புதன், 12 மே, 2021

எதிர்காலத்தில் அமைச்சரவை மாற்றங்கள்? பல புதியவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும்! முதல்வர் ஸ்டாலின்...

ஸ்டாலின்

விகடன் -உமர் முக்தார்  :   133 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது தி.மு.க. 100-க்கு 85 சதவிகித எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.
தி.மு.க சீனியர் ஒருவர் நம்மிடம், “சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதல்வராக வேண்டும் என்கிற ஸ்டாலினின் அரை நூற்றாண்டு கனவு நனவாகிவிட்டது. இந்த மகிழ்ச்சியைத் தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர்களோடும் பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் முதல்வர்.


அந்த மகிழ்ச்சி என்னவெனில், வெற்றி பெற்றிருக்கும் 133 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 95 பேருக்கு, இந்த 5 ஆண்டுகளில் பல கட்டங்களாக அமைச்சர் பதவி கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்றவரிடம், எதற்காக இப்படியொரு ஆசை முதல்வருக்கு எனக் கேட்டோம்.

தொடர்ந்து பேசிய அந்த சீனியர், “இந்தமுறை சீனியர் அமைச்சர்களுக்கு கேபினட்டில் இடம் கொடுக்கக் கூடாது, அவர்களை மதிக்கும் வகையில் எம்.எல்.ஏ-க்களாக மட்டும் வைத்திருப்போம் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம். ஆனால், துரைமுருகன், ஐ.பி., பொன்முடி, முத்துசாமி போன்ற அத்தனை சீனியர்களும் ஸ்டாலினைத் தனித்தனியாக சந்தித்து, ‘இதுதான் எங்களது கடைசி காலம்’ என சென்டிமென்டாக வேண்டுகோள் விடுக்க, வேறு வழியின்றி அத்தனை சீனியர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தார். எனினும், நியமிக்கும்போதே ‘சில மாதங்களுக்குள் அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது’ என எச்சரித்தும் இருக்கிறார் ஸ்டாலின். அடுத்த 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் அதனைச் செய்யவிருக்கிறார் ஸ்டாலின்.

தனது குடும்பத்தினரிடம் இது பற்றி ஸ்டாலின் பேசுகையில், ‘சுமார் 13 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கவே இல்லை. ஓரிரு சமூகங்களும் கேபினட்டில் விடுபட்டுள்ளது. அவர்களை எல்லாம் அப்படியே ஒதுக்கிட முடியாது. நான் பதவி கொடுக்காத பர்கூர் மதியழகன், அணைக்கட்டு நந்தகுமார், சங்கராபுரம் உதயசூரியன், ஜோலார்பேட்டை தேவராஜி, விழுப்புரம் லட்சுமணன், மானாமதுரை தமிழரசி, பூம்புகார் நிவேதா முருகன், சேலம் வடக்கு பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், திருப்பூர் தெற்கு செல்வராஜ், ஒட்டப்பிடாரம் சண்முகையா, ராஜபாளையம் தங்கபாண்டியன் போன்றோர் கேபினட்டுக்குத் தகுதியானவர்கள்.

சீனியர்களை ஒதுக்க முடியாது என்பதால் தற்போது அவர்களுக்குக் கொடுத்துவிட்டேன். விடுபட்டவர்கள் எல்லோரும் என்னைப் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கும். 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் கேபினட் மாற்றம் நிச்சயம் இருக்கும். அதில் சிலருடைய துறைகள் மாற்றி அமைக்கப்படுவது மட்டுமின்றி, சிலரை நீக்கிவிட்டு விடுபட்டவர்களை சேர்ப்பேன். இதேபோல், 5 ஆண்டுகளில் பலமுறை அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். அதன்மூலம், 5 ஆண்டுகள் முடிவில் கட்சியிலிருக்கும் 133 சட்டமன்ற உறுப்பினர்களில், 95 பேராவது அமைச்சர்களாக ஆகி இருப்பார்கள்’ என முதல்வர் பேசியிருக்கிறார்.
 

கருத்துகள் இல்லை: