Vincent Raj : தலித் பெண் மீது தாக்குதல் – எச்சிலை துப்பி செருப்பு காலால் எட்டி உதைத்த கொடூரம்
கலெக்டரும் எஸ்பியும் இணைந்து அபிராமிக்கு ஆறுதல் கூற வேண்டும்
வலியும் அவமானமும் இயலாமையும் கலந்த உணர்வுடன் அபிராமி முன்பு நின்று கொண்டிருந்தேன். நிறைமாத கர்ப்பிணி பெண். இன்னும் சில நாட்களில் ஒரு மகனையோ ஒரு மகளையோ பெற்றெடுக்கும் நிலையில் இருப்பவர்.
என் வீட்டுக்காரு முகத்துல எச்சில துப்பினாங்க சார். டேய் பறப் பயலே உனக்கு இவ்வளவு திமிரா?
என்று கூறிக் கொண்டே செருப்பு காலால் எட்டி உதைச்சாங்க. நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன்.
என் முகத்துலயும் எச்சில். என் இரண்டு குழந்தைகளும் தரையில் கிடந்தாங்க.
இவ்வளவு அநியாயம் செய்த ஆட்கள போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை என்று கூறி கலங்கினார். கவலைப்படாதே அபிராமி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஆறுதல் படுத்தினேன். விசாரணையில் ஈடுபட்டோம்.
கறம்பக்குடி அருகில் உள்ள இலைகடிவிடுதி கிராமத்தில் வசித்து வருகிற தலித் தம்பதியினர் அபிராமி (33) - விஜயக்குமார் (35). இவர்களுக்கு 6 வயதிலும் 3 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். விஜயக்குமார் கூலித் தொழிலாளி.
அபிராமி நிறைமாத கர்ப்பிணி பெண். அவரது உடலில் போதிய அளவு இரத்தம் இல்லை. அளவுக்கு அதிமான நீரும் சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 24.07.2021 அன்று இரவு 7.00 மணியளவில் கறம்பக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
மருத்துவரை பார்த்துவிட்டு தங்களது கிராமத்திற்கு திரும்பியிருக்கின்றனர். இருசக்கர வாகனத்தை விஜயக்குமார் ஓட்ட அவருக்கு முன்பு மூத்த மகன் அமர்ந்திருக்க, இளைய மகனை மடியில் வைத்துக் கொண்டு அபிராமி பின் இருக்கையில் உட்கார்ந்து வந்திருக்கிறார்.
கறம்பக்குடி நரிஆறு ஆத்துப்பாலம் அருகே வருகிற போது, மது அருந்திவிட்டு வந்த இரண்டு ஆதிக்க சாதியினர் பான்பராக் எச்சிலை துப்ப, அந்த எச்சில் விஜயக்குமார் மீதும் அபிராமி மீதும் குழந்தைகள் மீதும் பட்டிருக்கிறது. விஜயக்குமார் வாகனத்தை நிறுத்திவிட்டு, பார்த்து துப்பக்கூடாதா? என்று கேட்க, துப்பியன் நீ என்ன ஊரு என்று கேட்க, விஜயக்குமார் இலைகடிவிடுதி என்று கூறியிருக்கிறார். இலைகடிவிடுதியில் பெரும்பாலும் தலித் மக்கள் வசிக்கின்றனர். அதற்கு அந்த இருவரும், பறப்பய உனக்கு இவ்வளவு திமிரா அப்படித்தான்டா துப்புவோம் என்று கூறு மறுபடியும் எச்சிலை விஜயக்குமார் முகத்தில் துப்பியிருக்கின்றனர். செருப்பு காலால் அபிராமியை எட்டி உதைக்க நிலை தடுமாறு கீழேவிழுந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளும் தடுமாறி விழுந்து அழுதிருக்கின்றனர். அந்த ஆதிக்கசாதிக்காரர்களோடு மேலும் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு மொத்தம் 4 பேரும் விஜயக்குமாரை சாதி ரீதியாக இழிவாகப்பேசி தாக்கி இருக்கின்றனர்.
ஆதிக்கசாதி கும்பலால் தாக்கப்பட்ட அபிராமிக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. மறுநாள் 25.07.2021 அன்று காலை 7.00 மணியளவில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு கறம்பக்குடி போலீசார் வருகை தந்து அபிராமியிடம் வாக்குமூலம் பெற்று சென்றிருக்கின்றனர். அன்றைய தினமே மேல் சிகிச்சைக்காக காலை 11.00 மணியளவில் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அபிராமி சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கும் போலீசார் வந்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். ஆனால் 27.07.2021 அன்று இரவு 10.00 மணியளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சுமார் 15 முறை அங்குள்ள போலீஸ் அதிகாரியிடம் பேசியிருப்போம்.
எவ்வளவு திமிரு இருந்தால் ஒரு பெண்ணை குடித்துவிட்டு எச்சிலை துப்பி தாக்க முடியும். அபிராமி 10ம் வகுப்பு வரை படித்தவர். இந்த தாக்குதலிலும் நிதானத்தை இழக்காமல் தனது அலைபேசி மூலமாக முக்கிய குற்றவாளியை படம் எடுத்திருக்கிறார். அவன் பயன்படுத்திய வாகனத்தையும் படம் எடுத்திருக்கிறார்.
அபிராமியின் கணவர் விஜயக்குமார் என்னிடத்தில், எங்களுக்கு நடந்த கொடுமையைவிட எங்களுக்கு ஆறுதல் சொல்ல நடவடிக்கை எடுக்க ஒரு அதிகாரி கூட வரவில்லை என்பதுதான் சங்கடப்படுத்துகிறது என்றார்.
இப்படி ஒரு வன்கொடுமை நடந்தவுடன் அந்த பகுதியைச் சேர்ந்த பூபதி கார்த்திகேயன், துரைகுணா போன்ற தோழர்கள் தயவுசெய்து சிரமம் பார்க்காமல் புதுக்கோட்டைக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அபிராமிக்கு நடந்த சம்பவத்தை முழுமையாக கேட்டு தெரிந்ததும் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேற்றைய தினம் 28.07.2021 அன்று எமது குழுவினருடன் சென்றிருந்தேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களை நேரடியாக சந்தித்தேன். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம். அந்த பெண்ணிற்கு வேண்டிய தரமான மருத்துவ சிகிச்சையும் கொடுக்கின்றோம். எஸ்பியிடமும் இதுகுறித்து பேசுகிறேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் அபிராமிக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவரை தொடர்பு கொண்டு உத்தரவும் இட்டு இருக்கிறார். இந்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது.
புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் அவர்களையும் சந்தித்தேன். இதுவரை டிஎஸ்பி பாதிக்கப்பட்ட அபிராமியை சந்திக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. காலதாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றனர். தயவுசெய்து குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்தினேன்.
இன்று ஐஜி பாலகிருஷ்ணன் அவர்களிடத்தில் தொலைபேசியில் நடந்த சம்பவத்தை கூறியவுடன் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கின்றேன். இதுகுறித்து விசாரணையும் செய்கிறேன் கதிர் என்று உறுதிமொழி அளித்தார்.
பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் உடன் இருந்தனர். இன்று கண்டிப்பாக குற்றாவளிகள் கைது செய்யப்படுவார்கள் என்கிற தகவல் வருகிறது. கைது செய்ய வேண்டும் அதுதான் சரியான நீதியாக இருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கென்று ஒரு பெருமை இருக்கிறது. அங்குள்ள நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்பில் இருக்கக்கூடிய அனைவரும் பெண்கள். ஆகவே அந்த மாவட்டத்தின் மீது எனக்கு கூடுதல் மரியாதை உண்டு.
குற்றவாளியை கைது செய்ய வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை கடந்து ஒரு மிக முக்கியமான கோரிக்கையை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் வைக்க விரும்புகிறேன்.
ஆட்சியரும் எஸ்பியும் இணைந்து நேரடியாக பாதிக்கப்பட்ட அபிராமியை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். விசாரணை நடத்த வேண்டும். அப்படி நடக்கின்றபட்சத்தில் அபிராமிக்கு நீதியின் மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படும்.
அபிராமியும் அவரது கணவர் விஜயக்குமாரும் என்னிடத்தில் நீங்கள் வந்த பிறகு மிகப்பெரிய நம்பிக்கை வந்துள்ளது. அதிகாரிகள் கணிவுடன் பேசுகிறார்கள். வேலையும் விரைவாக நடக்கிறது. குற்றவாளியும் கைது செய்யப்படலாம் என்று சொல்லுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.
இந்த மகிழச்சியைவிட பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கூடுதலான மகிழ்ச்சி எதுவென்றால் இரண்டு பெண் ஆளுமை மிக்க அதிகாரிகள் அபிராமியின் கரத்தை பிடித்து நம்பிக்கை கொடுப்பதுதான்.
அப்படி நடக்கும் என்று ஆழமாக நம்புகிறேன்.
-எவிடன்ஸ் கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக