திங்கள், 10 மே, 2021

நரேந்திர மோடி என்ற பிராண்டின் மீது இடியாக விழுந்த கொரோனா .. பி பி சி

மோடி
BBC -அபர்ணா அல்லூரி பிபிசி செய்தியாளர், :   டெல்லி “ஊரடங்கிலிருந்து கோவிட் ஊழிக்காலத்துக்கு இந்தியாவை தலைமையேற்று அழைத்துச் சென்றிருக்கிறார் நரேந்திர மோதி” – என்று விமர்சித்தது இங்கிலாந்தைச் சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி. இந்த செய்தியை மறுபிரசுரம் செய்த ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்று, கடுமையாக எழுதப்பட்ட ஒரு சுருக்கத்தையும் சேர்த்துள்ளது : “மூர்க்கத்தனம், அதீத தேசியவாதம், திறமையற்ற அதிகாரத்துவம் எல்லாம் சேர்ந்து இமாலயப் பிரச்னையை உருவாக்கியிருக்கின்றன. இந்தியர்கள் மூச்சுத்திணறும்போது, கூட்டங்களைப் பெரிதும் விரும்புகிற இந்தியப் பிரதமர் குளிர்காய்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்”.

இந்தியாவிடமிருந்து இதற்கு ஒரு எதிர்வினை கிளம்பியது என்றபோதும், போற்றிப் பாதுகாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோதியின் பிம்பம் பெரிதாக மோசமடைந்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

இந்தியாவையே தண்டித்துக்கொண்டிருக்கிற கொரோனா இரண்டாம் அலை பற்றிய செய்திகளும் விவரங்களும் சர்வதேச ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாகியிருக்கின்றன – அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவும் படுக்கைகளுக்காகவும் காத்திருந்தபடியே மூச்சுத்திணறும் மக்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தொடங்கி மருத்துவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்காகவும் குடும்ப உறுப்பினர்கள் அலைந்து திரியவேண்டிய கையறு நிலை, கொத்துக்கொத்தாக நடக்கும் பிண எரிப்புகள், இறந்தவர்களை எரிப்பதற்குப் போதுமான இடம் இல்லாததால் இடுகாடுகளாக மாறிய வாகன நிறுத்தத் தளங்கள்.

உலகெங்கிலும் இந்த செய்தியைப் பின்பற்றிவரும் பல ஊடகங்கள் இதற்குக் காரணமாக நரேந்திர மோதியை சுட்டிக்காட்டுகின்றன. நுணுக்கமான விஷயங்களைக் கூட கவனிக்கும் திறமையான நிர்வாகியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவர், இந்தியாவில் தொற்று எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருப்பதால் பெரிதும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்..

பிம்பத்தில் விழுந்த விரிசல்

“செயல்திறன்மிக்க ஒரு தலைவர் மோதி என்று கூறப்பட்டது ஆனால் தற்போது அந்த செயல்திறன் மீது மக்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்கிறார் அரசியல் விஞ்ஞானி மிலன் வைஷ்ணவ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

“அரசு தடுமாறுகிறது என்பதோ, அது சம்பவ இடங்களில் இல்லவே இல்லை என்பதோ மட்டும் பிரச்னையல்ல. இந்த சூழலின் தீவிரத்தை அதிகப்படுத்தியதே அரசுதானே” என்கிறார்.

கோவிட் எதிர்வினையில் தவறு செய்த ஒரே தலைவர் மோதி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவரது வீழ்ச்சி அபிரிமிதமானது என்கிறார் வைஷ்ணவ். “முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் போல்சினாரோ ஆகியோரோடு ஒப்பிட்டால், மோதி கோவிட் மறுப்பாளர் அல்ல. ஆனாலும் தொடர்ந்து எச்சரிக்கைகள் வந்தபோதிலும் அவர் இப்போதைய பிரச்னையைத் தடுக்கவில்லை” என்கிறார்.

தொடர்ந்து பல வாரங்களுக்கு கங்கைக்கரையில் நடத்தப்பட்ட புனித நீராடல் விழாவை அவர் அனுமதித்தார். மேற்கு வங்கத் தேர்தல் ஒரு மாதம் வரை நீளவேண்டும் என்று வலியுறுத்தினார். பிரம்மாண்டக் கூட்டங்களில் முகக்கவசமின்றிப் பங்கெடுத்த அவர், இத்தனை பெரிய கூட்டமா என்று அதிசயித்தும் இருக்கிறார்.

“ஊரடங்கை அனுபவித்த உலகம் இப்படிப்பட்ட அலட்சியங்களையும் அத்துமீறல்களையும் கண்டு அதிர்ச்சியடைந்தது”, என்கிறார் எகனாமிஸ்டின் இந்திய செய்தியாளர் அலெக்ஸ் ட்ரெவேலி,

இந்த செயல்பாடுகள் எல்லாம் மோதி என்கிற ஒரு பிராண்டுக்கான நினைவுறுத்தலாகவும் இருந்தன. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நாட்டின் புகழ்பெற்ற வலுவான தலைவர் என்கிற ஒரு முத்திரையோடு ஜனவரி மாதம் இந்தியாவின் தனித்தன்மையை அவர் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டத்தில் உலகிற்குப் பறைசாற்றினார்.

“வெளிநாடுகளிலிருந்து பார்ப்பவர்களுக்கு, அவரது தேசியவாத எண்ணங்கள் எப்போதுமே தொழில்நுட்ப சர்வாதிகாரத்துடனும் செயல்திறனுடனும் பிணைக்கப்பட்டுதான் இருந்தன. ஆனால் கோவிட் எதிர்வினையில் இந்த செயல்திறனைப் பார்க்கவே முடியவில்லை” என்கிறார் நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் க்றிஸ்டோபர் க்ளாரி.

ஜனரஞ்சகமான ஒரு தலைவராகவும் கண்காணிப்புத்திறன் நிறைந்த ஒரு நிர்வாகியாகவும் முன்வைக்கப்படுகிற மோதியின் பிம்பம் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே சிதையத் தொடங்கிவிட்டது எனலாம். பெரும்பாலும் பணத்தையே நேரடியாக நம்பியிருந்த லட்சக்கணக்கான மக்களை அது புரட்டிப்போட்டது. சென்ற வருடம் கோவிட் பரவலைத் தடுக்க ஓரிரவில் ஊரடங்கை அறிவித்தார். பல லட்சம் பேருக்கு வேலை போனது. லட்சக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். இந்தியப் பொருளாதாரம் இன்னும் அந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை.

பணமதிப்பிழப்பின்போது அது சட்டத்துக்குப் புறம்பான பணத்தை வெளிக்கொண்டுவரும் எனவும், ஊரடங்கு கோவிட் பரவலைத் தடுக்கும் என்றும் விளக்கிய மோதி, இந்த செயல்பாடுகளால் நன்மையே விளையும் என்றார். ஆனால் இப்போதைய அவரது சறுக்கலை அப்படி நியாயப்படுத்திவிடமுடியாது என்கிறார் வெளிநாட்டுக் கொள்கை இதழாசிரியர் ரவி அகர்வால்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ஜி.டி.பி போன்ற வெற்று எண்களை விளக்கம் கொடுத்து ஒப்பேற்றிவிடலாம். ஒரு சகோதரனின் மரணத்துக்கு என்ன விளக்கம் தரமுடியும்? அவ்வப்போது தவறு செய்தால்கூட, அவர் எப்போதும் தங்களை நம்புகிறார் என்றும், தங்களுக்காகவே போராடுகிறார் எனவும் இந்தியர்கள் தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவரது உள்நோக்கம் என்ன என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். மோதி என்கிற பிம்பத்தில் வெளிப்படையாக தெரியக்கூடிய ஒரு விரிசல் விழுந்திருக்கிறது” என்கிறார் அகர்வால்.

பிராண்டை உருவாக்குவதும் அழிப்பதும்

“மோடி செயல்திறன் நிறைந்தவர்” என்று அறிவித்தது 2012 டைம் இதழின் அட்டைப்படம்.

2002ல் கிட்டத்தட்ட 1000 பேர், பெரும்பாலும் இஸ்லாமியர்கள் குஜராத் கலவரத்தில் இறந்தார்கள். அறுபது இந்துக்கள் ரயில் தீவிபத்தில் இறந்தபின்பு இந்தக் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தை அனுமதித்ததாக அப்போதைய குஜராத் முதல்வர் மோதி மீது குற்றம் சாட்டப்பட்டது. தவறு செய்யவில்லை என்று மறுத்தவர், சிக்கலின்றி அந்தக் குற்றச்சாட்டிலிருந்து வெளியில் வந்தார்.

2012ல், “நல்ல நிர்வாகம், செயல்திறன் மிக்க ஆட்சி ஆகியவற்றுக்கான உதாரணம்” என்று அவரது ஆதரவாளர்கள் அவரைப் புகழ்ந்தார்கள். மற்றவர்களோ, “எதேச்சதிகாரம் மிக்க தனி நபர்” என்றும் “மோசமான பிரதிநிதி” என்றும் வர்ணித்தனர். ஆனாலும் அவரது வருகை புதியதாக இருந்ததால் குஜராத் மலர்ந்து வணிகம் செழித்தது என்றும் எழுதினர்.

குஜராத்தை 13 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு அவர் பிரதமராக முன்னிறுத்தப்பட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை அவர் மறு சீரமைப்பு செய்வதற்கான வாய்ப்பு இது என்று சொல்லப்பட்டது. மோதி என்கிற மனிதரை இவ்வாறு முன்னிறுத்துவது அப்போதைய பாஜகவிற்குக் கொஞ்சம் ஆபத்துதான் என்றபோதும், சமரசங்களற்ற ஒரு நிர்வாகி என்ற அவரது பிம்பம் அவருக்கு வலு சேர்த்தது.

“குஜராத்தை எளிதில் இவர் நிர்வகித்தார் என்பதைப் பார்த்து நாம் விழுந்துவிட்டோம்” என்கிறார் மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் பத்திரிக்கையாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய.

புத்தம்புதிய சாலைகள், மின்சாரக் கம்பிகள், குறைந்த அளவிலான அரசாங்கக் குறுக்கீடு, அதிகரித்த தனியார் முதலீடுகள் என்று குஜராத்தில் நடந்த எல்லாமே மத்திய வர்க்க மற்றும் உயர்மட்ட பணக்கார வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆனால் “கொஞ்சமே மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய மாநிலத்தில் இதை செய்வது பெரிய விஷயமே இல்லை” என்கிறார் முகோபாத்யாய.

“அவரது புகழ் வெளிச்சத்தில் எல்லாரும் ஈர்க்கப்பட்டோம். நானும் அந்தத் தவறை செய்திருக்கிறேன். நம்மிடம் இருப்பது சிவப்புக் கம்பளம்தான், சிவப்பு நாடா அல்ல என்று அவர் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இப்போது வந்துகொண்டிருக்கும் உதவிகளுக்கான சிவப்புக் கம்பளம் எங்கே” என்கிறார் அவர். (புதிய செய்திகளின்படி அந்த உதவிகள் சுங்கத்துறையில் மாட்டிக்கொண்டிருக்கின்றன).

நரேந்திர மோதியுடைய கவசத்தில் உள்ள ஓட்டைகளை இந்தப் பிரச்னை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என்கிறார்கள் விமர்சகர்கள். மத்தியிலிருந்து ஆட்சி செய்யும் அவரது பாணி சென்ற வருடம் நம்பிக்கையளித்தது. ஆனால் இப்போதோ அவர் மாநிலங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். அவரது ஆட்சிமுறையே ஓட்டையானதாகத் தெரிகிறது. மற்ற நாடுகளுக்கு அவர் தடுப்பூசிகளை தானம் செய்தது பெரிய விஷயமாக இருந்தது. இப்போதோ அது அலட்சியமாகத் தெரிகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர்கள், மற்ற நாடுகளுக்குத் தருவோம் என்ற ஒரு வாக்குறுதியோடுதான் சர்வதேச நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றார்கள். ஆனால் இப்போதோ அந்த வாக்குறுதிகளை மறுக்குமாறு அரசே அழுத்தம் கொடுக்கிறது.எந்த பேரினவாதத்தை முன்பு வாக்காளர்கள் வியந்து பேசினார்களோ, அதே மனப்பான்மை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அவர் முடிவெடுப்பதைத் தடுக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

“தன் பெயரை அவர் எல்லா இடங்களிலும் முத்திரை போல பதித்துக்கொண்டார். இந்த சூழலில் ஒரு தோல்வி ஏற்படும்போது அதற்கும் அவர்தான் பொறுப்பு” என்கிறார் அகர்வால்.

வெளிநாடுகளிலும் ஒரு வியக்கத்தக்க பிராண்டை அவர் கட்டமைத்தார். “இந்தியாவுக்கு வெளியில் இருக்கும்போதுதான் அவர் மிகச்சிறப்பாக வெளிப்படுகிறார்” என்று எழுதியது ஒரு நாளிதழ். மேடிசன் சதுக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை அவர் ஈர்த்தார். டெக்ஸாசில் நடந்த ஹௌடி மோதி நிகழ்வில் டிரம்ப்பையும் மீறி அவர் ஜொலித்தார்.

“தன்னைப் பற்றிய பிம்பத்தை அவர் மூர்க்கமாக முன்வைத்தார்” என்கிறார் அகர்வால். “தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொண்ட இந்தியத் தலைவர்” என்றுகூட அவருக்குப் பெயர் கிடைத்தது.

அவரது தேசியவாதம் இந்தியர்களுக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஒரு களிம்பாகவே அமைந்தது. இந்தியா வல்லரசாக மாறும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. “இப்போதோ தாய்லாந்து, வியட்நாம்,வங்கதேசம் உள்ளிட்ட சமநிலைப் பொருளாதார நாடுகள் இந்தியாவை விட நன்றாகவே கோவிட்டை எதிர்கொள்கின்றன என்பது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. வளர்ந்துவருகிற ஒரு வல்லரசு என்று இவர்கள் இந்தியாவைப் பற்றித் தங்கள் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதுவோ உள்ளது உள்ளபடி தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அவமானமாக இருக்கிறது” என்கிறார் அகர்வால்.

மோதியின் பிம்பம் மீளுமா?

“எத்தனை நடந்தாலும் மீண்டு வருகிற ஒரு அரசியல்வாதி அவர்” என்கிறார் வைஷ்ணவ்.

“மிக மோசமான வீழ்ச்சிகளிலிருந்து அவர் வெளியில் வந்திருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரம் உதாசீனப்படுத்திவிடமுடியாது” என்கிறார் ட்ரவேலி.

இதை சரிசெய்யும் முயற்சியில் இப்போதே அரசு இறங்கிவிட்டது. மோசமான பத்திரிக்கை செய்திகள் தங்களைக் காயப்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறது. எதிர்கட்சித் தலைவர்களோடு சண்டையிட்டிருக்கிறது. விமர்சிக்கும் சமூக வலைதளப் பயனாளிகள்மீது கோபத்தில் இருக்கிறது. இந்தியாவை இழிவுபடுத்தும் வெளிநாட்டு சதி இது என்று அரசு தெரிவித்திருக்கிறது. தனக்குப் பிடிக்காத ட்வீட்களை அழிக்குமாறு ட்விட்டரைக் கேட்டுக்கொண்ட அரசு, மோதியின் தலைமைக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்திருக்கிறது.

ஆனால், ஏப்ரல் 20ம் தேதி வந்த ஒரு சிறு உரை தவிர, மோதியின் தலை எங்கும் தட்டுப்படவேயில்லை.

“கொள்ளைநோய் தொடங்கியபோது, இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் தான் எப்படித் தெரியவேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. நாட்டை வழிநடத்தும் ஒரு தளபதியாகவே தன்னை முன்னிறுத்தினார். ஆனால் இப்போதோ அவரிடம் முன்வைப்பதற்கான பிம்பம் எதுவும் இல்லை. மன்னிப்புக் கேட்கவோ உதவி கேட்கவோ அவருக்கு ஆர்வமும் இல்லை” என்கிறார் அகர்வால்.

பிரதமராக ஆனபிறகு சொற்பமான பேட்டிகளையே அவர் தந்திருக்கிறார். கோவிட் காலம் உட்பட எப்போதுமே அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியதில்லை.

“அவர் கேள்விகளை விரும்புவதில்லை” என்கிறார் முகோபாத்யாய.

ஆனால் பாதிக்கப்பட்ட மத்தியவர்க்கம், மருத்துவ வசதியில் இருக்கும் ஓட்டைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பணக்கார வர்க்கம் என்று எல்லாருக்குமே கேள்விகள் இருக்கின்றன. சொல்லப்போனால் தங்கள் பிரதமர், சூழல் இத்தனை மோசமாகும்வரை எப்படி விட்டுவைத்தார் என்று கட்சி விசுவாசிகளுக்கே கேள்வி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: