வெள்ளி, 9 டிசம்பர், 2011

சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு

திருச்சி : திருச்சி பெண் டாக்டர் கொடுத்த மோசடி புகார்களின் மீது நீதிமன்ற உத்தரப்படி, தமிழக சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி குமரன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராணி (46). இவர் கடந்த நவம்பர் 11ம் தேதி திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4ல் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி, தன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். என்னிடம் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், என் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.
அதனால், போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் புஷ்பராணி, டாக்டர் ராணியின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி டிசம்பர் 9ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

கோர்ட் உத்தரவுபடி, நேற்று போலீசார் அமைச்சர் பரஞ்சோதி அவரது கார் டிரைவர்கள் சம்பத் (25), குமார் (27) ஆகிய 3 பேர் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 6ம் தேதியே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டதாக எப்ஐஆர் பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளது. டாக்டர் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் பரஞ்சோதி மீது போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆர் விவரம்: எனது முதல் கணவர் ராய் தங்கபாண்டியன் என்பவர் மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அதன்பிறகு அவர் பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மெடிக்கல் போர்டு சேர்மனாக பரஞ்சோதி இருந்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி சென்னை தேவி கருமாரியம்மன் கோயிலில் 2வது மனைவியாக எனக்கு தாலி கட்டினார்.

திருமணம் முடிந்ததும் நான் என் வீட்டிற்கும், பரஞ்சோதி அவர் வீட்டிற்கும் சென்றுவிட்டோம். அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்வோம். கடந்த 2010ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தாயனூர் சந்தை அருகே உள்ள இடத்தை ராமமூர்த்தி என்பவரிடம் இருந்து பரஞ்சோதி வாங்கினார். இதற்குரிய பணம் 2.5 லட்சம் ரூபாயை நான் தான் கொடுத்தேன். பின்னர் அந்த இடத்தை எனது பெயருக்கு தானமாக கொடுத்து விட்டார்.

இந்த நிலையில், எனக்கும் பரஞ்சோதிக்கும் 12.2. 2010ல் தகராறு ஏற்பட்டது. சிறிது காலம் பேசாமல் இருந்த அவர் மீண்டும் 15.9.2010ல் சமாதானமாக பேசி நாம் சேர்ந்து வாழ்வோம் என உறுதி மொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.  அதன்பேரில் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித் தோம். நடந்து முடிந்த 2011 சட்டசபை தேர்தல் சமயத்தில் அவருக்கு சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் இருந்து பணத்திற்கு பதிலாக 60 பவுன் நகை களை பெற்றுக் கொண் டார். இந்த நிலையில் 2011 ஏப்ரல் 25ம் தேதிக்கு பிறகு என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இது குறித்து கேட்டதற்கு உனக்கு பணம் நகைகள் எல்லாம் தரமுடியாது. தொடர்ந்து  தொல்லை கொடுத்தால் காரை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

இது குறித்து நான் 20.7.2011ல் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் செய்தேன். பரஞ்சோதியின் டிரைவர்கள் குமார் மற்றும் சம்பத் ஆகியோர் 4.9.2011ம் தேதி எனது வீட்டிற்கு வந்து மிரட்டினர். எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராணி அளித்த புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த பிரிவுகளில் வழக்கு: சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி மீது இந்திய தண்டனை சட்டம் 493 சட்டபடி மனைவியாக்கி விட்டு வாழ மறுப்பது, 406 சட்டப்பிரிவுபடி நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றுதல், 420 சட்டப்பிரிவுபடி நம்பிக்கை மோசடி, 294 (பி) தகாத வார்த்தைகளால் திட்டுதல், 323 கையால் அடிப்பது, 506 (2) கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் விளக்கம்: இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் கேட்டதற்கு, கோர்ட் உத்தரவுபடி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆர் கோர்ட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மீது நடவடிக்கை என்ன? என்பது போலீசாரின் தொடர்ச்சியான விசாரணையில் தான்  தெரியவரும். அதுபற்றி உடனடியாக எதுவும் கூறமுடியாது என்றார்.
உறுதி மொழி பத்திரத்தில் உருக்கம்:  டாக்டர் ராணியிடம் பரஞ்சோதி அளித்த உறுதிமொழி பத்திரத்தில், “முதல் மனைவியை விவாகரத்து செய்து எல்லா ஆவணங்களிலும் ராணியின் பெயரை சட்டப்படி கொண்டு வருவேன். உன்னுடன் தான் சேர்ந்து வாழ்வேன். நான் இறந்த பிறகு எனது உடலுக்கு சடங்கு செய்ய உனக்கு சகல உரிமை உண்டுÓ என கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.

விசாரணை அறிக்கை இன்று தாக்கல்: கோர்ட் உத்தரவுப்படி, அமைச்சர் பரஞ்சோதி மீது கடந்த 6ம் தேதி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்றை இன்று திருச்சி 4ம் எண் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்ய மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் மேற்படி எப்ஐஆர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கூறப்பட்ட புகார் எதுவும் உண்மை இல்லை. எனவே மேற்படி எப்ஐஆரை செல்லாதது என அறிவிக்கவேண்டும் என போலீஸ் தரப்பில் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: