திங்கள், 5 டிசம்பர், 2011

Kushboo ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்

பால் விலை, பேருந்து கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன் இந்த கொலைவெறிம்மா? உங்களுக்கு வாக்களித்தற்காகவா என்று கேட்கிறார்கள் என்று நடிகை குஷ்பு திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் தி.நகர் பஸ் நிலையம் அருகே சில தினங்களுக்கு நடந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் குஷ்பு பேசுகையில்,
அம்மையார் ஜெயலலிதா சர்வாதிகாரி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துறாங்க. ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கை வைச்சாங்க. அதனால குழந்தைகள் எல்லாம் 3 மாதமாக பாடம் படிக்காம சும்மா பள்ளிக்கூடம் போனாங்க.
பசங்க படிப்பை 3 மாதம் கெடுத்தது போதாதென்று புத்தகங்களில் சில பக்கங்கள் மீது பேப்பரை ஒட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மறுபடியும் வேற பேப்பரை ஒட்டி ரூ.200 கோடிக்கு மேல் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த வீண் செலவை மிச்சப்படுத்தியிருந்தா பால் விலையை ஏற்றியிருக்க வேண்டாமே.
மக்களுடைய வரிப் பணத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை தலைவர் கருணாநிதி கட்டியதால் அவருக்கு பெருமை சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அந்த கட்டிடத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி, கோட்டைக்கு போனீங்க. புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத்தை உங்களால் நடத்த முடியாதா என்ன?, எல்லாம் வாஸ்து படு்ததுற பாடு. படிச்ச காலத்தில வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறீங்க.

அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை தான் பட்ஜெட் போடும். ஆனால் குடும்பத் தலைவிகள் மாதாமாதம் பட்ஜெட் போடுவாங்க. ரூ.1000க்கு வாங்கிய பால் தற்போது ரூ.1500 ஆகவும், ரூ.1300 ஆக இருந்த பஸ் கட்டணம் ரூ.1,800 ஆகவும் உயர்ந்துவிட்டது. 5,10 வேண்டும் என்று அக்கம்பக்கத்தில் வாங்கிவிட்டு அடுத்த மாசம் கொடுத்திடலாம். ரூ.200 தேவைப்பட்டால் சொந்தக்காரங்க, நண்பர்கள்கிட்ட கேட்கலாம். ஆனால் ரூ.2,000, 3,000 அல்லவா பட்ஜெட்டில் இடிக்கிறது. மாதம் ரூ.5,000, 6,000 சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் எங்க போறது?.

குழந்தைகளுக்கு ஒரு வேலை சோறு கொடுக்க முடியாட்டியும் பால் கொடுத்து தூங்க வைக்கலாம். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தாய்மார்கள் கண்ணீர் அதுவும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க. வெளியே போயிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கள் ஒரு டம்ளர் காபி கேட்க பயப்படுகிறாங்க. அதற்கு காரணம் ஜெயலலிதா அம்மையார் தான். அவங்களுக்கு என்ன ஏசி வண்டில சுத்திக்கிட்டு, கொடநாடு போய் ஜாலியாக இருப்பாங்க. கஷ்டப்படுவது எல்லாம் தமிழக மக்கள் தான்.

அந்த அம்மையார் கர்நாடக நீதிமன்றத்திற்கு போய் 1,400 கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு வந்தாங்க. ஆனால் தமிழக மக்கள் அந்த அம்மாவைப் பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்த அம்மா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள். பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.

அந்த அம்மாவைப் பார்த்து தமிழக மக்கள் ஏன் எங்களை இப்படி பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியைத் தான் கேட்கிறாங்க. நாங்களும் அதைத் தான் கேட்கிறோம்.

பொய் வழக்கு போட்டு திமுகவினரை கைது செய்து அவர்கள் மீது மேல் மேலும் பல வழக்குகளைப் போடுறீங்க. எல்லாம் பொய் வழ்ககுகள். கடந்த 6 மாதமா இதைப் பார்த்து பார்த்து தமிழக மக்களுக்கும் போர் அடிச்சிடுச்சு.

தினமும் காலையில எழுந்து பேப்பரைப் பார்த்தா யாராவது திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பாங்க. அதைப் படிக்கும் மக்கள் இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லையான்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு வேலை எதுவும் இல்லைன்னு தான் நானும் நினைக்கிறேன்.

காலை எழுந்து காபியைக் குடிச்சதும் இன்றைக்கு யாரை கைது செய்யலாம், என்ன பொய் வழக்கு போடலாம் என்று தான் நினைக்கிறாங்க.

கருணாநிதி ஆட்சியில் நிம்மதியா, சந்தோஷமா இருந்த தமிழக மக்கள் அந்த அம்மா ஆட்சியில் கண்ணீர் வடிக்கிறாங்க. ஏன் இந்த கொலைவெறி?- இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.

ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிமா என்று கேட்கிறாங்க. ஏன் இப்படி மக்களை பழிவாங்குகிறீங்க என்று நான் ஒரு அதிமுகவைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 1996, 2006 தேர்தல்களில் எங்களுக்கு வாக்களிக்காததற்கு பழிவாங்க வேண்டாமா என்றார். பழிவாங்குறத்துக்கா மக்கள் வாக்களித்தனர்.

நீங்கள் எல்லாம் கருணாநிதி ஆட்சியில் அனைத்தையும் பார்த்ததால் ஒரு மாற்றம் வேண்டி அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க. மாற்றம் வேண்டியவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். அந்த அம்மா தேர்தல் நேரத்தில எவ்வளவு பொய் சொன்னாங்க. அத தர்றேன், இத தர்றேன், அத செய்வேன், இத செய்வேன்னு ஏதாவது செய்தாங்களா. இந்த 6 மாதத்தில் மக்களுக்கு உதவுகிற மாதிரி ஏதாவது ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா?.

காவல்துறை மேலிடத்து உத்தரவுபடி திமுகவினரை கைது செய்வதில் பிசியாக இருக்கு. அதனால் மக்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நேரமில்லை.

வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது போல கருணாநிதி ஆட்சியின் அருமையை மக்கள் தற்போது தான் உணர்கின்றனர். தலைவரின் அருமை, பெருமையை மக்கள் உணரக் காரணமா இருக்கும் அதிமுகவுக்கு நன்றி.

இந்த அம்மா சமீபத்தில் தான் கொடநாடு போனாங்க, இப்ப ஏன் மீண்டும் போகனும். கருணாநிதி என்னைக்காவது லீவு எடுத்துக்கிட்டு எங்காவது போனாரா? 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் அவர் தான்.

பம்பரம் கூட சாட்டை இருந்தால் தான் சுத்தும். ஆனால் நம்ம தளபதி பதவி என்னும் சாட்டை இல்லாமலே தமிழகத்தை சுற்றி வருகிறார். யாருக்காக, எல்லாம் மக்களுக்காக.

புத்திசாலித்தனமா உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு வரியை ஏத்திட்டாங்க. அதுவே முன்னாடி செய்திருந்தா ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது. பெரிய புத்திசாலின்னு நெனப்பு. ஆனால் தமிழக மக்கள் கேள்வி கேட்கப் போகிறார்கள். அந்த நேரம் கூடிய சீக்கிரம் வரும். அதற்காக 5 வருஷம் காத்திருக்க வேண்டாம்.

கஷ்டத்தில் இருக்கையில் குரல் கொடுத்தா உதவ கோபாலபுரம் இருக்கு. கஷ்டத்தில் ஆறுதல் தரும் ஆலயம் போல அண்ணா அறிவாலயம் என்னைக்குமே இருக்கு. நம்ம தலைவரும், தளபதியும் மூச்சிருக்கும் வரை தமிழக மக்களை கைவிடமாட்டார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: