ஞாயிறு, 4 டிசம்பர், 2011

வேலைக்கார பெண் எரித்துக் கொலை இளம் பெண்ணுக்கு ஆயுள் சிறை


சென்னை, : வீட்டில் வேலை செய்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை சூளைமேடு சங்கராபுரம் தெருவில் வசிப்பவர் சுதீர் பல்சந்தானி. இவரது மனைவி பிரியா (32). இவர்களது வீட்டில் பரமேஸ்வரி என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம். ஆனால் சம்பளத்தை சரியாக கொடுப்பது இல்லையாம். இந்நிலையில், பிரியாவிடம் வாங்கிய 15 ஆயிரம் ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் பரமேஸ்வரி சிரமப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படும்.

இந்நிலையில், கடந்த 2008 செப்டம்பர் 15ம் தேதி பிரியா வீட்டில் இருந்து தீக்காயத்துடன் பரமேஸ்வரி அலறியுள்ளார். இதைக்கேட்ட பக்கத்து வீட்டினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரி கொடுத்த மரண வாக்குமூலத்தில், ‘‘பிரியா, என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டார்ÕÕ என்று கூறினார்.
இதையடுத்து பிரியா மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு, சென்னை 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ராஜகோபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் பிரபாவதி ஆஜரானார். வழக்கில், பரமேஸ்வரியின் மகன் உள்ளிட்டோர் சாட்சியளித்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.  தீர்ப்பில் ‘‘குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பிரியாவுக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறதுÕÕ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை: