வியாழன், 8 டிசம்பர், 2011

ஈவ்டீசிங் +2 மாணவியை கார் ஏற்றிக் கொன்ற மருத்துவ கல்லூரி மாணவர் கைது

நெல்லை: ஈவ்டீசிங் பிரச்சனையால் சைக்கிளில் சென்ற +2 மாணவி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகள் மைமூன் சர்மிளா(17). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சைக்கிளில் மைமூன் சர்மிளா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மைமூன் சர்மிளாவின் சைக்கிள் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மைமூன் சர்மிளா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டியவர் ஒரு கல்லூரி மாணவன் என்பது தெரிய வந்தது.
இந்த தகவலை அறிந்த மைமூன் சர்மிளா படித்து வந்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தனியார் மருத்துவமனை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவனை உடனடியாக கைது செய்யக் கோரி சாலை மறியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பள்ளி மாணவ, மாணவியர் அங்கே முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி மாணவ, மாணவியர் சார்பாக கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவி மைமூன் சர்மிளா சென்ற சைக்கிளின் மீது ஒரு கல்லூரி மாணவர் காரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் மைமூன் சர்மிளா படுகாயமடைந்து இறந்துவிட்டார். தற்போது தலைமறைவாகி உள்ள அந்த கல்லூரி மாணவர் சர்மிளாவை பல நாட்களாக பின் தொடர்ந்து வந்து கிண்டல் செய்தவர்.
சம்பவத்தன்று புதிய காரில் வந்த அந்த மாணவர் வழக்கம் போல சர்மிளாவை கிண்டல் செய்தார். அதில் பயந்து போன சர்மிளா, சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது அந்த மாணவர் சர்மிளாவின் சைக்கிள் மீது காரை மோதவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சர்மிளா இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, அந்த மாணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்மிளா மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் மானூரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர் மானூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகன் மோனீஸ் ரேஷர்(19) என்பதும், அவர் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து மோனீஷ் ரேஷரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறியதாவது,
பள்ளி மாணவ, மாணவியர் அளித்த புகாரின் பேரில் விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை: