திங்கள், 26 ஜூலை, 2021

பீரியட் படம் வந்துறக்கூடாது. நாஸ்டால்ஜியவைத் தூக்கிக்கிட்டு வந்துடறானுக ! ஷார்ப் அடி பரம்பரை, இடி அடி நாயக்கர் பரம்பரை

சார்பட்டா பரம்பரை படத்தை எதிர்க்கும் ஜெயக்குமார்… வரவேற்கும் உதயநிதி…!!  காரணம் இதுதானா..? – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest Update ...

Raja Rajendran Tamilnadu  :  பீரியட் படம் வந்துறக்கூடாது.  நாஸ்டால்ஜியவைத் தூக்கிக்கிட்டு வந்துடறானுக !
ஷார்ப் அடி பரம்பரை, இடி அடி நாயக்கர் பரம்பரையே, சார்பட்டா, இடியாப்ப பரம்பரைகளென மருவியிருப்பதாக நக்கீரன் பிரகாஷ் ஒரு பேட்டியில் சொல்கிறார்.  
ஆளாளுக்கு ஒரு கதை சொல்வதால், நாம் ரொம்ப குழப்பிக்கத் தேவையில்லை !
இதில் சார்பட்டாவையாவது கேள்வி பட்டிருக்கிறேன்.  
மீதி யாவுமே இப்ப இந்தப் படத்தைப் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்.  
இதில் சுண்ணம்புகுளம் வேறு வருகிறது.  மக்கள் அதை சுண்ணாம்புக்கால்வாய் என்பார்கள்.  
சுண்ணாம்புச் சூளைக்கருகில் பக்கிங்காம் கால்வாய் ஓடுவதால், இரண்டையும் இணைத்து சுண்ணாம்புக் கால்வாய் !
இந்தச் சுண்ணாம்பு குளம் இப்ப இப்பத்தான் சேரித் தோற்றத்திலிருந்து நகரத்தோற்றத்திற்கு மெல்ல மாறி வருகின்றது.  
2015 பெருவெள்ளத்தில் இந்தப் பகுதி ஆறடி நீருக்குள் மூழ்கி இருந்தது.  அதற்குப் பிரதானக் காரணி இந்தக் கால்வாயில் வந்த வெள்ளம்.  
நதிகளை இணைப்பதில் ஊழிக்காலங்களில் இப்படி அழிவு வாய்ப்பதிகம்!
அகஸ்தியா தியேட்டரில் கட்டப்படும் மீனவ நண்பன் பட எம் ஜி ஆர் பேனரைக் கண்டதும், எனக்கு 32 A பஸ் நினைவுக்கு வந்தது !



லேலண்ட் வண்டி நவீனமாக இருக்கும்.  டாடா வண்டி சத்தமில்லாமல் மிருதுவாக இயங்கும்.  இந்த 32 A வண்டி மட்டும் பென்ஸ்.  முன் பக்கம் வீங்கி வினோத அழகில் இருக்கும்.  அந்தப் பேருந்தில் பயணிக்கவே அவ்வளவு விருப்பமாக இருக்கும்.  அன்று அது தண்டையார்பேட்டை வரை மட்டுமே ஓடுமென்பதால், அகஸ்தியா செல்ல வசதியான பஸ்.  பெரும்பாலும் காலியாகச் செல்லும் !
எம்ஜிஆரின் நினைத்ததை முடிப்பவன் படத்துக்காக, அகஸ்தியா திரையரங்கிற்கு இந்த பஸ் ஏறிப் போனது நினைவில் இருக்கிறது.  அதேபோல் பெரிய பேண்ட், ஆளுயர ட்ரம்பெட் சகிதம் எம்ஜிஆருக்கு கட்டப்பட்டிருந்த கட்அவுட்டும் !

வீட்டில் பொழுதன்னிக்கும் அன்று நக்கல் செய்யப்பட்டவர் புரட்சித்தலைவர். கலைஞர் முதன்முதலாகக் கட்டிய குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசித்தவர்கள் நாங்கள்.  தரைத்தள வாடகை மாதம் 40 ரூபாய்.  முதல் மாடி 35 ரூபாய்.  எங்க மாடிக்கு 25 ரூபாய்தான்.  25 வருடங்களும் ஒரே வாடகை.  அதன்பின் அந்த வீடு முழுச்சொந்தம்.  99% மக்கள் திமுக.  ஆனால் போனதென்னமோ அதிகமாக எம் ஜி ஆர் படங்கள் !
மகாராணியில் நீதிக்குத் தலை வணங்கு, பாண்டியனில் இதயக்கனி, கிருஷ்ணாவில் உழைக்கும் கரங்கள், கிரவ்ன்ல ஒன்லி சிவாஜி படங்களைத்தான் போடுவார்கள்.  படத்தில் வரும் மணிகூண்டுக்கு அருகில் இருந்த திரையரங்கம் கிருஷ்ணா.  முட்டை போண்டா இங்கு பிரசித்தம் !
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்தான் எம் ஜி ஆரின் கடைசி படம்.  அந்தப் படம் ரிலீஸ் ஆனபோது, அவர் முதல்வராகி விட்டார்.  அந்தப் படம் ஃப்ளாப்.  காரணம் அதில் க்ளைமேக்ஸில் அவர் இறந்துவிடுவார்.  நாயகன் இறந்தால் ரிப்பீட் பார்க்க ரசிகர்கள் சென்டிமெண்டாக போக மாட்டார்களாம்.  இதுவும் அகஸ்தியாவில்தான் ரிலீஸ் ஆகியது !

இந்தப் படத்தில், கயல்விழி என்று உச்சரிக்க முடியாமல் கயவி என்று உச்சரிப்பார் பொன்மனச்செம்மல்.  தேர்தல் ஆணையத்தை தேல் ஆணையம் என சமீபத்தில் எடப்பாடியார் உச்சரித்ததைப் போல.  விழுந்து புரண்டு பாடிஷேமிங் செய்திருக்கிறோம்.  அதிலும் அவர் மேடைப்பேச்சுக்களில், இங்கு கூடியிருக்கும் தாய்மார்களே என்பார் பாருங்கள்.  அம்பது அறுபது பேர் ஒண்ணா உக்காந்து டிவி பார்க்கிற பொழுதுகள் அல்லவா ?  பெண்கள்தான் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.  கருமம் அப்ப அதுக்கு அர்த்தம் கூடத் தெரியாது.  அந்தளவு உபிக்கள் சூழ் உலகது !

படத்தில் மணிகூண்டுக்கு அருகில், அன்று மக்களுக்கு காலத்தைச் சொன்ன இன்னொரு முக்கியமான அடையாளம் உண்டு.  அது தங்கசாலை.  மிண்ட் எனப்படும் அரசு அச்சகம்.  அங்கு அதிகாலை இரண்டுமுறை ஒலிக்கும் அஞ்சேமுக்கா மணி சங்கும், அதைத் தொடர்ந்து உடன் ஒருமுறை மட்டும் ஒலிக்கும் ஆறு மணி சங்கும் கேட்டு, விழித்த, வேலைக்கு கிளம்பிய கூட்டம் பல்லாயிரம் !
இன்று கூட பத்தரை மணி சங்கொலி என் காதுகளில் அவ்வப்போது விழும்.  ஒலிமாசு அதிகரித்துவிட்டதால், அந்தச் சத்தம் பழகிய காதுகள் மட்டுமே உணரக்கூடும் !
ரங்கன் வாத்தியாரின் பயிற்சிக்கூடத்தின் பின்னணியில் அடிக்கடி கூகூகூ வென எழும்பும் ஓசையெல்லாம் உச்ச பரவசத்தைத் தந்தது !

அரைமணிக்கொரு முறை ஏதேனும் ரயில்கள் கடந்துக் கொண்டே இருக்கும் பகுதி.  புகைவண்டி என்பதால் அந்தச் சத்தம்.  சென்ட்ரல், சால்ட் கோட்ரஸ், பீச், ஹார்பர், அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு போகும் கூட்ஸ் ரெயில்கள் என ஓயாமல் போய் வந்துக்கொண்டு இருக்கும்.  எழும்பூர் இதில் வராது.  அதெல்லாம் தெற்கு.  இங்கு வடக்கு, மேற்கு, கிழக்கு மட்டுமே !
குடிசை மாற்று வாரியப்பகுதி கட்டிடம்தான் அன்று எங்கள் பகுதியில் மிக உயரமான மாடிக் கட்டிடம்.  சுற்றி இருந்தவைகள் ஓட்டுவீடு, கூரை வீடு, தகரஷீட் வீடு, அரிதாக பணக்காரர்கள் வசித்த ஒற்றை மாடி வீடு !
எங்கள் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் பல வகை தூரத்தில் பயணித்துக் கொண்டே கிடக்கும் ரயில்களைப் பார்க்கலாம்.  சொப்பு சைசில் தெரியும்.  ஏழெட்டு வயதில் அந்தப் பக்கம் அப்படி ஒரு குட்டியூண்டு சைசில் வேறு ஓர் உலகம் இருப்பதாகவே நம்பினேன் !

பேசின்ப்ரிட்ஜ் அனல்மின் நிலையத்தின் இரண்டு பாய்லர் கோபுரங்களை மட்டுமே காட்டுகிறார்.  உண்மையில் அங்கு இருந்தது மூன்று பாய்லர் கோபுரங்கள்.  மூன்றும் மூன்று அளவு.  மின்சாரம் தயாரிக்க எழும்பும் பேரிரைச்சல் புயல் கால கடலலை ஓசை போல இரவெல்லாம் கேட்கும்.  அன்றும் அடிக்கடி பழுதாகும்.  நீண்ட நாள் செயல்படாமல், ஒரு கட்டத்தில் அந்த பாய்லரில் ஒன்று இடிந்து சிதிலமானது.  பிறகு மூன்றையும்  தகர்த்துவிட்டு, புதிய பாணியிலான புகைப்போக்கிகளை கட்டினார்கள் !
நவீனமுறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது என்பதால், அதை வீடியோவாக ராஜ்கமல் நிறுவனம் பதிவு செய்ததாக வாசித்தேன்.  அதை கமல் எந்தப் படத்திலும் உபயோகப்படுத்தவே இல்லை !
கலை இயக்குநரின் உழைப்பு அபாரம்.  மண் அடுப்பு, இரும்பு ஊதுகுழல்,  ஸ்விட்ச் போர்டு, மணிகூண்டு, பல்லவன் சிவப்பு பேருந்து, கர்லா கட்டை, டைனமோ லைட் சைக்கிள், திரி விளக்கு, என்கிற அந்த மெனக்கிடல்கள் அதகளம் !

இரவுக்கடைகளில் அந்த தகரக்குடுவை திரி விளக்குகள்தான் திகுதிகுவென எரியும்.  தினம் ஒரு தீவிபத்தையாவது நகரத்தில் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் எமன் அது.  கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளைத் தெருவில் இத்தகைய விளக்குகள், தகர உண்டியல்களைச் செய்வதற்கென்றே பாரம்பரியப் பட்டரைகள் சில உண்டு.  பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட அவைகள் இயங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.  
பென்சில் ஃபேக்டரி அருகிலிருக்கும் குடிசைப் பகுதிகள் வருடத்திற்கு ஓரிருமுறை கொளுந்துவிட்டு எரியும்.  கதறல்கள், தீயை அணைக்க மக்கள் படும்பாடு, ஃபயர் இஞ்சின் பெல் சத்தம் இதையெல்லாம் கூட்டமாக மொட்டை மாடியேறி, கமெண்ட் அடித்தபடி வேடிக்கை பார்ப்போம் 😭
கொஞ்சம் பணக்கார கடைகளில் பெட்ரமாக்ஸ் இருக்கும்.  அதை பம்ப் செய்து சூடேத்தி வெளிச்சம் வர வைப்பதற்குள் தாவு தீந்துரும் !  

சிம்னி விளக்குகள் கொஞ்சம் பாதுகாப்பானது.  அழகிய டிசைன்களில் வரும் அந்தக் கண்ணாடிச் சிம்னிகள் கொள்ளை அழகு.  தேர்வு சமயங்களில் அதனருகில் குனிந்தபடி படிப்பதில் மூன்று ரிஸ்க்.  ஒன்று முடி கருகும்.  இரண்டு மூக்கு சுடும்.  மூன்று அது கிளப்பிவிடும் பிரம்மாண்ட நம் நிழலுருவம் திகிலூட்டும் !
கலையைப் போலவே ஒப்பனை துறையும் சளைக்கவில்லை.  பெண்கள் அணியும் இரட்டை மூக்குத்திகள், கனகாம்பரம், ஆண்களின் முன் நெற்றியில், இளைஞரணியிலிருந்த ஸ்டாலின் ஸ்டைலில் வந்து விழும் சுருண்ட முடி,  பட்டை பெல்ட், மேல் சட்டைக்குள் கழுத்தைச் சுற்றி கர்ச்சீப், பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் !

துரைக்கண்ணு வாத்தியாராக வரும் நடிகர் சுந்தர் நடிப்பு மிக மிக அலாதியானது.  செம பாடி லாங்வேஜ்.  நல்ல பேரை வாங்கி கொடுத்துட்ட வேம்புலி, சார்பட்டாதான் கெத்துன்னு நிருபிச்சிட்ட, நல்லதுப்பா எனக் கையாலாகாத நிலையில் அவர் சொல்வதும், நீ தோக்கல வேம்புலி, இதுதான் ஒரிஜினல் ஃபைட், நீதான் ஜெயிச்ச என்று ரோஸ் இறுதியில் வேம்புலியிடம் சொல்வதெல்லாம் செம ❤️ விசர் பிடித்தது போல, படத்தை மீண்டும் மீண்டும்  பார்த்துக் கொண்டே இருக்கிறேன் !
கலையரசன் பாத்திரம் முதன்முறை பார்க்கும்போது கொஞ்சம் குழப்பமாகப் பட்டாலும், அடுத்தடுத்து பார்க்கும் போது, சரியாகவே பட்டது. அவருடைய மனைவியாக வரும் இரட்டை மூக்குத்தி சஞ்சனா நடராஜன்,  நாயகியை விடவும் கொள்ளை அழகு !

இந்த 50, 60 ஸ் அம்மாக்களுக்கு மகனோ, மருமகளோ செய்யும் பப்ளிக் ரொமான்ஸ்கள் பொறுக்காது.  ஆனால், மகள், மருமகன் விதிவிலக்கு.  அதை பக்காவாக, இந்த இணைகள் மூலம் பதிந்திருக்கிறார்கள் ரஞ்சித் & தமிழ் !
ரஞ்சித் படத்தில் எப்படி திமுக புகழ்ச்சி என நமக்கு குழப்பமாக இருந்திருக்கும் அல்லவா ?  எல்லாம் தமிழ்பிரபாவால் விளைந்தது.  ஆனால், அதைப் பெருந்தன்மையோடு அனுமதித்த ரஞ்சித்திற்கு எல்லாப் புகழும் !
அவர் ஆசைக்கு கொஞ்சம் திணித்துக் கொண்டார்.  தணிகாவுடன் சமாதானம் பேசும்போது, என் வூட்ல வந்து மொறவாசல் செய், மாடு செத்துப் போச்சுன்னா எடுத்துனுப் போய் துன்னு...... இப்படி எந்தக் காலகட்டத்திலுமே சென்னை கலாச்சாரம் இருந்திருக்க வாய்ப்புகள் மிக அரிது.  கிராமங்களில் இருந்த தீண்டாமையை, சென்னை அதிலும் வட சென்னையில் என்றோ இருந்ததாகக் கூட ஒத்துக் கொள்ளவே முடியாது !
அதுசரி, சீனாக்காரன் கிட்டப் போய், உனக்கு நான் கால் மேல கால் போடறது, கோட் போடறது புடிக்கலைன்னா போடுவேன்டான்னு வசனம் வச்சவர் ஆசையைக் கெடுப்பானேன் ?
படத்தை இரண்டாம் முறையாக பார்த்த என் பையன் ஒரு குறியீட்டைக் கண்டு பிடித்தான் (வயது எட்டே முக்கால்)
ரங்கன் வாத்தியாரோட அண்ணன்தான் துரைக்கண்ணு வாத்தியார்.  
எப்படிரா ?

அதான் அவங்க அண்ணன் இடியாப்ப பரம்பரைக்கு ஆடுனதா சொன்னார்ல்ல ?  என்னத்த படம் பார்க்கிறீங்களோ.  அந்த அண்ணன்தான் இவர் !
ஆக்ச்சுவலா சார்பட்டாவின் ரேஞ்ச் பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு  
இடியப்ப ரேஞ்ச் யானைக்கவுனி, சால்ட் கோட்ரஸ்,  சூளை, புளியந்தோப்பு, படாளம், ஓட்டேரி, வியாசர்பாடி !
ஆனா ரங்கன் வியாசர்பாடி ரங்கனா வர்றார்.  அதுவும் ரஞ்சித் விருப்பம்தான்.  அதுதான் அவர் ஏரியா.  மெட்ராஸ் பட அவுசிங் போர்டு ஏரியாவும் அதுதான்.  புனைவு என்று சொல்லிவிடுவதால் அது குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளக் கூடாது !

சாராயம், கள்ளச்சாராயம், கொக்கி, கடத்தல், ரவுடியிசம் இவைகளை ஒட்டுமொத்தமாக எங்கள் மீது எழுதுவதா என ர ரக்கள் பொங்கல் வைப்பதை எங்கும் காண முடிகிறது !
ஆட்டோ சங்கர் கதையைத் தேடி வாசித்தாலே போதும்.  எம் ஜி ஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், இன்று ஆட்டோ சங்கர் வசம் பத்திருபது மருத்துவ & பொறியியல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு ஓனராகி, கல்வித் தந்தையாக வலம் வந்திருப்பார் !
பசுபதி வடசென்னை ஆள்.  எனவே அவர் அந்த ஸ்லாங் நல்லாப் பேசினார் என்பது பாராட்டாகாது.  அந்த மனிதன் கொத்தாளத் தேவனாக தேனி ஸ்லாங் பேசியிருப்பாரே ?  மறக்க முடியுமா ??
ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பான படம் சார்பட்டா பரம்பரை. அனைவருக்கும் வாழ்த்துகள்
 !!!

கருத்துகள் இல்லை: