திங்கள், 26 ஜூலை, 2021

கலைக்கப்பட்டது கர்நாடகா அமைச்சரவை... ஆளுநர் அதிரடி.. அடுத்தது என்ன?

 tamil.asianetnews.com  - vinoth kumar  -    முதல்வர் எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட நிலையில் அவரது தலைமையிலான கர்நாடக அமைச்சரவையை மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் கலைந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி எடியூரப்பா 4-வது முறை முதல்வராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. இந்நிலையில், எடியூரப்பாவிற்கு எதிராக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடந்த சில மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தலைமையும் நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் முதல்வர் பதவியை எடியூரப்பா இன்று ராஜினாமா செய்தார்.



இதனைத் தொடர்ந்து எடியூரப்பா கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி 4வது முறையாக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா சரியாக அதே நாளில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து அம்மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, புதிய முதலமைச்சர் யார்? என்பதை பாஜக தேசிய தலைமையும், கர்நாடக தலைமையும் சேர்ந்து தீர்மானிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, அமைச்சர்களும் புதிதாக பொறுப்பேற்றுக்கொள்வார்கள். இந்த சூழலில் புதிய முதல்வருக்கான உத்தேச பட்டியலில் பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான சந்தோஷ், முருகேஷ் நிராணி ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், யாரை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கலாம் என பாஜக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? - பாஜக தேசிய தலைமை ஆலோசனை!
Published on 26/07/2021 (15:24) | Edited on 26/07/2021 (15:40)
நக்கீரன் செய்திப்பிரிவு  : கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா இராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில்,
அவர் இன்று (26.07.2021) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய எடியூரப்பா, தன்னை இராஜினாமா செய்யும்படி யாரும் நிர்பந்திக்கவில்லையென்றும், தானாகவே இராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஆளுநராக நியமிக்கப்படப் போவதாக வெளியான தகவல்களையும் எடியூரப்பா மறுத்துள்ளார்.
இராஜினாமா செய்த எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து முதல்வராக பொறுப்பு வகிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இதில் கர்நாடக முதல்வராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும் கலந்துகொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: