செவ்வாய், 27 ஜூலை, 2021

பரத நாட்டியதத்தில் வைதிக சனாதன வர்ணாசிரமக் (ஜாதீய) கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளது

May be an image of one or more people and text that says 'பரதநாட்டியம் ஆடும்போது நால் வர்ணத்தவர்களை உணர்த்த உதவும் முத்திரைகள்: பிரம்மணர்:இரு கைகளிலும் சிகரம் பிடித்து, இடக்கையை மார்பின் நேரே நீட்டி வலக்கையைப் பூணூல் தரிப்பதுபோல் மார்பின் குறுக்கே காட்டி, (இடக்காலைத் தொட்டு வல இடுப்பு மட்டும் பொருந்தும் படியாய்க்) காட்டல் கூத்திரியர் இடக்கையில் சிகரத்தைச் சேர்த்து, வலக்கையில் பதாகத்தைக் (உள்ளங்கை) குறுக்கே காட்டல் வைசியர்:வலக்கையில் கடகாமுகமும் இடக்கையில் அம்சாசியமும் பிடித்தல். சூத்திரர்: இடக்கையில் சிகரமும், வலக்கையில் சூசியும் (கால்களில் அணியும் பாதரட்சை) சேர்த்தல் -அபிநயதர்ப்பணம் எனும் பரதநாட்டிய நூல்'

Dhinakaran Chelliah  :  பரதநாட்டியம் குழந்தைகள் ஜாக்கிரதை
பரத நாட்டிய வகுப்புக்களில் நால் வர்ணம் மற்றும் ஜாதிகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கப் படுகிறது என்ற எனது பதிவைப் பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி யிருந்தார்கள் பலர். உண்மையாகவா? என்றும் சிலர் கேள்வியும் எழுப்பியிருந்தனர்.
இந்தப் பதிவில் அதற்கான ஆவணங்களாக இரண்டு நூல்களில் உள்ளவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.மற்ற நூல்களில் உள்ளவற்றைத் தனிப் பதிவுகளில் எழுத வேண்டும்.அந்த நூல்களையும் இந்தப் பதிவில் சேர்த்தால் மிகப் பெரிய பதிவாகிவிடும்.
கவனமும் பெறாது.
தமிழர்களின் சதிர் ஆட்டமே பரதநாட்டியம் எனும் வரலாற்றைப் பற்றியதல்ல இப்பதிவு. இது நடைமுறையில் பரத நாட்டியம் என சொல்லிக் கொடுக்கப்படும் நாட்டியக் கலையில் உள்ள வைதிக சனாதன வர்ணாசிரமக் கருத்துக்கள் பற்றியது.  

முதல் நூல்: நந்திகேசுவரர் இயற்றிய அபிநயதர்ப்பணம்.டெல்லி,சங்கீத நாடக அகாடமி பொருளுதவியுடன் வெளியிடப்பட்ட நூல்.தமிழ் மொழிபெயர்ப்பு: திரு.வீரராகவையன் அவர்கள்


இந்த நூல் M.A in Fine Arts (Annamalai University) போன்ற முதுகலை பட்டப் படிப்பிற்கு பாடநூலாக உள்ளது.
“ஆதியில் பிரமன் நாட்டிய வேதத்தைப் பரதமுனிக்குக் கற்பித்தார்; பரதர், கந்தர்வர்களையும் அப்ஸரஸ்களையும் சேர்த்துக்கொண்டு, சிவபிரான் சந்நிதியில் நாட்டியம்,நிருத்தம், நிர்த்தியம் இவற்றை ஆடிக்காட்டினார். சிவபிரான் தாம் இயற்றிய மகத்தான நர்த்தனத்தை நினைவு மூட்டிக்கொண்டு, தம் கணங்களை அழைத்து, அந்த நர்த்தனத்தைப் பரதமுனிக்குக் கற்பிக்கச் செய்தார். இதற்கு முன் அவர் பார்வதியைக் கொண்டு அம்முனிவர்க்கு லாஸ்யத்தைக் கற்பிக்கச் செய்திருந்தார். தண்டு முனிவரிடமிருந்து(நந்திகேசுவரர்)
இருஷிகள்(ரிஷி மற்றும் முனிவவர்கள்)தாண்ட வத்தைக் கற்று மானிடர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

பார்வதி தேவி, பாணனுடைய குமாரி உஷைக்கு லாஸ்யத்தைக் கற்பித்திருந்தாள். உஷை அதனைத் துவாரகையிலுள்ள இடையர் பெண்களுக்குக் கற்பிக்க அவர்கள் ஸெளராஷ்டிரப் பெண்களுக்குக் கற்பிக்க, அவர்கள் மூலமாய் அக்கலை பிறநாடுகளுக்குப் பரவிற்று. இவ்விதம் பாரம்பரியமாய் இக்கலை உலகில் பரவி நிலைக்கலாயிற்று." என ஆரம்பிக்கிறது இந்நூல்.
ஜாதி வர்ண பேதம் பற்றி பகுதியில் குறிப்பிடப்படுகிறது.அதாவது  நான்கு வர்ணத்தவர்களை நாட்டியத்தில் எப்படிக் குறிப்பிடுவது என்பதே அது.இனி நூலில் உள்ளதைக் கீழே தருகிறேன்;
நான்குசாதிகள்#
(1).பூசுரர்(அந்தணர்):

இருகையுஞ் சிகரங் கூட்டி, இடக்கைமார்பு நேரே நீட்டி
ஒரு்வலக் கைபூ ணூல்போ லுரத்திலே குறுக்கே காட்டி
வருமிடத் தாளைத் தொட்டு வலதுபா லிடைமட் டுக்கும்
பொருத்தியே பிடித்தால் மிக்க பூசுரர் தமக்கே யாமே.
இலக்: இரு கைகளிலும் சிகரம் பிடித்து, இடக்கையை மார்பின் நேரே நீட்டி, வலக்கையைப் பூணூல் தரிப்பதுபோல் மார்பின் குறுக்கே காட்டி, (இடக்காலைத் தொட்டு வல இடுப்பு மட்டும் பொருந்தும் படியாய்க்) காட்டல்.
(2) க்ஷத்திரியர் (3) வைசியர்:
சிகரத்தை இடக்கை சேர்த்துச் செறிபதா கம்வ லத்தில்
தகைமையாய்க் குறுக்கே காட்டில் சத்திரி யருக்கே யாகும் ;
மகிழ்கட காமு கக்கை வலக்கையில் சேர்த்து,அம் சாசியம்
திகழ்இடம் சேர்த்தால் வைசியச் செட்டியர்க் காகுந் தானே.
(2) க்ஷத்திரியர்:
இலக்: இடக்கையில் சிகரத்தைச் சேர்த்து, வலக்கையில் பதாகத்தைக் குறுக்கே காட்டல்.
குறிப்பு : இடக்கையில் சிகரத்தைக் குறுக்காகப் பிடித்து, வலக்கையில் பதாகம் கொள்வது என்று வடமொழி நூல் கூறும்.
(3) வைசியர்:
இலக் : வலக்கையில் கடகாமுகமும் இடக்கையில் அம்சாசியமும் பிடித்தல்.
(4) வேளாளர் (5) பதினெண் சாதிகள்:
வாமத்தில் சிகரஞ் சேர்த்து வலக்கையில் சூசி சேர்த்தால்
பூமிக்குள் சூத்திரர்க்காம்;புகழ்பதி னெண்சா திக்கும்
காமித்துஅந் தந்தச் சாதி கலந்தி டுதலைக் காட்டி
நேமித்தார் சாதி பேதம் நீடுல கறியத் தானே.
(4) வேளாளர்:
இலக்: இடக்கையில் சிகரமும், வலக்கையில் சூசியும் (கால்களில் அணியும் பாதரட்சை) சேர்த்தல்.
குறிப்பு: வலக்கையில் மிருகசீருடம் பிடிப்பது என்பது வடமொழிச் சுலோகம்.
(5) பதினெண் சாதியர்:
இவ்வாறே பதினெண் சாதிகளுக்கும் அந்த அந்தச் சாதி கலந்திடுதலைக் காட்டல் என்று நியமித்தனர்.
இரண்டாவது நூல்: பரதார்ணவம்- தஞ்சை சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் வெளியீடு, Bharatarnava of Nandikeswara மொழிபெயர்ப்பு: Sri.K.Vasudeva Sastry
இந்த நூல் பரமசிவனது முதல் மாணாக்கராகிய தண்டு எனும் பெயருடைய நந்திகேசுவரர் எழுதிய நூலாகக் கருதப்படுகிறது.பரத முனிவருக்கு முதலில் நடிப்புக் கலை மட்டுமே தெரியும் அவருக்கு நர்த்தனக் கலையை பரமசிவன் உத்தரவுப் படி தண்டுவே கற்றுக் கொடுத்ததாக ஐதீகம்.
4000 ஸ்லொகங்களைக் கொண்ட பரதார்ணவம் நர்த்தன நூல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இனி இந்நூலில் உள்ள ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.
**HANDS SHOWING THE FOUR CASTES**
When Catura Hasta (Asamyuta No. 21) is shown facing oneself, it denotes the Brahmin.
When the shoulder is pointed out by Pataka mudra it denotes a Ksatriya. It is also used to denote the shoulder and Jayalakṣmi or the goddess of victory, the quiver or a person at the back.
When Pataka Mudra points to the thigh it denotes the Vaisya.
When the foot is pointed out by Ardha Pataka (Asamyuta No. 3) it denotes the Sudra.

***ஜாதிகளைக்குறிக்கும் முத்திரைகள்***
சதுரஹஸ்த (அஸம்யுதம் நெ.21) முத்தி ரையைத் தன்னை நோக்கிப்பிடித்தால் பிராம்மண ஜாதி யைக் குறிக்கும்.
பதாகமுத்திரையின் நுனியால் தோளைச்சுட்டிக் காட்டினால் க்ஷத்திரிய ஜாதியைக்குறிக்கும்; அல்லது புஜத்தையோ, ஜெயலக்ஷ்மியையோ, அம்புறாத்துணியையோ, பின்புறமுள்ள ஒருவரையோ குறிக்கும்.
பதாக முத்திரையால் துடையைச் சுட்டிக்காட்டினால் வைசிய ஜாதியைக்குறிக்கும்.
அர்த்தபதாக (அஸம்யுதம் நெ. 3) முத்திரையால் பாதத்தைச் சுட்டிக்காட்டினால் சூத்ர ஜாதியைக் குறிக்கும்.
**In the account of creation contained in the Purusha Sukta the four castes are said to bo created from the Lord's Face, Shoulders, Thighs and Foot respectively.
***ருக்வேதத்தில் புருஷ ஸுக்தம் எனும் பகுதியில் பிரம்ம, அத்திரிய, வைசிய, சூத்திரர் என்னும் நான்கு வர்ணங்களும் சிருஷ்டிகர்த்தாவின் முகம், தோள்கள், துடை, பாதங்களிலிருந்து உண்டானதாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.
*************************
இதையெல்லாமா பரத நாட்டியத்துல சொல்லித் தர்றாங்க… ஐயய்யோ என் குழந்தையும் பரத நாட்டியம் படிக்கிறாளே,படிக்கிறானே.. என்ன செய்வது?!, எனக் கேட்போருக்கு:
கலைகள்,பண்பாடு,வழிபாடு,ஐதீகம்,ஆச்சாரம்,கலாச்சாரம் எனும் பெயரில் நாம் வர்ணம் ஜாதிகளையே குழந்தைகளிடம் திணிக்கிறோம்.சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும், அதாவது நாம் தெரிந்தும் தெரியாமலும் கடைப்பிடிக்கும் வைதிக சனாதனத்தின் மூலம்.
வைதிக சனாதனம் என்பது சாதீய வர்ணமும் அது சார்ந்த தர்மம் மட்டுமே.தர்ம ம் என்பது உயர்ந்தது என்ற கருத்தை சுமந்தது போதும். உண்மை அதுவல்ல, தர்மம் போன்ற மோசமான கெடிய சொல் வேறெதுவும் இல்லை.
நாட்டியம், மருத்துவம்,ஆன்மீகம்,தெய்வ வழிபாடு,கலை,இலக்கியம், பண்பாடு,ஜோதிடம்,சிற்பம்,தர்மம், நீதி,யோகம்,ஞானம்,சங்கீதம்,சாஸ்திரம்,
ஆகமம்,உபநிடதம்,புராணம்,வேதம் என அனைத்திலும் வைதிக கருத்தான வர்ணாஸ்ரம தர்மம் இருக்கிறது. அவற்றிலிருந்து வர்ணாசிரமத்தைத் தனியே பிரிப்பது இயலாது.
அதற்குப் பதிலாக வைதிக சடங்கு,வழிபாடு,பூசை,அபிசேகம்,
ஹோமம்,சம்ஸ்காரங்கள்,
அனுஷ்டானங்கள்,ஐதீகம்,ஆச்சாரம்,
பத்யதி,செய்முறை,பரிகாரம்,வைதிக கலை, பண்பாடு,கலாச்சாரம்,பண்டிகை இவைகளைப் புறக்கணித்தாலே போதுமானது.
இந்த இரண்டு நூல்களைத் தவிர ஏகப்பட்ட நாட்டிய நூல்கள் உண்டு. அடுத்த பதிவுகளில் அவற்றில் ஓரிரு நூல்களைப் பற்றி எழுதுகிறேன்.
பி.கு: மேலே குறிப்பிட்டுள்ள நூல்களின் பக்கங்களை comments பகுதியில் இணைத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை: