டோக்யோ, ஜூலை 10- ஜப்பானில் இன்று மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.3 ஆக பதிவாகியிருந்தது. ஹோன்ஷு தீவின் கடலோரத்தில், சுமார் 20 மைல் ஆழத்தில் உள்ள பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், அது வாபஸ் பெறப்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவுமில்லை. கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும், ஃபுகுஷிமா அணுஉலை வெடித்ததால் சுமார் 30 கி.மீ. தொலைவில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், அணு உலையின் கதிர்வீச்சு பாதிப்பு பல கி.மீ. தொலைவுக்கு இருந்தது. அப்பகுதிகளில் குடிநீர், பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சு இருந்ததால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டது. இதனிடையே, ஜப்பான் பொருட்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் தடை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்ததும், ஃபுகுஷிமா அணுஉலையில் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக