வியாழன், 29 ஜூலை, 2021

தாலிபான்கள் பயங்கரவாதிகள் இல்லை.. அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது..' இம்ரான் கான் திட்டவட்டம்

  Vigneshkumar  -    Oneindia Tamil  :   இஸ்லாமாபாத்: ஆப்கனில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாலிபான்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, மறுபுறம் தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டன.
இதனால் பல்வேறு இடங்களிலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தாலிபான்கள் இதுவரை சுமார் 80% ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் தற்போதுள்ள ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் தாலிபான்களுக்குப் பின்னால் இருந்து பாகிஸ்தான் உதவுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.


பாகிஸ்தான் இதுவரை இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்துள்ள நிலையில்,
தாலிபான்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் பிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "தாலிபான்கள்குக்கு பாகிஸ்தான் உதவுவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். அப்படிக் குற்றஞ்சாட்டுபவர்கள் ஏன் ஆதாரங்களைக் கொடுக்க மறுக்கிறார்கள்.
மேலும் தாலிபான்கள் ஒன்றும் பயங்கரவாத அமைப்புகள் கிடையாது. அவர்கள் சாதாரண குடிமக்கள் தான். எனவே அவர்களை ஏன் பாகிஸ்தான் ராணுவம் வேட்டையாட வேண்டும்?

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்க மிஷனில் பாகிஸ்தானும் இணைந்து பணியாற்றியது. இது மட்டுமின்றி போரினால் வீடுகளை இழந்த பல லட்சம் ஆப்கன் அகதிகளைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. என்னைப் பொறுத்தவரை ஆப்கன் விஷயத்தில் அமெரிக்கா தான் மொத்தமாகக் குழப்பிவிட்டது எனச் சொல்லுவேன்.

அமெரிக்கப் படைகள் இங்கு வலுவாக இருந்த போதே, அரசியல் ரீதியான முடிவை எடுத்திருக்க வேண்டும். படைகளை வாபஸ் பெற்றுக் கொண்ட பிறகு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை முறையில் தீர்வு காணுங்கள் எனத் தாலிபான்களிடம் சொல்வதால் எந்த பயனும் இல்லை. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாங்கள் வென்றுவிட்டோம் என்றே தாலிபான்கள் கருதத் தொடங்கியது.

அதேநேரம் போர் என்பது எதற்கும் தீர்வல்ல. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஆப்கன் அரசு அமையும்போது தான் நிலைமை மாறும். அதேநேரம் ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தால், அது மிகப் பெரிய பிரச்சனையைத் தரும். குறிப்பாகப் பாகிஸ்தான் நாட்டிற்கு. ஏனென்றால், அப்போது அகதிகள் சிக்கல் பெரும் பிரச்சினையாக மாறும். அப்படியொன்று நடக்கக் கூடாது என்பது தான் அனைவரது விருப்பம்.

ஆப்கனில் விரைவில் ஸ்திரமின்மை ஏற்பட வேண்டும் என்பது தான் பாகிஸ்தான் நிலைப்பாடு. ஆப்கன் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையை எளிதாக்கவும் தயார். ஆனால், ஒருபோதும் அமெரிக்காவின் குரலாக நாங்கள் மாறமாட்டோம். அதேபோல ஆப்கனுக்கு எதிராக அமெரிக்காவின் ராணுவ தளங்களைப் பாகிஸ்தானில் அமைக்கவும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு வேண்டியது அமைதி தானே தவிரப் போர் இல்லை" என்று அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: