
பட மூலாதாரம், முஸ்லிம் உலகின் இரண்டு பெரிய சக்திகளான செளதி அரேபியாவும், துருக்கியும் இப்போது ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராக இல்லை என்ற ஊகங்கள் இப்போது வரை நிலவி வந்தன. இருநாடுகளுமே மத்திய கிழக்கில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றன.ஆனால் இப்போது இரு நாடுகளிலிருந்தும் வெளிவரும் அறிக்கைகள் அவற்றுக்கு இடையிலான தூதாண்மை உறவுகளை புதிய திசையில் கொண்டு செல்லக்கூடும்.துருக்கியின் அதிபர் ரிசெப் தயீப் எர்துவானின் அறிக்கையைத் தொடர்ந்து, செளதி அரேபியாவின் வர்த்தக சபைத் தலைவர், துருக்கியை எல்லா வகையிலும் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்."ஒவ்வொரு செளதி குடிமகனும், அவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி, நுகர்வோராக இருந்தாலும் சரி, துருக்கியை எல்லா வகையிலும் புறக்கணிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இறக்குமதி, முதலீடு அல்லது சுற்றுலா போன்ற எல்லாமே புறக்கணிக்கப்படவேண்டும். இவை அனைத்தும் நமது தலைவர், நம் நாடு மற்றும் நமது குடிமக்களுக்கு எதிரான துருக்கி அரசின் தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு பதிலடியாக இருக்கும், "என்று கவுன்சில் ஆஃப் செளதி சேம்பர்ஸ் தலைவர் அஸ்லான் அல் அஸ்லான், தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.














