ஞாயிறு, 8 ஜூலை, 2012

Karnataka BJP யின் ஊழல் ராஜ்ஜியம் பாரிர்

பெங்களூரு:கர்நாடக முதல்வரான சதானந்த கவுடாவை மாற்றி விட்டு, புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமனம் செய்ய, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நீண்ட பிடிவாதத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
பா.ஜ., மேலிட உத்தரவை அடுத்து முதல்வர் பதவியில் இருந்து விலக சதானந்த கவுடா முடிவு செய்துள்ளார். புது முதல்வராக ஷெட்டர் பதவி ஏற்க உள்ளார்.
தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், முதன் முறையாக அமைந்த பா.ஜ., ஆட்சி, கவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக, பா.ஜ., மேலிடம், பல கட்ட ஆலோசனைக்கு பின்னர், கர்நாடக முதல்வரை மாற்ற நேற்று முடிவு செய்தது. இதற்காக டில்லியிலுள்ள, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி வீட்டில் நேற்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வரை மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. முதல்வர் சதானந்த கவுடாவை, டில்லி வருமாறு உத்தரவிட்டனர்.
மேலிடத்தலைவர்களின் அழைப்பையேற்று, நேற்று பகல் 12.30 மணியளவில் முதல்வர் சதானந்த கவுடா டில்லி புறப்பட்டு சென்றார்.கட்டுப்பாடு: டில்லியில் நிருபர்களிடம் சதானந்த கவுடா கூறியதாவது:பா.ஜ., மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டில்லி வந்துள்ளேன். மேலிடம் என்ன முடிவெடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். என்னால் எந்த தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, உடனடியாக வந்தேன்.அரசியல் குழப்பத்தால், கர்நாடக மாநிலத்தில் அபிவிருத்தி பணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் மேலிடம்உடனடியாக முடிவெடுக்க வேண்டும். கர்நாடகாவில், 123 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இதை கருத்தில் கொள்ள வேண்டும்.மேலிடம் பதவியில் நீடிக்க சென்னால் நீடிக்கிறேன். இல்லையென்றால் மேலிட உத்தரவுபடி நடக்கிறேன் என்றார்.
எதிர்ப்பு: சதானந்த கவுடா மாற்றப்படுவதற்கு, கர்நாடகா ஒக்கலிக சங்க தலைவர் கெஞ்சப்ப கவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ""முதல்வர் சதானந்த கவுடா என்ன தவறு செய்தார். எதற்காக அவரை மாற்ற வேண்டும். மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் முதல்வராகலாம்,'' என்று தெரிவித்தார்.

ஜெகதீஷ் ஷெட்டர் யார்:கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ள ஜெகதீஷ் ஷெட்டர், 1955ம் ஆண்டு பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கெரூர் என்ற கிராமத்தில் பிறந்தார். வர்த்தகம் மற்றும் சட்டம் பயின்ற இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.ஆரம்பத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட இவர், 1990ல் ஹூப்ளி தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 1996ல் மாநில பா.ஜ.க., செயலராக தேர்வு செய்யப்பட்டார். 1999ல் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இவர், 2005ல் மாநில பா.ஜ., தலைவரானார். 2006ல் கர்நாடகாவின் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார்.2008ல், பா.ஜ.,விலிருந்து சபாநாயகராக பொறுப்பேற்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார். 2009ல் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த இவர், எடியூரப்பா அமைச்சரவையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

கருத்துகள் இல்லை: