திங்கள், 5 டிசம்பர், 2011

ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் தஞ்சாவூர்

தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: