிய அளவுக்குப் பணம் சுருட்டியதாகவும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு இளைஞனை மிரட்டியே பெரிய தொகையைக் கறந்து விட்டதாகவும் ஜூனியர் விகடன் (10.06.2012) கிசுகிசுச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
திருப்பூரில் நடந்த பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்நிதி நிறுவன உரிமையாளர்களை மிரட்டி, அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கோடிக்கோடியாகக் கறக்கத் திட்டம் போட்ட உயர் போலீசு அதிகாரிகள், இத்திட்டத்தை நிறைவேற்ற இரண்டு போலீசு ஆய்வாளர்கள், ஒரு துணை போலீசு துணைக் கண்காணிப்பாளரை இறக்கி விட்டனர்.  இதில் முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாய் வரை கைமாறியிருக்கிறது.  இவ்வழக்கு தொடர்பாக, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் தற்பொழுது கைது செய்யப்பட்டிருந்தாலும், பிரமோத் குமாரைக் காப்பாற்ற உயர் போலீசு அதிகாரிகளே முன்னின்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மில் தொழிலாளியான ராஜாவை ஒரு திருட்டு வழக்கு விசாரணை தொடர்பாக போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று, அவரை அவரது அண்ணன் அன்புச்செழியனின் கண் முன்னாலேயே அடித்துக் கொன்றது, திண்டுக்கல் நகர போலீசு.  இது, ஜெயா பதவியேற்ற பிறகு நடந்துள்ள இருபதாவது கொட்டடிக் கொலையாகும்.  இது பற்றி பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்த போலீசார், “விசாரணையில் கொஞ்சம் எசகுபிசகா ஆயிடுச்சு, அவ்வளவுதான்” என அலட்சியமாகக் கூறியுள்ளனர்.  ஜாடிக்கேத்த மூடி போல, கிரிமினல் ஜெயா கும்பலுக்கேற்ற  கிரிமினல் போலீசு!

கருத்துகள் இல்லை: