வெள்ளி, 14 மே, 2021

அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்
daylithanthi ": புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா இந்த புகாரை அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மத்திய உள்துறை மந்திரி 'அமித் அனில் சந்திர ஷா’- வை காணவில்லை என்று டெல்லி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

தான் பதிவு செய்துள்ள புகாரில் நாகேஷ் கரியப்பா கூறுகையில், மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப்பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும், அரசியல்வாதிகள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். சவாலான சூழ்நிலையில் ஓடக்கூடாது. நாடு ஒரு கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மக்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அதற்கு அரசியல்வாதிகள் பதில் சொல்லும் பொறுப்பு இந்திய அரசு அல்லது பாஜகவுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களை நோக்கியும் உள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த புகார் தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளர் லோகேஷ் ஷுஹா கூறுகையில், 2013 ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர். ஆனால், 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்தும் மாறிவிட்டது. தற்போது பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் இரண்டாவது இடத்தில் உள்ள நபரை (உள்துறை மந்திரி அமித்ஷா) காணவில்லை’ என்றார்.  

கருத்துகள் இல்லை: