ஞாயிறு, 25 ஜூலை, 2021

தாலிபான்களிடம் குவியல் குவியலாக 'மேட் இன் அமெரிக்கா' ஆயுதங்கள்.. இது எப்படி சாத்தியமானது?

 Vigneshkumar -  Oneindia Tamil News  :  காபூல்: பல்வேறு அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்கள் பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பலவற்றில் "Property of USA Government" என்ற முத்திரை இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றது எப்படி என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்துதுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் அமெரிக்கப் படைகள் இருந்தன. இந்த காலகட்டத்தில் தாலிபான்களின் ஆதிக்கம் பெருகிவிடாமல் அமெரிக்கப் படைகள் பார்த்துக் கொண்டது.
ஆனால், இப்போது ஆப்கன் நாட்டிலிருந்து, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவு பார்ட்டி.. அதிவேகமாக காரை ஓட்டிய யாஷிகா ஆனந்த்.. நடிகைக்கு எலும்பு முறிவு?.. நடந்தது என்ன? நள்ளிரவு பார்ட்டி.. அதிவேகமாக காரை ஓட்டிய யாஷிகா ஆனந்த்.. நடிகைக்கு எலும்பு முறிவு?.. நடந்தது என்ன?



அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, மறுபுறம் தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டன. தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், அதில் போர் நிறுத்தம் குறித்தோ அதிகாரப் பகிர்வு குறித்தோ எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்குள் ஆப்கனில் சுாமர் 80% நிலத்தைத் தாலிபான்கள் தங்கள் காட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.

தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும்கூட அதில் தாலிபான்களுக்கு உண்மையில் ஆர்வமில்லை என்றே தற்போதுள்ள ஆப்கன் அரசு விமர்சித்துள்ளது. அதேபோல தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீனும், தற்போதைய அஷ்ரஃப் கானி அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படும் வரை ஆப்கனில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை என்றே குறிப்பிட்டிருந்தார்.

அதாவது தற்போது இருக்கும் ஆப்கன் அரசை அப்புறப்படுத்தும் வரை தாக்குதலை நிறுத்த தாலிபான்கள் விரும்பவில்லை. அதேநேரம் நகரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் செய்தியாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருவோம் என்றும் தாலிபான்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. அதில் குறைந்தது 80% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிநவீன துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், ராணுவ டிராக்குகள் என கிட்டதட்ட ஒரு குட்டி நாட்டிற்கு இருக்கும் ராணுவ உபகரணங்களைத் தாலிபான்கள் வைத்திருக்கின்றனர்.

இவை தவிர கையேறி குண்டுகள், சாட்டிலைட் போன்கள், உள்ளிட்டவையும் இப்போது அவர்கள் கையில் உள்ளது. இதில் பெரும்பாலானவற்றில் "Property of USA Government" என்ற முத்திரையைப் பார்க்க முடிவதாகப் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தாலிபான்களை ஒடுக்க அமெரிக்கா ஆப்கன் ராணுவத்திற்கு அளித்த ராணுவத் தளவாடங்கள் இப்போது தாலிபான்களுக்கே கிடைத்துள்ளன. அதைத் தாலிபான்கள் இப்போது ஆப்கன் ராணுவத்திற்கு எதிராகவே பயன்படுத்துகின்றனர் என்பது தான் நகை முரண்.

தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீனும் இது பற்றிக் கூறுகையில், "புதிதாக நாங்கள் நிறைய மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் எங்களுக்கு புதிய ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இதுவரை நாங்கள் சுமார் 200 மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளோம். பேச்சுவார்த்தை மூலமே அவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். ஏனென்றால் போர் மூலம் வெறும் 4 வாரங்களில் 194 மாவட்டங்களைக் கைப்பற்றுவது என்பது மிகக் கடினமான ஒரு காரியம்" என்று தெரிவித்திருந்தார்.

பல்வேறு பகுதிகளிலும் ஆப்கன் ராணுவம் சரணடைந்துவிடுகின்றன. அல்லது தாலிபான்களிடம் தோல்வியடைந்து விடுகின்றன. இதன் மூலம் அங்கிருக்கும் அமெரிக்காவின் நவீன ஆயுதங்களும் தாலிபான்கள் கைகளுக்குச் செல்கின்றன. இது தாலிபான்களை வலுவான அமைப்பாக மாற்றுகிறது. இதன் மூலம் ஆப்கனை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சிகளைத் தாலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், பல்வேறு இடங்களிலும் தாலிபான்கள் ஆட்சியில் இருக்கவே பொதுமக்கள் விரும்புவதாகவும் ஸ்கை நியூஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. தாலிபான்கள் ஆட்சியில் பாதுகாப்பாக இருப்போம் என்றும் இல்லையென்றால் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்றும் ஒரு பகுதி ஆப்கன் மக்கள் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இன்னும் சில வாரங்கள் அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்தில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி அமையும் என்று அமெரிக்கப் புலனாய்வுத் துறை ரிப்போர்ட் அளித்துள்ளதாகவும் ஸ்கை நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: