திங்கள், 5 டிசம்பர், 2011

இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணம்

88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் காதல் மன்னன், எவர்கிரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தேவ் ஆனந்த். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தேவ் ஆனந்த்தை மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் அழைத்து வந்திருந்தனர். அங்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் உயிர் பிரிந்தபோது மகன் சுனில் உடன் இருந்தார்.
1946ம் ஆண்டு ஹம் ஏக் ஹெய்ன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தேவ் ஆனந்த்.
பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு வெளியான ஸித்தி படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட்டாகின.
பேயிங் கெஸ்ட், பாஸி, ஜூவல் தீப், சிஐடி, ஜானி மேரா நாம், அமீர் காரிப், வாரன்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ் ஆகியவை தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும்.

2001ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2002ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருதும் அளித்துக் கெளரவிக்கப்பட்டார் தேவ் ஆனந்த்.  Read:  In English
1949ம் ஆண்டு நவ்கேதன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி 35க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார் தேவ் ஆனந்த். 2 முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார் தேவ் ஆனந்த்.

தேவ் ஆனந்த்துடன் பிறந்த இரு சகோதரர்களான சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோரும் கூட திரைத் துறையில் பிரபலமானவர்கள்தான். இவரது சகோதரி ஷீல் காந்தா கபூரின் மகன்தான் பிரபல இயக்குநர் சேகர் கபூர் ஆவார்.

கருத்துகள் இல்லை: