கே.கே.மகேஷ் : ஆதித்தமிழ் முறையில் 4,621 திருமணங்களை நடத்திவைத்த ‘செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார்
(2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காமதேனு வார இதழில் வெளிவந்த கட்டுரை)
இரண்டு மணமாலை, இரண்டு துணை மாலை, விளக்கு ஒன்று, தீப்பெட்டி ஒன்று. இவற்றை மட்டுமே வைத்து எளிய முறையில் 4,621 தமிழ் முறைத் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார் தமிழறிஞர் இரா.இளங்குமரனார். 91 வயது நிறைந்துவிட்டது அவருக்கு. ஆனாலும், பிப்ரவரி மாதம் வரையில் திருமண அழைப்புகளால் அவரது நாட்குறிப்பு நிரம்பி வழிகிறது.
மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றேன். துணைவியாரும், மகனும் உபசரித்து மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். படிகளைப் பார்த்ததுமே, “இத்தனை படியேறியா அய்யா மாடிக்குச் செல்கிறார்?” என்று வியப்பு ஏற்பட்டது. இதுவரையில் 550 புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர், மேலும் 50 புத்தகங்களை அச்சுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார். கடந்த ஞாயிறன்று ‘திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை’ எனும் 3,000 பக்கங்களைக் கொண்ட (6 தொகுதிகள்!) நூலை வெளியிட்டிருக்கிறார்.
அறைக்குள் நுழைகையில், வேட்டி, மேல்துண்டு மட்டும் அணிந்து மணிமேகலைக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார் 91 வயது இளங்குமரனார். தமிழ் முறைத் திருமணங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? என்று கேட்டேன்.
“இளம் வயதிலேயே தமிழில் ஆர்வம். ஐந்தாம் வகுப்பு படிக்கையிலேயே மேடையேறத் தொடங்கிவிட்டேன். 16 அகவையில் (1946ல்) தமிழாசிரியராகிவிட்டேன். அடுத்த சில திங்கள்களிலேயே, திருமணம் நடந்தது. சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் நடந்த அந்தத் திருமணம் ரொம்பவும் எளிமையாக நடந்தது. அறுகாலி(பெஞ்சு) மேல் சமுக்காளம் விரித்து கிழக்கு முகமாக மணமக்களாகிய எங்களை அமரச் செய்தார்கள். மணமகளுக்குச் சீலையும், சட்டையும் இரண்டே முக்கால் ரூபாய். எனக்கு வேட்டியும் துண்டும் இரண்டே கால் ரூபாய். மாலையாக நூற்சிட்டங்கள் (கதர் நூல்) இரண்டு, மாற்று மாலையாக மல்லியை மாலை இரண்டு. மொத்தச் செலவே அவ்வளவுதான். திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் அய்யரல்ல, உள்ளூர் மகளிர். கெட்டி மேளம்? மகளிர் குரவை. வாழ்த்தும் அந்தத் தாய்மாரே. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், எரி(தீ) வளர்த்தல், அயன்மொழி மந்திரம் ஓதுதல் போன்ற சடங்குகள் எதுவும் இல்லை. எனக்கு மட்டுமல்ல, எங்கள் ஊரில் நடக்கிற அத்தனை திருமணமும் அப்படித்தான் நடந்தது.
அகநானூற்றைப் படித்தபோது, அதன் 86, 136ம் பாடல்களில் தமிழர் திருமண முறைபற்றி விரிவாக சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன். அதைத்தான் எங்களூர் பாமரப்பெண்கள் பரம்பரையாக கடைபிடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். சிலப்பதிகார காலத்தில்தான் வேதியரைவைத்து திருமணம் நடத்தும் முறை அறிமுகமாகி, பிற்காலத்தில் அது இல்லாத திருமணம் செல்லாது என்று சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது. பாவாணரும் தமிழ் முறைப்படியே திருமணம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே, 1951 முதல் தமிழ் நெறிப்படி திருமணங்களை நடத்திவைக்கத் தொடங்கினேன். அன்று தொடங்கி 67 ஆண்டுகளாக இந்த முறையைத் தொடர்கிறேன். ஆரம்பத்தில் சிற்சில எதிர்ப்புகளும், முகத்திருப்பல்களும் நடக்கத்தான் செய்தன. இப்போது தேதி கொடுக்க முடியாத அளவுக்கு திருமண அழைப்புகள் வருகின்றன” என்கிறார் இளங்குமரனார்.
எப்படிச் செய்வது தமிழ்முறைத் திருமணத்தை?
தமிழறிஞர்கள் வந்துதான் நடத்த வேண்டுமென்பதில்லை. வீட்டுப் பெண்களே திருமணத்தை நடத்திவைக்கலாம்.
திருமணத்திற்கு வேண்டிய பொருட்கள்: மணமாலை 2, துணைமாலை 2, பெற்றோர்களுக்கு மாலை 4, வாய்ப்பிருந்தால் வள்ளுவர் சிலை அல்லது படம், உதிரிப்பூ, விளக்கு ஒன்று, தீப்பெட்டி ஒன்று, ஒரு ஒலிவாங்கி (மைக்).
மணமகனுக்கு வலதுபக்கம் மணமகள் இருக்குமாறு மணமக்களை மாலையுடன் இருக்கையில் அமர்த்த வேண்டும். மணமக்களின் பெற்றோரையும், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்போரையும் மேடைக்கு அழைக்கவும். மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்கி அமர்தல். மொழி, இயற்கை வாழ்த்து பாடுதல். விழாவுக்கு வந்துள்ள தாய்மார்கள், சான்றோர்கள், சுற்றம் சூழல் அனைவரையும் வணங்கி, தங்களை வாழ்த்துமாறு கோருதல். அனைவரும் எழுந்து மணமக்கள் வாழ்க வாழ்க என்று கூறுதல்.
பெற்றோரைப் பார்த்து “பெற்றோர் வாழ்க! பெருந்தகை வாழ்க!!” என்று மணமக்கள் சொல்ல, “எங்கள் கண்ணே! கண்ணின் மணியே! எங்கள் வாழ்வே வளமே வாழ்க!!” என்று பெற்றோர்கள் பிள்ளைகளை வாழ்த்துவார்கள். முதிய தாய்மார்கள் வழிபட்டுத்தந்த மங்கல நாணை, பெண்ணின் தாயும், மாப்பிள்ளையின் தாயும் எடுத்து மணமகன் கையில் தந்து மணமகளுக்கு அணிவிக்கச் செய்தல். கெட்டிமேளம் அல்லது குரவை சத்தம் எழுப்புதல்.
மணமக்கள் இருவரும், ‘இனி நாம் ஒருவர்; நீ வேறு நான் வேறு இல்லை’ என்பதன் அடையாளமாக துணை மாலைகளை மும்முறை மாற்றுதல். ‘என் வீடு உன் வீடு; என் வாழ்வு உன் வாழ்வு; என் உறவு உன் உறவு என்ற வேறுபாடு இனி நமக்குள் இல்லை. இனி நம் வீடு, நம் வாழ்வு, நம் உறவு’ என்பதன் அடையாளமாக மணமக்கள் இடமாறி அமர்தல். மணமகனின் இதயம் இருக்கும் இடப்பாகமாக பெண் அமர்ந்த பிறகு, இல்லுறை தெய்வ வழிபாடாக குடும்ப விளக்கு ஏற்றுதல். மணமக்களை வாழ்த்தி மலர் தூவுதல். வந்திருப்போர் வாழ்த்திப் பேசுதல். விருந்தோம்பல். இதுதான் திருமணம். காலம் கருதி இதனை சுருக்கியோ, கொஞ்சம் பெருக்கியோ நடத்தலாம்” என்கிறார் இளங்குமரனார்.
இதற்கென 38 பக்கங்களில் சிறு பிரசுரம் வெளியிட்டுள்ள இளங்குமரனார், தமிழ்நெறி பிறந்தநாள், பெயர் சூடுவிழா, காதணி விழா, பூப்புநீராட்டு விழா, வளைகாப்பு விழா, புதுமனை புகுவிழா, மணிவிழா போன்றவற்றுக்கும் நூல்களை எழுதியுள்ளார்.
“எப்படி அய்யா இவ்வளவையும் எழுத எப்படி நேரம் கிடைக்கிறது?” என்று கேட்டால், “நான் கைபேசி மட்டுமல்ல, தொலைபேசியும் பயன்படுத்துவதில்லை. வாசிப்பது, சிந்திப்பது, எழுதுவது இந்த மூன்றையும்தான் என் வேலையாக வைத்திருக்கிறேன். காலை 5 மணிக்கு ஆரம்பித்தால், உணவு இடைவேளை போக மாலை 5 மணி வரையில் எழுதுவேன். சிந்தனைத் தெளிவோடு எழுதினால், அடித்தல் திருத்தலோ, பிழை திருத்தமோ தேவைப்படாது. நேரடியாக அச்சுக்குக் கொடுத்துவிடலாம்” என்கிறார் இளங்குமரனார்.
தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதை வெறுத்து ஒதுக்கும் இயல்புகொண்ட இவர், தனது புத்தகங்களைக் கூட பத்திரிகை விமர்சனங்களுக்கு அனுப்புவதில்லை. விருதுகளுக்கும் விண்ணப்பிப்பதில்லை. தேடிவரும் விருது, பரிசுத் தொகைகளையும் தமிழ் வளர்ச்சிக்கே கொடுத்துவிடுவது இவரது இயல்பு. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நூலகத்துக்கு 20,000 நூல்களை வழங்கியிருக்கிறார் என்கிறார்கள் மதுரை தமிழ் அன்பர்கள்.
- கே.கே.மகேஷ்
தமிழ் மொழியியல் மூதறிஞர் இரா.இளங்குமரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக