திங்கள், 5 டிசம்பர், 2011

FDI சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம்

அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி, தள்ளு வண்டியில் காய்கறி விற்று, மாலை வட்டியும் முதலுமாகத் திருப்பிச் செலுத்தி, பிழைப்பு நடத்தி வரும் தள்ளு வண்டி வியாபாரிகள் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிமார் வரை பலர் சில்லறை வியாபாரிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம் இருக்கிறது. இதனைத்தான் குறி வைத்து வருகிறது அந்நிய நேரடி மூலதனம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தும், உலக வங்கியில் பணியாற்றியும் அனுபவம் பெற்றவர் மன்மோகன். பகீரதப் பிரயத்தனம் செய்தும் இது நாள் வரை விலைவாசி உயர்வை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய தாராளமயக் கொள்கைகளின் விளைவால் ஏழைப் பணக்காரன் இடைவெளி உயர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வேளாண்மை நெருக்கடி முற்றிக் கொண்டு வருகிறதே தவிர குறைப்பதற்கான மருந்து பிரதமரிடம் இல்லை. போதாக்குறைக்கு ஊழல்களின் உச்சகட்ட தாண்டவம் வேறு. இதிலெல்லாம் கவனம் செலுத்த முடியவில்லை ஆனால், அந்நிய நேரடி முதலீடு மட்டும் வேண்டுமாம்!

இது ஒன்றும் சாதாரணமான திட்டமல்ல, ஏகப்பட்ட நன்மைகளைக் கொண்டுவரப்போகும் திட்டம் என்று நீட்டி முழக்குகிறது மத்திய அரசு. அடுத்த மூன்றாண்டுகளில், பத்து லட்சம் வேலைவாய்ப்புகள். விவசாய விளைப் பொருள்களுக்கு லாபகரமான விலை. வேளாண்மை அங்காடியில் இடைத்தரகர் நீக்கம். வெளிநாட்டு சில்லறை வர்த்தக முதலாளிகள் குறைந்தது நூறு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்பதால், இந்த முதலீட்டில் பாதிப் பணத்தையாவது வேளாண்மைத் துறை உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும். இதன் மூலம், அறுவடைக்குப் பிறகு வீணாய்ப் போகும் தானியங்களின் அளவு குறையும்.
மத்திய அரசு சொல்லும் காரணங்களை ஒருபக்கம் நகர்த்தி வைத்துவிட்டு, விஷயத்தை ஆராய்வோம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நன்மையா, தீமையா என்று பட்டிமன்றம் வைக்காமல், உலக அனுபவத்தைப் பரிசீலிப்போம். அந்நிய பகாசுரக் கம்பெனிகளால் சில்லறை வர்த்தகத்தில் சீரழிந்த சில சாட்சிகளை மட்டும் சுருக்கமாக முதலில் காண்போம்.
பங்கு வர்த்தகத்துக்கு வால் ஸ்ட்ரீட் புகழ் பெற்று இருப்பது போல, சில்லறை வர்த்தகத்துக்குப் புகழ்பெற்றது வால்மார்ட். இது ஓர் அமெரிக்க நாட்டு வர்த்தக நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதலீடு எவ்வளவு எனத் தொரியவில்லை. 2007ல் இதன் வருமானம் மட்டும் 379 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒரு டாலர் என்பது தற்போதைய மதிப்பில் 52 ரூபாய். இந்திய மதிப்பில் வருவாய் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த நிறுவனம்தான் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி காய்கறி வியாபாரம் செய்யும் சில்லறை வியாபாரிகளுடன் போட்டியிட வருகிறது.
வால்மார்ட் அமெரிக்காவிலேயே ஏற்படுத்திய தாக்கத்தைப் பாருங்கள். ‘கிராமப்புற சமுதாயத்தின்மீது வால்மார்ட் வர்த்தகம் ஏற்படுத்திய தாக்கம்’ என்பது அந்த ஆய்வின் பெயர். அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி இந்த ஆய்வை நடத்தியுள்ளது. வால் மார்ட் தனது வர்த்தகத்தை விஸ்தரிக்கத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே 34 நகரங்களில் 2 விழுக்காடு விற்பனை சரிவு மற்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் 47 விழுக்காடு சில்லறை விற்பனை வர்த்தகத்தை வால்மார்ட் கபளீகரம் செய்தது. சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு சரிபாதி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சாதாரண சில்லறை விற்பனை நிறுவனங்கள் என்பது சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளைவிடப் பன்மடங்கு பெரியவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வால்மார்ட் நுழைவால் இதர சில்லறை விற்பனை நிறுவனங்களின் வியாபாரம் சரிபாதியாக குறைந்தது மட்டுமின்றி சில்லறை விற்பனைத் துறையில் வேலைவாய்ப்பையும் பாதித்தாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது. சில்லறை விற்பனை அங்காடிகளில் வேலை செய்தவர்களின் வருமானம் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலரில் தொடங்கி 1.4 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,50,000 பேர் இதனால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.
இந்திய நாட்டின் சில்லறை வர்த்தகம் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு திறந்துவிடப்பட்டால், அதில் வால்மார்ட் மட்டும் நுழையப்போவதில்லை. அதைவிட பலம் பொருந்திய நெதர்லாந்து நாட்டின் அஹோல்ட் (Ahold), பிரான்ஸ் நாட்டின் கேரிஃபோர் (Carrefour) ஜெர்மன் தேசத்தின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ போன்ற நிறுவனகளும் சேர்ந்தே வரப்போகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ் போன்ற இந்தியப் பெருநிறுவனங்களால் சில்லறை விற்பனை வியாபாரிகள் தள்ளாட்டத்தில் உள்ளார்கள். இந்நிலையில், ரிலையன்ஸையே மிரட்டும் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்ள் சில்லறை வர்த்தகத்தைத் தொடங்கினால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நான்கு கோடி பேருக்கு வாழ்வளிக்கும் சில்லறை வர்த்தகம், இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 முதல் 11 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இதில் 97 விழுக்காடு முறை சாரா வர்த்தகம். இவர்கள் காலங்காலமாக சில்லறை வர்த்தகம் செய்து வருபவர்கள். இவர்களில் கைவினைஞர்களும் அடக்கம்.சில்லறை வர்த்தகம் தவிர வேறு ஒன்றும் அறியாத இவர்கள் இனி எப்படி வாழப் போகிறார்கள்?
அந்நிய நேரடி மூலதனத்தால் விலைவாசி (பணவீக்கம்) குறையும் என்ற கூற்றும் உண்மை அல்ல. உள்ளூர் சந்தையில் உள்ள சில்லறை விற்பனைப் போட்டியே விலையைக் குறைக்கக் காரணமாக உள்ளது. உதாரணம், ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், பெரும் முதலீட்டில் செயல்படும் பழமுதிர் நிலையங்கள் ஆகியவை. இவர்களால் ஒப்பீட்டு அளவில் சில பொருள்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. வால்மார்ட் போன்ற பகாசுரக் கம்பெனிகள் நிறுவப்படும் நகரங்களில் பெருவாரியான சிறு, குறு, நடுத்தர, பெரிய உள்நாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் நிர்மூலம் ஆகிவிடும் என்பதே உண்மை. ஒரே ஒரு விற்பனையாளன் என்ற நிலையில் விலை நிலவரம் மிக மிக அதிகபட்சமாகவே இருக்கும். இன்று இருப்பதைவிட பன்மடங்கு விலைவாசி உயர்வு ஏற்படும் என்பதே உண்மை.
வேளாண்மைத் துறையில் இடைத் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று கூறுவதும் ஒப்பனையே. அந்நிய பகாசுரக் கம்பெனிகள் விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல் செய்யும் என்பது உண்மைதான் என்றாலும் இடைத்தரகர்களின் பங்கையும் அந்நியக் கம்பெனிகளே எடுத்துக் கொள்ளும் என்பதை கவனிக்கவேண்டும். விவசாயிகளுக்குத் தற்போது கிடைத்து வரும் வருவாயை விட குறைவாகவே கிடைக்கும். காரணம், ஒரு சில மிகப்பெரும் நிறுவனங்களே சந்தையில் இருப்பார்கள். விவசாயிகளிடம் ஒப்பந்த வாணிபம்கூட செய்வார்கள். விவசாய விளைபொருள்களுக்கு, விவசாயிகள் கோரும் விலை கிடைக்காது. பன்னாட்டு கம்பெனிகள் மட்டுமே பொருள்களை வாங்கும் என்பதால், அவர்கள் சொல்லும் விலைக்கு விற்காவிட்டால், விற்பனைக்கு வேறு மார்க்கம் இல்லை. வாங்க வேறு ஆள் இல்லை என்ற நிலை வந்தால், அடி மாட்டு விலைதானே!
அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் வேளாண் விளைபொருள்கள் வீணாவது தவிர்க்கப்படும் என்று கூற்றில் மட்டும் உண்மை உண்டு. ஆனால் அதனால் நமது விவசாயிகளுக்கு லாபம் இல்லை. இந்த உபரியின் பெரும் பங்கு பன்னாட்டு கம்பனிகளுக்கே செல்லும். நம் நாட்டில் உள்ள பல கூட்டுறவு வேளாண்மை அங்காடிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.
சில்லறை விற்பனைத் துறையில் அந்நிய முதலீடுகள் வருகையில் உள்நாட்டு சில்லறை வர்த்தகமும் அதனை நம்பியுள்ள நான்கு கோடி மக்களின் குடும்பங்களும் முற்றாக சீரழியும். வேலையின்மை அதிகரிக்கும். நமது நாட்டு சந்தை முறையும் சீரழியும். விவசாயிகள் முன்னிலும் கொடூரமாகச் சுரண்டப்படுவார்கள். இந்திய வேளாண்மையின் சாகுபடி முறை, விளையும் பயிர்களின் அளவு என எல்லாம் தலைகீழாக மாற்றி அமைக்கப்படும். வெளிநாடுகளில் மட்டும் அல்ல, சொந்த மண்ணிலேகூட பன்னாட்டு சில்லறை விற்பனை நிறுவனங்களால் பாதிப்புதானே தவிர நன்மை ஏதுமில்லை.
இத்தகையை அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் அடம்பிடிக்கிறார். மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதம அமைச்சர் என்றாலும், ஜனநாயாக வழிமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர். ஜனங்களைச் சந்தித்து ஓட்டு வாங்கி ஜெயிக்காமலே நிதிமந்திரியாக இருந்தவர். பிரதமராகவும் தொடர்பவர். மக்கள் என்ன சொன்னாலும், எதிர்க் கட்சிகள் என்ன கூச்சல் போட்டாலும் காதில் வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு ஏட்டுக் கல்விமீது மட்டுமே நம்பிக்கையுள்ளவர். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் இந்த மாதிரிதான் அடம்பிடித்தார். காங்கிரஸ் கட்சியே ஒத்துக்கொண்டாலும் நான் மாட்டேன் என்ற கதியில் செயல்பட்டார். இவ்வளவு பெரிய ஊழல்களுக்குப் பிறகும் பதவியைத் தூக்கி எறியாதவர், இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இயலாவிடில் ராஜினாமா செய்து விடுவேன் என்று மிரட்டியவர். அந்நிய நேரடி மூலதனம் கூடவே கூடாது என நாடே கொந்தளிக்கும் போதும், விட்டுக்கொடுக்காமல் அடம்பிடிப்பவர். யதார்த்தமான மக்கள் வாழ்க்கையை விட தனது பொருளாதார அறிவு பெரியது என்பதுதான் அவர் நம்பிக்கையா? அல்லது அமெரிக்க சேவகத்தின் வெளிப்பாடா?
நமது நாட்டு மக்களின் வாழ்வை, விவசாயத்தை, வேலையைக் காப்பதில் அவர் வேண்டுமானால் அக்கறையில்லாமல் இருக்கலாம். மக்களாகிய நாம் அப்படி இருக்க முடியாது. சில்லறை வர்த்தக உரிமையை காக்க டிசம்பர் 1ம் தேதி களம் கண்ட அனைவரும் தேசபக்தர்கள். மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் தேசபக்த கடமையை சரிவர செய்ய முன்வந்துள்ளது. மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு எவ்வளவு அடம்பிடித்தாலும் பணிய வைக்க வேண்டியது நம் கடமை.
0
முனைவர் நா. மணி
(கட்டுரையாளர், ஈரோடு கலைக் கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியர்).

கருத்துகள் இல்லை: