- ரஜனி இக்பால்
சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட – ‘கண்ணுக்குத் தெரியாமல் மறந்துபோன பாதிப்படைந்தவர்கள்: உலகெங்கும் உள்ள விதவைகள்’ என்கிற ஒரு புத்தகம் வெளிப்படுத்துவது, உலகெங்கிலும் சுமார் 245 மில்லியன் விதவைகள் உள்ளதாக மதிப்பிட்டிருப்பதாகவும் அவர்களில் 115 மில்லியன் பேர்கள் ஏழ்மையில் வாடுவதாகவும் மேலும் அவர்கள் தங்கள் கணவன்மார்களை இழந்துவிட்ட ஒரே காரணத்துக்காக சமூக வடுக்களினாலும் மற்றும் பொருளாதார இழப்புக்களினாலும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று.
காபோன் ஜனாதிபதி அலி பொங்கோ ஒண்டிம்பா டிசம்பர் 21, 2010 ல் அறிமுகப்படுத்திய பிரேரணையின் பயனாக ஐக்கியநாடுகள் பொதுச்சபை ஜூன் 23 திகதியை சர்வதேச விதவைகள் தினமாக முறைப்படி ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் பெண்கள் அபிவிருத்தி முன்னணியினாலும் (ரி.டபிள்யு.டி.எப்) அத் தினம் அனுசரிக்கப்பட்டது. மே 2009ல் நிறைவடைந்த கொடிய யுத்தம் காரணமாக ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமற்போயும் உள்ளதால் மிகப் பெரியளவில் விதவையாக்கப் பட்டுள்ள தமிழ் பெண்களின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டுவர இந்தத் தினத்தைப் பயன்படுத்துவதற்கு ரி.டபிள்யு.டி.எப் சரியானபடி முடிவு செய்திருந்தது.
இன்று ஸ்ரீலங்காவிலுள்ள மிகப் பெரும்பான்மையான விதவைகள் தொகையை இந்த யுத்த விதவைகள் ஏற்படுத்தியிருந்தாலும், ஏனைய அழிவுகளான சமீபத்தில் 2004ல் ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தமும் ஏராளமான பெண்களை விதவைகளாக்கி இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த எண்ணிக்கைக்குள் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் ஆகிய இருபகுதியினரையும் சேர்ந்த ஏராளமான போர்வீரர்களின் மனைவிமாரையும். நாங்கள் சேர்க்க வேண்டியுள்ளது. பல காரணங்களினாலும் மேலே கூறப்பட்ட வகையைச் சேர்ந்த விதவைகளின் சரியான எண்ணிக்கையை பெறமுடியாதிருந்தாலும், அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பலரினால் காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களிலிருந்து நாம் இந்த எண்ணிக்கையை ஓரளவு மதிப்பீடு செய்யலாம். சில தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சில தோராயமான கணிப்பீடுகளும் சில எண்ணிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளன.ஆனால் இவை எதுவுமே சரியான எண்ணிக்கையை வழங்கவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 86,000 விதவைகள் இருப்பதாகவும் அவர்களில் 40,000 விதவைகள் வடக்கிலும், 46,000 விதவைகள் கிழக்கிலும் உள்ளார்கள் என்று கிழக்கு மாகாண மகளிர் விவகார உதவியமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தது. இவர்களில் இளம் வயதினரும், மற்றும் வயதாகி நோயுற்றவர்களும், மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.அங்குள்ள மற்றும் சிலருக்கு தங்கள் கணவன்மார்களின் நிலையோ இருப்பிடமோ தெரியாது. இந்நிலை எதனாலெனில் அரசாங்கம் யுத்தத்தின்போது வன்னியிலிருந்து வெளியேறிய பெருந்தொகையானவர்களை பிடித்து தடுப்புக்காவலில் வைத்திருந்தது, அவர்களைக் காவலில் எடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து சென்றுவிட்ட போதிலும் தடுப்புக்காவலில் உள்ளவர்களது பெயர் விபரங்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இதன் பின்விளைவாக அநேகமான தமிழ் பெண்களுக்கு தங்களை விதவைகளாகக் கருதுவதா அன்றில் கணவன் தடுப்புக்காவலில் இருந்து விடுதலையாகி வருவான் எனக் காத்திருப்பதா என்பது தெரியாமலுள்ளது.
பெரும்பாலான குடும்பங்கள் பெண்கள் குடும்பத் தலைமையேற்று நடத்தும் குடியிருப்பாளர்கள் உள்ள குடும்பங்களாக மாறியுள்ளன. ஐநாவின் மானிட விவகாரங்களின் இணைப்புச் செயலகம் பிரசுரித்துள்ள ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குறிப்பில் வடக்கில் பெண்கள் குடும்பம் போற்றுதலைச் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்பு கூறியதைப்போல் வட பிராந்தியத்தில் 40,000 வரையான பெண்கள் குடும்பத் தலைமையேற்று நடத்தும் குடியிருப்பாளர்கள் உள்ள குடும்பங்கள் இருப்பதாகவும் அவற்றில் 20,000க்கு மேற்பட்டவை யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் உள்ளதாக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் பெண்கள் மற்றும் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி வெளி வந்திருக்கிறது
இந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களான ஆனைக்கோட்டை மற்றும் சாவகச்சேரியில் உள்ள மொத்த சனத் தொகையின் 30 விகிதமானோர் போர் விதவைகள் ஆவர். சராசரியாக ஒவ்வொரு விதவைக்கும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் உள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் மீள்குடியேற்ற உதவித் தொகை அல்லது நலன் விரும்பிகளின் நன்கொடை போன்ற மிகச் சொற்ப வருமானத்தைக் கொண்டே இந்த விதவைப் பெண்கள் தங்கள் பிள்ளைகளை உணவூட்டிப் பராமரிக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள்.
இதைத்தவிர பிள்ளைகளின் படிப்பையும் சுகாதாரத் தேவைகளையும் அவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இதில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது போரினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான விதவைகள் மீள்குடியேறியிருப்பது தங்கள் சொந்தக் கிராமங்களில் அல்லது போர் முடிவடைந்த பின் அவர்கள் முன்னர் தங்கியிருந்த நலன்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் நலன்களற்ற நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்களில். அவர்களில் அநேகர் முன்னரும் போர் நடந்த பொழுதும் வன்னிப் பகுதியில் வசித்தவர்கள், அதேவேளை மற்றவர்கள் யுத்தத்தின்போது தங்கள் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக மற்றப் பகுதிகளுக்கு நகர்ந்தவர்கள். போர் முடிவடைந்ததும் அவர்கள் மீளக் குடியேற்றப்பட்ட இடங்களில் தங்கள் வாழ்க்ககையை புதிதாக மீளாரம்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
ஆனால் விரைவிலேயே அவர்களால் அறிய நேர்ந்தது, இது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை என்று, ஏனெனில் அவர்கள் கிராமங்களிலிருந்த பெரும்பாலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிவடைந்திருப்பதை அவர்கள் கண்டார்கள். வீதிகள்,சந்தைகள், வீடுகள், வேறு கட்டடங்கள், பாடசாலைகள், நீர்ப்பாசன வசதிகள், ஏன் அவர்களின் கிணறுகள் வாய்க்கால்கள் எனச் சகலதும் அழிக்கப்பட்டு அல்லது பாவிக்க முடியாத நிலையிலிருந்தன. அரசாங்கம் அவர்களுக்கு வீடுகளை வழங்கி சிதைவடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்துத் தருவதாக வாக்குறுதிகள் வழங்கியிருந்த போதிலும்,அந்த வாக்குறுதிகள் இன்னமும் செயல்களாக உருமாறவில்லை.
நிலமையை மோசமாக்கும் விதத்தில் அவர்கள் கண்டது அவர்களால் தங்கள் வாழ்வாதாரத்தையோ அல்லது சமூக நடவடிக்கைகளையோ மீண்டும் தொடரமுடியாமல் இருப்பதை. அங்கு பாடசாலைகள் இல்லாததால் அவர்களால் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை மற்றும் வழமையாக இயங்கிவந்த சுகாதார சேவை வசதிகள் இப்போது அங்கில்லை. அவைகளை எல்லாம் சகித்துக் கொண்டு அங்கு வாழ்ந்தாலும், தொல்லை தரும் பிரசன்னமாக அங்கு காட்சிதரும் இராணுவ வீரர்கள் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானக் கண்கொண்டு பார்க்கிறார்கள்.
அதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த விதவைகளின் குடும்பம் போற்றுனராகவிருந்த அவர்களினது கணவன்மார்கள் இப்போது இல்லை.எனவே தங்கள் குடும்ப வாழ்க்கையை கொண்டு நடத்த இந்த விதவைகள்தான் சம்பாதிக்க வேண்டியுள்ளது.அவர்களில் அநேகர் ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கு வருமானம் தரக்கூடியாதகப் பயன்படக்கூடிய எந்தவொரு தொழில் திறமையையும் கற்றவர்கள் அல்ல.அதன் விளைவாக இந்த விதவைகள் தங்களையோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ போற்றுவதற்கு இயலாத கடினமான ஆதரவற்றவர்களாக மாறியுள்ளார்கள். இந்த விதவைகள் சிலரின் கணவன்மார்கள் ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ யில் போராளிகளாக இருந்துள்ள அதேவேளை மற்றவர்கள் வன்னியில் கூலி வேலைகளைச செய்து வந்திருக்கிறார்கள்.
ஆயினும் பெரும்பாலும் இந்த விதவைகள் எல்லோருமே எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்த அங்கத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே கணிக்கப் படுகிறார்கள். இந்த விதவைகளில் சிலர் 25 வயதுக்கும் குறைவாக உள்ள அதேவேளை மற்றவர்களில் சிலர் 50 வயதுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரு வகையினருக்கும் பிரத்தியேகப் பிரச்சினைகள் உள்ளன. 25 வயதுக்கும் கீழ்பட்டவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டாயத்திலிருந்து தப்பிப்பதற்காக தங்கள் பெற்றோர்களினால் திருமணம் செய்யும்படி கட்டாயப் படுத்தப் பட்டவர்கள். 50 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு வளர்ந்த பெண்பிள்ளைகள் உள்ளனர், அவர்களை இராணுவத்தினரதும் கிராமத்திலுள்ள மற்ற நேர்மையற்ற மனிதர்களின் பாலியல் தொல்லையினால் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுக்குள்ளது.
இந்த விதவைத் தாய்மார்கள் தங்கள் மகள்மாரைப் பாதுகாப்பதில் கடினமான நிலையை எதிர்கொள்ளும் அதேவேளை இளம் விதவைகளும் அதற்குச் சமமான கடின நிலையை.இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது அப்பகுதி இளைஞர்களிடமிருந்தோ பாலியியல் வதைகளுக்கு உட்படும் ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதில் எதிர்கொள்கிறார்கள். இந்தக் கட்டத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது, பாகுபாடு மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவர் கலாநிதி நிமால்கா பெர்ணாண்டோ கூட சுவிட்சலாந்தில் இந்த மாதம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வடக்கு மற்றும் வன்னியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் மேற்குறித்த நிலமையினை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை.
இன்று ஸ்ரீலங்காவில் வாழ்க்கைச் செலவு முன்னெப்போதுமில்லாத நிலையை அடைநந்துள்ளது என்பது சகலரும் அறிந்த விடயமே.இரண்டு பிள்ளைகள் உள்ள ஒரு சராசரி கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்துக்கு ஒரு நாள் வாழ்க்ககைச் செலவாக ஆகக் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் எந்த வழியிலும் எந்தவித வருமானமுமில்லாத ஒரு விதவை எந்த மாதிரியான வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என ஒருவரால் கற்பனை செய்ய முடியும்.
அவர்களில் சிலர் உள்ளுரிலேயே கூலி வேலைகளைத் தேடி அலையும்போது மற்றவர்கள் நாட்டின் தென்பகுதியில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தங்கள் தொழிற்சாலைகளுக்கு மலிவான தொழிலாளர்களைத் தேடுபவர்களின் கைகளில் சிக்கி விடுகின்றனர்.ஆணாதிக்கம் அதிகமுள்ள அப்படியான இடங்களில் வேலை செய்யும்பொழுது அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப்பற்றி நான் இங்கு விபரிக்கத் தேவையில்லை. வேலைக்காகப் பறந்து திரியும் மற்றவர்களை சாதாரணமாகப் பெண்கள் செய்ய முடியாத கடின வேலைகளை செய்வதற்கு சில அமைப்புகள் அமர்த்தியுள்ளன.
வடக்கில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் வேலை,அநேகமான பெண்களைக் கொண்டு சேர்த்திருக்கும் அப்படியான ஒரு களமாகும். நிலக் கண்ணிவெடிகளை சுத்திகரிப்போர்களாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றிய ஒரு காணொளி பிறகு உங்களுக்கு காண்பிக்கப்படும்.சூழ்நிலையின் தாக்க விசை காரணமாக இந்த விதவைகளில் சிலர் மேற்கொண்டிருக்கும் ஒரு தொழில் எங்கள் அனைவரையும் நாணித் தலைகுனிய வைப்பதுடன் எங்கள் சமூகத்துக்கு அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நான் இங்கு குறிப்பிடவேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன்.
தொழில் ரீதியான விபச்சாரிகளாக ஸ்ரீலங்காவில் சுமார் 40,000 வரையிலான பெண்கள் இருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது.அவர்களில் சிலர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளம் யுத்த விதவைகள் எனச் சொல்லப்படுகிறது.அவர்களின் உள்ளுணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,அவர்களுக்காக நான் இரக்கப்படுகிறேன்.இப்படி நடப்பதற்கான பொறுப்பை நாங்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
ஜூன் 3, 2011ந்திகதிய வீரகேசரியில் “வடக்கில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை தடுப்பது மிகவும் முக்கியம்” எனும் தலைப்பில் வெளியான செய்தியின் சாரங்களை இந்தக் கட்டத்தில் இங்கு நான் வாசிப்பது பொருத்தமாகவிருக்கும் என நான் நினைக்கிறேன்.
“இறுதியாக வடக்கில் குற்றச்செயல்களில் ஒரு அதிகரிப்பு காணப்படுகிறது. கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன..... இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை கிளிநொச்சி மாவட்டத்திலேயே நடைபெற்றுள்ளன.
தமிழ் கலாச்சாரத்துக்கு வெட்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெறுகின்றன. கடந்த ஞாயிறன்று ஒரு மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும்,அவரது கணவரின் வைப்பாட்டி எனச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அப்படிக் கொலை செய்த பெண்ணும் மூன்று பிள்ளைகளையுடைய ஒரு விதவை ஆவார்.”
அநேகமாக ஒவ்வொரு நாளும்; போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச்சேர்ந்த குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவு தொகையான பெண்கள் தற்கொலை செய்வதாக செய்தி அறிக்கைகள் பேசுகின்றன.அப்படிப்பட்ட சம்பவங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எதுவும் கிடைக்கக் கூடியதாகவில்லை.
சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்விலிருந்து தெரியவருவது,வடக்கிலுள்ள இப்படியான ஆதரவற்ற பெண்களின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் அனாதை விடுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் மற்றும் சில பெண்கள் தங்கள் பிள்ளைகளை மலிவான தொழிலாளர்களாக அவர்களைத் தேவைப்படுவர்களிடத்து அனுப்புவதாகவும். இந்தப் பிள்ளைகளின் சேவையைப் பெறுவோர் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்கோ உட்படுத்துகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்தியிருருக்கிறது.
இவ்வகையான பெண்களிடையில் பணியாற்றும் மனநல மருத்துவரான கலாநிதி எஸ். யமுனா நந்தன் தெரிவித்திருப்பது,பெரும்பாலான பெண்கள் மனநலக் கோளாறுகளினால் பாதிக்கப் பட்டிருப்பதாக.அப்படியான பெண்கள் தனிநபர்களினால் வடிவமைக்கப்படும் முயற்சிகளுக்கு சுலபத்தில் இரையாவதாகவும் அதேவேளை மற்றவர்கள் தற்கொலை முயற்சிக்கு தூண்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த விதவைப் பெண்கள் முகங்கொடுக்கும் மற்றொரு விடயம் வீட்டுடமையில் ஆண்களின் பிரசன்னம் அற்றருப்பதால் அது அவர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு தன்மையை உணர வைக்கிறது.தவிரவும் வீடுகள் என்ற பெயரில் அவர்கள் வாழுமிடங்களில் இரவு நேரங்களில் பலவித சாக்குபோக்குகளைச் சொல்லி உள்நுழைய முயல்பவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக அதைப் பூட்டி வைக்கக்கூட முடியாமலிருக்கிறது.
இதன்விளைவாக அவர்கள் இரவு நேரங்களில் பெண்களைத் தேடி அலைபவர்களிற்கு சுலபமான இரையாகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அநேக முறைப்பாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர் அப்படியாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி முறைப்பாடு செய்வதற்காக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்றபொழுது இரவில் உள்நுழைந்த நபர் முகாமில் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொறுப்பான அலுவலராக அமர்ந்திருப்பதை கண்டு கொண்டார்.
பிள்ளைகளுள்ள ஒரு விதவை, அந்தப் பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய இரு பாத்திரங்களையும் வகிக்க வேண்டியுள்ளது.அவர்களில் அநேகருக்கு இது ஒரு சவாலான பணியாக உள்ளது,வேலையின் நிமித்தமோ அல்லது வேறு தேவைக்கு வேண்டியோ அவர்கள் வெளியே செல்லும் வேளைகளில் தங்கள் பிள்ளைகளில் ஒரு கண் வைத்திருக்க அவர்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள் .தங்கள் வீடுகளில் வளர்ந்த பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் விதவைத் தாய்மார்கள் அவர்களைத் தனியே விட விரும்புவதில்லை.அதன்காரணமாக வீட்டுக்கு வெளியேயுள்ள எந்த வாழ்வாதார முயற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதைப் பற்றி அவர்களால் சிந்தனை செய்யக்கூட முடியாமலுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெரும்பாலான இந்த விதவைகளின் சொந்த சமூகத்திலுள்ள அங்கத்தினர்களே இவர்களை இறந்துபோன எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினர்களின் மனைவிகள் என நினைத்து இந்த விதவைகளை தூர ஒதுக்கி வைப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிலவேளைகளில் இராணுவத்தினர் இந்த விதவைகளின் செயற்பாடுகளை எந்நேரமும் கண்காணித்து வருவதால்,இந்த விதவைகளுக்கு ஆதரவு காட்டும் சமூக அங்கத்தினர்களை எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் என அவர்கள் சந்தேகப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம்.
தமிழில்.எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக