நக்கீரன் செய்திப்பிரிவு : சென்னையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நிமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
"ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல்நலம் குன்றிய குழந்தை இசக்கியம்மாள் உடல்நலம் தேறி வருகிறார். எழும்பூர் மருத்துவமனையில் 10 நாட்களாகச் சிகிச்சைப் பெற்று வருகிறார். குழந்தைக்கான அந்த உணவு குழாய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், திரவ வகையான உணவோ, திட வகையான உணவோ உட்கொள்ள முடியாத சூழலில் இருந்தது.
மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகச்சிறப்பாக இன்றைக்கு குழந்தையின் வயிற்றில் ஒரு துளையின் மூலம் உணவைச் செலுத்துகிறச் சிகிச்சை அளித்து உணவு வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக, 6 கிலோ எடையுள்ள அந்த குழந்தை இப்பொழுது 8 கிலோ அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நிச்சயம் இந்த மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பினால் பெரிய அளவில் அந்த குழந்தை நலம் பெற்று இல்லம் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு மாதத்திற்கு மேலாக இங்கு தங்கியிருக்க வேண்டிய சூழல் அந்த குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் இருக்கிறது. குழந்தையின் தாயும், தந்தையும் இந்த மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து உறங்குகிற நிலை இருந்துக் கொண்டிருக்கிறது. எனவே, எனக்கென்று வழங்கப்பட்டிருக்கிற சட்டமன்ற விடுதியில் இருக்கிற வீட்டை அவர்களுக்கு தந்துருக்கிறேன். அவர்கள் இங்கே எவ்வளவு நாட்கள் தங்கியிருப்பார்களோ, அவ்வளவு நாட்களுக்கும் தேவையான உணவுப்பொருட்களை அங்கே வாங்கி வைக்க சொல்லிருக்கிறேன். அந்த விடுதிக்கான சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இங்கே எவ்வளவு நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டுமோ, ஒரு மாதம் ஆனாலும், இரண்டு மாதம் ஆனாலும் என்னுடைய அந்த வீட்டில் தங்கியிருந்து, அந்த குழந்தையை நலம் பெற செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற வகையில் மருத்துவர்களும் இன்றைக்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தையின் பெற்றோருக்கு சட்டமன்ற விடுதியின் சாவியை வழங்கிய அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக