வியாழன், 8 டிசம்பர், 2011

சென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்


Malayalam Manorama
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கேரளாவிற்கு பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்பதை முன்னிறுத்தி கேரள அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் தமிழக – கேரள எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு ஏற்றார்போல நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை அண்ணாநகரில், மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் உள்ள செய்தித்தாள்களை விநியோகிக்கும் 24 கடைகள், இந்த அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டம்

கேரள அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று மட்டும், மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியதாக, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகர் முழுவதும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, மற்ற செய்தித் தாள் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: