வெள்ளி, 9 டிசம்பர், 2011

தமிழகம் முழுவதும் கேரளாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது- சென்னையில் மீண்டும் தாக்குதல்

சென்னை: கேரளாக்காரர்களின் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்கிறது. ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் பயன்படுத்தி கேரளாவில் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் கடைகளைத் தாக்கியும், தமிழக ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும்,வாகனங்களைத் தாக்கியும் விஷமிகள் அட்டகாசம் செய்தனர். இதற்கு உச்சமாக தமிழகப் பெண் தொழிலாளர்களை சேலைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட கேரள எல்லையையொட்டியுள்ள தமிழகப் பகுதிகள் கொந்தளித்து விட்டன.
இங்கு கேரளாக்காரர்களின் கடைகள், வாகனங்கள் தாக்கி நொறுக்கப்பட்டன. தோட்டங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

அங்கு கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மக்களிடையே பெரும் கோபமும் நிலவி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குமுளி வழியான போக்குவரத்தும் முற்றிலும் தடைபட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட எந்த வாகனமும் கேரளாவுக்குப் போகவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் கேரளத்தவரின் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவை தாக்கி நொறுக்கப்பட்டன. இதை கேரள மக்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக கேரளாவில் வசிப்போர் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் முதல் முறையாக கேரளத்தவரின் நிறுவனங்கள் மீது நடந்த தாக்குதல் இது என்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்தே கேரள காவல்துறை விழித்தெழுந்து தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இயல்பு நிலைக்கு முயற்சி செய்தது.

இதனால் தமிழகத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் தாக்குதல் விவகாரம் சற்றே ஓய்ந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கு சிற்சில சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

சென்னையில்

சென்னையில் நேற்று மாலை, பெரம்பூர், மூலக்கடையில் கேரளாக்காரர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாயின. பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள கேரள நிதி நிறுவனம் மீது ஆட்டோவில் வந்த கும்பல் கல்வீசி தாக்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கடை சந்திப்பில் கேரளாக்காரர்களால் நடத்தப்பட்டு வரும் எவரெஸ்ட் பேக்கரி மீதும் ஆட்டோவில் வந்த கும்பல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது.

இதில் கடையின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பெரியார் காய்கறி அங்காடியில் கேரளாக்காரரின் டீக்கடை உள்ளது. இன்று காலை அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் டீக்கடையில் போடப்பட்டிருந்த மேஜையை கைகளால் தட்டியவாறு கடையை மூடச்சொல்லி மிரட்டியது. தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் மிரட்டல் விடுத்தவர்கள் போய் விட்டனர்.

திருப்பூரில்

திருப்பூர் காலேஜ் ரோடு கார்னர் பகுதியில் கேரளாவை சேர்ந்த சாய்லூதீன் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த 4 பேர் பேக்கரியை அடைக்கும் படி கூறினார்கள். ஆனால் சாய்லூதீன் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பேக்கரி மீது கல்வீசி தாக்கினார்கள். சாய்லூதீனையும் அடித்து உதைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் தாக்குதலில் ஈடுபட்ட பெரியசாமி, முருகானந்தம், ரகுபதி, ரகுமான் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் மற்றும் பல்லடம் ரோட்டில் உள்ள கேரளாக்காரர்களின் பேக்கரி மீதும் கல்வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கேரள கடைகள் அடைக்கப்பட்டன.

கோவையில் பஸ்கள் மீது கல்வீச்சு

கோவையில் மதுக்கரை மற்றும் குனியமுத்தூர் பகுதியில் கேரள பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடை பெற்றது. பாலக்காட்டில் இருந்து கோவை வந்த இந்த பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கேரள பஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

காரைக்குடியில் முத்தூட் பைனனான்ஸ் மீது தாக்குதல்

இதற்கிடையே, காரைக்குடியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை சிலர் கல்வீசித் தாக்கினர். அதில் அலுவலக கண்ணாடிகள் உடைந்து சிதறின. தாக்குதல் நடத்தியவர்கள் பின்னர் தப்பி ஓடி விட்டனர்.

கருத்துகள் இல்லை: