புதன், 12 மே, 2021

பெங்களூரு கொரோனா அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிபரங்கள்

tamil.samayam.com :  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நினைத்து பார்க்காத வகையில் அதிகரித்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தகவல்தொழில்நுட்ப தலைநகரத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
நாட்டிலேயே அதிகபட்ச வைரஸ் பாதிப்பு கொண்ட மாவட்டமாக மாறியது
இரண்டாவது அலையை அரசு தவறான கணித்ததே காரணம் என குற்றச்சாட்டு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்ற, இறக்கங்களுடன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா(51.4 லட்சம்), கர்நாடகா(19.7 லட்சம்), கேரளா(19.3 லட்சம்), தமிழ்நாடு(14 லட்சம்), உத்தரப் பிரதேசம்(15.2 லட்சம்), மேற்குவங்கம்(10.1 லட்சம்), ஆந்திரப் பிரதேசம்(13.2 லட்சம்), டெல்லி(13.3 லட்சம்) ஆகியவை உள்ளன.


அதுவே நோய்த்தொற்றுக்கு ஆளான மாவட்டங்களின் பட்டியலை கவனிக்கையில், பெங்களூரு முன்னணியில் நின்று பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரம் தகவல்தொழில்நுட்ப தலைநகரமாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கொரோனா தலைநகரமாக தற்போது மாறியுள்ளது. மே 10ஆம் தேதி நிலவரப்படி புனே நகரை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்திருக்கிறது.

அன்றைய தினம் புனேவை விட பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் கூடுதலாக 20 ஆயிரம் கோவிட்-19 நோயாளிகள் இருந்தனர். அதுவே கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நிலைமை தலைகீழாக இருந்தது. புனே நகரை விட 86,500 நோயாளிகள் குறைவாக பெங்களூருவில் இருந்தனர். அதற்கும் முன்னதாக மார்ச் 31ஆம் தேதி வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

கடந்த 40 நாட்களில் அதிவேக வைரஸ் பரவலை பெங்களூரு சந்தித்துள்ளது. பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 1.9 லட்சம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பெங்களூருவின் மொத்த பாதிப்பில் 54 சதவீதம் ஆனது கடந்த 40 நாட்களில் தான் ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தினசரி சராசரி 12,901ஆக இருந்தது. அதுவே கடந்த 10 நாட்களில் 19,451ஆக காணப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு இரண்டாவது அலையை குறைத்து மதிப்பிட்டதே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிலைமை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் 10 லட்சம் பாதிப்புகளை தொடும் முதல் மாவட்டமாக பெங்களூரு மாறும் என்று அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை: