செவ்வாய், 27 ஜூலை, 2021

தலிபான்களுக்கு பயந்து ஆப்கான் ராணுவ வீரர்கள் வேறு நாடுகளுக்கு ஓட்டம்

 tamil.news18.com : அமெரிக்க ராணுவம் வெளியேறியதால் அம்போ என்று விடப்பட்ட ஆப்கான் ராணுவத்தினர் தலிபான்களின் பதிலடிக்காகவும் பழிவாங்கலுக்காகவும் அஞ்சி பாகிஸ்தானில் தஞ்சம் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்டன. இதன் காரணமாக அங்கு தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளை கைப்பற்றுவதில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருகிறது.இந்த நிலையில் தாலிபன் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

5 ராணுவ அதிகாரிகள் உள்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், ராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஜூலை 5ம் தேதி தலிபான்கள் தாக்குதலில் பயந்து போய் 1,000 ஆப்கான் ராணுவ வீரர்கள் தாஜிகிஸ்தானுக்கு ஓடியதும் நடந்தது.

அமெரிக்கா, பிரிட்டன் படைகள் அங்கிருந்து வாபஸ் பெற்று எந்த ஒரு தீர்வும் தராமல் அம்போவென்றி விட்டு விட்டு ஆப்கானிலிருந்து சென்றதால் தலிபான்கள் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர், ‘நாங்கள் வென்று விட்டோம், அமெரிக்கா தோற்று விட்டது’ என்ற முழக்கமே அது.

கருத்துகள் இல்லை: