தேனி மாவட்டத்தில் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது மாணவியை பெற்றோரும், ஊர் மக்களும் சேர்ந்து அரசிடம் ஒப்படைப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச் சென்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மி நாயக்கன்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை கணித ஆசிரியர் மகேந்திரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து கூலி வேலை செய்யும் அம்மாணவியின் பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் படித்தும் அதிகாரிகள் தங்கள் மகளை பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினர். மேலும், அதற்கு தண்டனையாக தங்கள் மகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச் சென்றனர்.
இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது,
பள்ளியில் நீங்கள் எங்கள் மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால், உங்கள் அஜாக்கிரதையினால் எங்கள் மகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். மானம் மரியாதையைப் பெரிதாக நினைக்கும் எங்களுக்கு இனி எங்கள் மகள் தேவையில்லை. குடும்ப மானம் காற்றோடு போய்விட்டது. அதனால் இனி அவளை உங்களிடமே ஒப்படைக்கிறோம். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் செயலுக்கான தண்டனையாகும் என்று கூறினார்கள்.
பெற்றோரின் இந்த செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அம்மாணவியை கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்த்தனர்.
இதற்கிடையே ஆசிரியர் மகேந்திரன் நேற்று பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக