வியாழன், 8 டிசம்பர், 2011

கனிமொழி குரலில் தொனித்த லேசான கேலியைக் கவனித்தார் தயாநிதி!


தி.மு.க.-வுக்குள் நடைபெறும் பவர் பாலிட்டிக்ஸ் மாறன் சகோதரர்களை திகிலடைய வைத்திருக்கின்றது. கட்சிக்குள் தமது செல்வாக்கு இறங்குமுகமாகப் போய்க்கொண்டு இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். கட்சி பின்னணியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று காலாநிதி மாறன் ஒதுங்கிக்கொள்ள தயாராக இருந்தாலும், தயாநிதியால் அப்படி இருக்க முடியாது.
தயாநிதி தொடர்ந்து டில்லியில் அரசியல் செய்வதற்கும் கட்சி பேக்ரவுண்டு தேவை, ஒருவேளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கினாலும், அதிலிருந்து தப்ப முயற்சிப்பதற்கு கட்சிப் பலம் தேவை!

ஜாமீன் கிடைத்தபின் முதல் தடவையாக டில்லியில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மட்டுமல்ல, மாறன் சகோதரர்களும் பங்கேற்கவில்லை. அழகிரி வராததற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. ஆனால் மாறன் சகோதரர்கள் விவகாரம் அப்படியல்ல.
அன்றைய தினம், தயாநிதி டில்லியிலும், கலாநிதி சென்னையிலும் இருந்தனர். மிகப் பரபரப்பான கட்சி நிகழ்வுகளில் கலாநிதி அவ்வளவாக தலையைக் காட்டுவதில்லை. ஆனால், தயாநிதி அப்படியான ஆளல்ல. கட்சி தொடர்பான சாதாரண நிகழ்வுகளிலும் சென்ட்டர்-ஆஃப்-அட்ராக்ஷனாக தன்னைக் காட்டிக் கொள்வது அவரது வழக்கம்.
முன்பென்றால், டில்லியில் இருந்து அதே விமானத்தில் தயாநிதியும் வந்து இறங்கி அசத்தியிருப்பார். அது கனிமொழிக்காக அல்ல, கட்சியின் தலைவரில் இருந்து முக்கிய தலைகள் அனைவரும் ஒன்றாக இருக்கும் இடத்தில், தானும் நடுநாயகமாக நின்றிருப்பார். ஆனால், டில்லியில் இருந்து கனிமொழியுடன் தாயார் ராசாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகியோர் வந்தனர்.
தயாநிதி வராமல் ஒதுங்கிக் கொண்டார்.
டில்லியில் கனிமொழி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, வரவேற்கச் சென்றவர்களில் தயாவும் அடக்கம். கனிமொழிக்கு பொன்னாடை கொடுத்து வரவேற்றார் அவர். அப்போதே கனிமொழி அவரிடம் பேசிய ஓரிரு வார்த்தைகளில் லேசான கேலி இருந்ததை அருகில் நின்றவர்கள் கவனித்தார்கள். அதன்பின் தாமாகவே ஒதுங்கிக் கொண்டார் தயாநிதி.
சென்னைக்கு கனிமொழி வந்தபின் கொடுக்கப்பட்ட வரவேற்பு, கட்சிக்குள் அவருக்கு பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் எல்லாமே தயாநிதியை திகிலடைய வைத்திருக்கும். காரணம், தி.மு.க.-வுக்குள் ஸ்டாலின் அணி, அழகிரி அணிக்கு அடுத்தபடியாக லோக்கலில் சிறிய அணியாக தயாநிதி ஆதரவாளர்கள் இருந்தனர். டில்லியில் மற்றைய இருவர் ஆதரவு அணியைவிட தயாநிதி ஆதரவு அணி பெரியதாக இருந்தது.
கனிமொழிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால், லோக்கலில் தயாநிதி அணி 4-வது இடத்துக்குப் போகும். டில்லியில் முழுமையாக செல்வாக்கு இழக்கும்.
இப்போது புரிகிறதா அவரது திகிலின் காரணம்? கட்சிக்குள் கனிமொழியின் கிராஃப் எந்தளவுக்கு ஏறுகின்றது என்பதை கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கருத்துகள் இல்லை: