வெள்ளி, 30 ஜூலை, 2021

அரும்பாக்கம் RK nagar குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிப்பு .. பொதுமக்கள் தெருவில் அவதி

 IsaiarasuAmbedkar IsaiarasuAmbedkar   :   *குடிசை மாற்று வாரியத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம்!*
நன்பர்களே,   வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை&எளிய மக்கள் நகரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நகரத்தில் ஏற்கெனவே பெருகியுள்ள வேலையின்மையாலும்,
அப்படியே வேலையிலிருந்தாலும் வேலைக்கேற்ற கூலியின்றி வசிக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாததாலும்,
மற்றும்பல காரணங்களாலும் சென்னை நகரத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிசைகளை அமைத்து வசித்துவந்தனர்.
இதனால் நகரங்களில் குடிசைப் பகுதிகள் அதிகரித்துவந்தன.
ஆனால் அந்தப் பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுபோன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை முறைப்படுத்தவும் முறைப்படுத்தமுடியாத பகுதிகளிலுள்ள மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரவும் எழுந்த நிர்பந்தத்தின் காரணமாக 1971ல் குடிசை மாற்றுவாரியம் உருவாக்கப்பட்டது.

சென்னையின் பல பகுதிகளிலும்  அவ்வாறு கட்டித்தரப்பட்ட அந்த குடியிருப்புகளிலும்கூட குடிதண்ணீர், மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் அப்படியே தொடர்ந்தன.
பல ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டதால் பழுதடைந்த நிலையிலிருக்கும் அக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுவருகின்றன. ஆனால் அக் குடியிருப்புக்களை காலிசெய்த மக்களுக்கு எந்தவொரு மாற்றுக்குடியிருப்பு வசதியும் செய்து தரப்படுவதில்லை. முறையான நிவாரணமும் தருவதில்லை. ஆடு, மாடுகளைப்போல் அவர்கள் தெருவிலே தூக்கியெறிப்பட்டனர். புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கும்வரை கடன்பட்டு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். புதிய குடியிருப்புகளுக்கு வரும்போது கடனாளிகளாகத்தான் வருகின்றனர்.
மக்களின் இத்துயர நிலைக்கு காரணமாக இருந்த அரசும் வாரியமும் ரூ.1.50 லட்சம் பணம் செலுத்தினால்தான் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்கமுடியும் என்று கொஞ்சமும் ஈவிரக்கமின்றி கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல், அந்த குடியிருப்புக்களில் பராமரிப்பு பொறுப்பு அனைத்தையும் கைகழுவி,  குடியிருப்போர் நல சங்கங்களை அமைத்து அப் பராமரிப்பு பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கும் முடிவையும் இவ்வாரியம் எடுத்துள்ளது. இதனால் ஏழை&எளிய மக்கள் பெரும் தொகை செலவளிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு பணம் கட்டச்சொல்வது அடிப்படையில் குடிசை மாற்று வாரியம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே விரோதமானதாகும்.
மேலும் இது சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்துவந்த மக்களை மீண்டும் குடிசைகளுக்கே விரட்டிவிட்டு அல்லது நகரத்தைவிட்டே துரத்திவிட்டு, அப் புதிய குடியிருப்புக்களில் பணம் வைத்திருக்கக்கூடிய வசதிபடைத்த மக்களை குடியமர்த்தும் திட்டமிட்ட செயல்போல் உள்ளது.
மேலும் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் அனைத்தையும் அதிக அடுக்குள்ள வீடுகளைக்கட்டி அதில் ஒருபகுதியை விற்பனைசெய்யும் முடிவையும் அரசாங்கம் எடுத்துள்ளது. அதனால்தான் தற்போது அனைத்து குடியிருப்புகளும் பல அடுக்கு மாடிகளாக (13 தளங்கள் வரை) கட்டப்படுகின்றன.
 
இதனால் குறுகிய பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் மக்களை குடியமர்த்துகின்றனர்.
ஏற்கெனவே அடிப்படை பிரச்சினைகள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் இதுபோன்ற பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும். பழைய குடியிருப்புக்களை இடித்துவிட்டு புதிய பல்லடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாறுதான் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் இத்தகைய போக்கை எதிர்த்து பல போராட்டங்களில் ஆங்காங்கே ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் மக்களின் இந்த நியாயமான குரலை காவல்துறையைக் கொண்டு அரசாங்கம் ஒடுக்கிவருகிறது.
இந்த அடக்குமுறைக்கு எதிராகவும் இம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் அனைத்து பகுதி மக்களும் ஜனநாயக எண்ணம் கொண்டோரும் ஒன்றிணைவது அவசியமாகும். அதனடிப்படையில் சில உடனடி கோரிக்கைகளை முன்வைத்து *குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலக் கமிட்டி* போராடி வருகிறது. இப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரும்படி வேண்டுகிறோம்.
கோரிக்கைகள்:-

*புதிதாக கட்டப்பட்ட வீடுகளை எந்த நிபந்தனையுமின்றி பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கு!*
*புதிய குடியிருப்புக்களை கட்டிமுடிக்கும்வரை தரமான தற்காலிக மாற்றுக் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொடு!*
*பராமரிப்பு கட்டணத்தை ஏழை மக்களின் தலையில் சுமத்தாதே நிதி பற்றாக்குறை சமாளிப்பு என்ற பெயரில் வீடுகளை விற்பனை செய்யாதே!*
*வீடுகளில் குடிபுக கட்டணம் எதுவும் விதிக்காதே!*
*பழைய குடியிருப்புக்களை இடிக்கும்போதும், புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களை கட்டும்போதும் மக்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காதே!*
*குடியிருப்புகளின் பராமரிப்பு பொறுப்பை கைகழுவாதே குடியிருப்போர் சங்கம் என்றபெயரில் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்காதே!*

*குடியிருப்பு மக்களின் போராட்ட குரலை காவல்துறையை ஏவி நசுக்காதே குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்து!*
*புதிய குடியிருப்புப் பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்களை ஏற்படுத்து!*
 *குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலக்கமிட்டி*                  
தொடர்புக்கு: 80154 72337   99405 55121

கருத்துகள் இல்லை: