அமைச்சர் பதவி விவகாரம்: 'டமார்' ஆகப் போகும் எதியூரப்பா கோஷ்டி!
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருடைய நெருக்கடியையடுத்து சதானந்த கவுடா பாஜக மேலிடத்தின் உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சதானந்த கவுடாவை பதவியில் இருந்து நீக்க எதியூரப்பாவின் சார்பில் குரல் கொடுத்து வந்த பேலூர் கோபாலகிருஷ்ணா, பி. சுரேஷ் கவுடா மற்றும் பி.பி. ஹரீஷ் ஆகியோர் தங்களுக்கு ஜெகதீஷ் ஷெட்டரின் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் எதியூரப்பாவின் கூட்டணி உடையும் நிலையில் உள்ளது.
மேலும் எதியூரப்பாவுக்கு பக்கபலமாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் கே. ஷிவண்ணா கவுடா நாயக், எம்.பி. குமாரசாமி, எம். சந்திராப்பா, சி.சி. பாட்டீல், பிரதாப் கவுடா பாட்டீல் மற்றும் ஜி. கருணாகர ரெட்டி ஆகியோர் எதியூரப்பா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்களுக்கும் ஷெட்டரின் அமைச்சரவையில் இடமில்லை. இது தவிர எம்.எல்.சி. புட்டசுவாமியை கர்நாடக அரசில் சேர்க்குமாறு பாஜக மேலிடத்திற்கு எதியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை கடுப்பேற்றியுள்ளது.
புட்டசுவாமியை அமைச்சரவையில் சேர்ப்பது 3 முதல் 4 அமைச்சர்களைச் சேர்ப்பதற்கு சமம் என்று எதியூரப்பா மாநில மற்றும் மத்திய பாஜக தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதியூரப்பா மீதான ஊழல்கள் குறித்த ஆவணங்களை மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்களான தேவே கவுடா, குமாரசாமி மற்றும் ரேவண்ணா ஆகியோர் வெளியிட்டபோது அவர்கள் மீதான ஊழல்கள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு எதியூரப்பாவை காப்பாற்றியவர் புட்டசுவாமி.
இந்நிலையில் எதியூரப்பா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர் கருணாகர ரெட்டியின் வீட்டில் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் பெரும்பாலும் பெல்லாரியைச் சேர்ந்த 5 முதல் 6 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வரும் திங்கட்கிழமை மீண்டும் சந்தித்து பின்னர் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசவிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக