மின்னம்பலம் :மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இந்த மருத்துவ இடங்களை ஒதுக்குகின்றன.இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக திராவிடர் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும். அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 1500 ஓபிசி மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2500 ஓபிசி மாணவர்களும் பயன்பெறுவர். அது போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 550 மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நாட்டின் சமூக நீதிக்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கவும் இந்த முடிவு பெரிதும் உதவும் என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக எம்பி வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஒன்றிய அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றி. தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும். இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக