சனி, 10 டிசம்பர், 2011

தமிழ் திரை உலகம் இன்னும் கேரளாவை கண்டிக்க முன்வரவில்லை

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வேண்டுமென்றே தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ள கேரள அரசைக் கண்டிக்கும் வகையில் மலையாள நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இங்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
அரசியல் கட்சிகள், முல்லைப் பெரியாறு அணை காக்க களமிறங்கியுள்ள உணர்வாளர்கள் பலரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தமிழர், மலையாளி என்ற பேதமின்றி இதுநாள் வரை வாழ்ந்து வந்தவர்கள் இன்று பிரிந்து நின்று அடித்துக் கொள்ளும் நிலையை கேரள அரசு உருவாக்கியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க முயற்சிக்கிறது.
இந்த அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் பறிபோகும் சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கடந்து ஒருமித்த மனதோடு தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உணவுக்கு, பிழைப்புக்கு, வர்த்தகத்துக்கு என பல வழிகளிலும் சரி பாதி தமிழகத்தை மட்டுமே நம்பியுள்ள கேரளா, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையில் 120 அடிமட்டுமே தண்ணீர் தேக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இப்படி அனைத்து வகையில் அடாவடித்தனம் செய்யும் கேரளாவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்களும் மலையாளிகளுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் மலையாள சினிமா நடிகர் நடிகைகளுக்கு இனி வாய்ப்பளிக்கக் கூடாது என்று கோஷத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

"மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகம்தான் வாழ வைக்கிறது. இங்குள்ள படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், காவ்யா மாதவன், ஜோதிர்மயி, கோபிகா மற்றும் தற்போது முன்னணி நடிகையாகி உள்ள அமலாபால் மேலும் பல புதுமுக நடிகைகள் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர்கள்.

கேரள நடிகர்களும் தமிழ் படங்களில் நடிக்கின்றனர். தமிழ் நடிகர், நடிகைகள் முல்லை பெரியாறு பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். ஆனால் மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ் உள்ளிட்ட பலர் எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்கள் தமிழ் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

கேரள வணிக நிறுவனங்கள் அவற்றின் விளம்பர படங்களிலும் தமிழ் நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து விற்பனையை பெருக்கி வருகின்றன. அந்த படங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்காமல் புறக்கணிக்க வேண்டும்," எனறு வலியுறுத்தியுள்ளது இந்து மக்கள் கட்சி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை

மேலும், முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கேரளாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைக்கும் தமிழ்ப் படங்களில் வாய்ப்பு அளிக்கக் கூடாது என முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழு தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மற்ற விஷயங்களில் போராட, கருத்து தெரிவிக்க முதலில் ஓடி வரும் தமிழ் சினிமாக்காரர்கள், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில கேரளாவைக் கண்டிக்க முன்வராததற்கு இந்தக் குழு கண்டனமும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: