திங்கள், 10 மே, 2021

China rocket: சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

 /tamil.news18.com : கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வந்த சீன ராக்கெட்டின் ராட்சத பாகங்கள், இந்திய பெருங்கடல் அருகே விழுந்தன
விண்வெளி குறித்த ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம் பெறவில்லை.
எனவே, தங்களுக்கான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
டியூன்ஹி என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாடு அமைத்து வருகிறது.   
பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தாங்கள் கட்டும் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் கடந்த ஏப்ரல்  மாத இறுதியில் சீனா விண்ணில் ஏவியது. இதனை எடை 21 டன் என கூறப்படுகிறது.


குறிப்பிட்ட கலனை விண்ணில் நிலை நிறுத்தி விட்டு, பூமிக்கு திரும்பும் என சீன விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்பட்ட லாங் மார்ச் 5 பி, கட்டுப்பாட்டை  இழந்து பூமியை சுற்றி வரத் தொடங்கியது.
எப்போது வேண்டுமானாலும் இந்த ராக்கெட் பூமியில் விழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலும், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் எந்த பொருளும் காற்றுடன் ஏற்படும் உராய்வில் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் லாங் மார்ச் 5 பியின் பாகங்கள், அதிக உருகு வெப்பநிலையை கொண்டுள்ளதால் அதன் பாகங்கள் அப்படியே பூமியின் மீது விழக்கூடும் என  தகவல் வெளியானது.

இந்நிலையில், சீன ராக்கெட்டின் பாகம் வளிமண்டலத்தை கடந்து இன்று பூமிக்குள் நுழைந்ததாகவும்,  இதில்  பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகின,  இதன் சிதைவுகள் மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில்  விழுந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: