சனி, 15 மே, 2021

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

 பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்வுரீதியான முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள். கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் மாறப் போவதில்லை. emotional investmentயை தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
By வினவு செய்திப் பிரிவு - August 13, 20180177
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார்  ? பாகம் – 3
பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.
110010001111
இந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? உங்களால் இதில் ஒரு pattern இருப்பதாய் நம்பவோ, உணரவோ, காணவோ, சந்தேகிக்கவோ முடிகிறதா? உண்மையில் நான் என்போக்கில் கோர்த்த எண்கள் அவை.
ஆனால் நமது மனம் ஏற்கனவே சொன்னதுபோல காணும் எல்லாவற்றிலும் pattern (படிவம்) தேடும் இயல்புடையது. இந்த இயல்புதான் சதியாலோசனை கோட்பாடுகளுக்கான மைய புள்ளி.


அதாவது எதைச்சையாக நடக்கும்/நடந்த நிகழ்வுகளுக்கு/சம்பவங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி ஒரு சித்திரத்தை, கோர்வையான ஒரு கதையை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள். உண்மையில் பலநூறு பேர் சம்மந்தப்பட்ட ஒரு இரகசியத்தை வெளியில் கசியாமல் கட்டிக்காப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்னும் சொல்லப்போனால் சாத்தியமே இல்லை.
இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு தெரிந்த இரகசியங்கள் எப்படி என்றாலும் வெளியில் கசிந்தே தீரும் என்பதை நிறுவ algorithm (படிமுறை) எழுதியிருக்கிறார்கள். truth alone நிஜமாகவே triumphs. அதாவது சதியாலோசனை என்று ஒன்று இருக்குமானால் அது வெளிப்பட்டே தீரும். சுபாஷ் சந்திரபோஸ் தப்பி பிழைத்தது உண்மையானால் அது இந்நேரத்திற்கு முழு ஆதாரங்களோடு வெளிப்பட்டிருக்கும்.
அப்படியென்றால் சதியாலோசனை என்றே ஒன்று உலகத்தில் இல்லையா? அரசாங்கங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா? நிச்சயம் இல்லை. நாம் எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அலசி பார்ப்பதும் தவறே அல்ல. இன்னும் சொன்னால் நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சதியாலோசனை கோட்பாடுகள் உண்மை என்று பின்னால் வெளிப்படலாம்.
மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹான்.
உதாரணத்திற்கு, குஜராத்தில் நடந்தவை திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பது ஒரு சதியாலோசனை கோட்பாடாகத்தான் முதலில் வெளிப்பட்டது. பின்னர் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அதை உறுதி செய்தன. அப்படியென்றால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்? இருக்கிறது. மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் emotional investment (உணர்ச்சிவயப்பட்ட முதலீடு).
” ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” இந்த பாடலை இளையராஜாவின் பாடல் என்று நம்பி கொண்டுள்ளீர்கள். ஒரு நாள் உங்கள் நண்பர் மச்சி இந்த பாட்டு சங்கர் கணேஷ் போட்டது என்கிறார். அடுத்த நொடியிலிருந்து நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்கிறீர்கள். ஏனென்றால் இது ஒரு தகவல் பிழை சம்பந்தப்பட்டது. அதை திருத்துவதில்/மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்ச்சிவயப்பட்ட முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள்.
“மோதி” ஜி-க்கு முட்டுக்கொடுப்பதில் கில்லாடி கிழக்கு பதிப்பகம் பத்ரி. பொன். ராதாகிருஷ்ணனுடன்
பத்ரி, பானு கோம்ஸ் போன்றவர்கள் பி.ஜே.பி.க்கும்,மோடிக்கும் பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையின் போது கூட யோசிக்காமல் மணியாட்டுவதற்கு காரணம் அவர்கள் பி.ஜே.பி.ன் மீதும் மோடியின் மீதும் emotional investment செய்திருக்கிறார்கள். மோடியை கோமாளி ஆக்குவது என்பது அவர்களையே அவர்கள் கோமாளி ஆக்கிக்கொள்வதை போன்றது அவர்களுக்கு.
சாதிவெறியர்களுக்கும்/மதவெறியர்களுக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் அதில் emotional investment செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனை ஆதாரம் கொடுத்தாலும். எத்தனை விளக்கம் கொடுத்தாலும், எத்தனை உதாரணங்கள் காட்டினாலும் அவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளை மாற்றி கொள்ளமுடியாது.
உங்கள் சந்தேகங்கள்
உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.
அதுபோலத்தான் பாரிசாலன் அவருடைய சதியாலோசனை கோட்பாட்டு நம்பிக்கையின் மீது பெரும் emotional முதலீடு செய்துள்ளார். அவரை கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் அவர் மாறப் போவதில்லை. அவருடைய emotional investmentயை தற்காத்துக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் போவார்.
நாம் ஒரு விஷயத்தை சந்தேகிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட விஷயத்தின் மீது emotional investment செய்யக் கூடாது. உண்மை எப்படி வெளிப்படுகிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் மனத்தோடிருக்க வேண்டும். உங்கள் சந்தேகம் உண்மையென்றும் ஆகலாம் பொய்யென்றும் ஆகலாம்.
அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். உங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.
ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்றவர்களுடைய பேட்டிகளை பார்த்தவர்களுக்கு அவர்கள் ரொம்பவும் ஆதாரப்பூர்வமாக பேசுவதை போன்ற எண்ணம் ஏற்படும்.
இதற்கு ஒரு காரணம் நம் ஊரில் இருக்கும் பெரும்பான்மையான ஊடவியலாளர்களுக்கு ஒருவரை பேட்டி எடுப்பது என்றால் என்னவென்றெ தெரியாத நிலையில் இருப்பதாலும், பேட்டி எடுப்பது என்றால் கோமாளித்தனமான நாலு template  கேள்விகளை கேட்பது என்கின்ற புரிதலில் இருப்பதாலும் ஏற்படுவது. அதை தாண்டி ஒரு முக்கியமான காரணமிருக்கிறது.
நிலவில் மனிதன் கால்பதித்தான் என்கின்ற தகவல் நமக்கு தெரியும். எந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர், கால்பதித்த நாள் போன்ற அடிப்படை தகவல் தாண்டி நமக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. அது நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட சவால்கள், சோதனைகள், பயிற்சிகள், அதற்கு பின் உள்ள அறிவியல், விஞ்ஞானம் எதுவும் நமக்கு தெரியாது. அதை ஒரு தகவலாக பெற்றோம். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும், ஊடகங்களையும் நம்பினோம். அந்த தகவலை நம்பி ஏற்றுக்கொண்டோம்.
ஆனால் நிலாவில் மனிதன் கால்பதிக்கவில்லை என்பதை நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதற்கு சம்மந்தமான ஆதாரங்களை, தகவல்களை திரட்டி தெரிந்து வைத்திருப்பார்கள். நாம் அவர்களிடம் உரையாடும்பொழுது நிலவில் எப்படி நிழல் தெரிந்தது, நிலவில் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள். அதற்கு நமக்கு பதில்தெரியாத பட்சத்தில் (விஞ்ஞானிகள் இயற்பியல் விதிகளை வைத்து எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டார்கள்) நமக்கு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர் சொல்வதில் உண்மையிருப்பதாய் தோன்றும்.
சுருக்கமாக சொன்னால் ஒரு குருட்டுத்தனமான உணர்வு சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்கமுடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது. அதாவது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுக்கு மேலான அரசியல் வாழ்வை கொண்ட, பல்வேறு அரசியல் மாற்றங்களை/நிலைப்பாடுகளை முன்னெடுத்த பெரியாரை ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும்.
ஒரு 24 வயது சிறுவன் அவருடைய 4,5 வரிகளை மேற்கோளிட்டு மாமா பிசுக்கோத்து வாங்கி குடு என்கின்ற தோரணையில் பெரியாரை இலுமினாட்டி என்கிறான். பாரிசாலன் பெரியாரை பற்றி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் யாழினிது குழலினிது என்பர் பாரியின் மழலை சொல் கேளாதவர் என்கின்ற வகைமைக்குள்ளேயே வரும்.
உதாரணத்திற்கு எல்லா கற்பிதங்களையும், எல்லா புனிதங்களையும், எல்லா சமூக நிறுவனங்களையும் கேள்விக்குட்படுத்திய/சோதனைக்கு உட்படுத்திய ஒருவரை பாரி தம்பி நிர்வாணமாக இருக்கும் ஒரு secret society இரகசிய சங்கத்தை பெரியார் அவருடைய ஐரோப்பா பயணத்தில் சந்தித்தார் அப்பனா அவரு இலுமினாட்டிதான என்கிறார்.
அதாவது to begin with he got no clue what periyar stood for in the first place. பெரியாரை பற்றிய, அவருடைய வாழ்வியல் முறைமை பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாத காரணத்தால்தான் பாரிசாலன் வகையறாக்களுக்கு பெரியார் இலுமினாட்டியாக தெரிகிறார். ஹீலர் பாஸ்கரை பொறுத்தவரை அவர் சொல்வதை அவரே நம்புகிறாரா என்பதில் எனக்கு தீவிரமான சந்தேகமிருக்கிறது.
அவருடைய பேச்சு என்பது சினிமா நடிகர்களின் புகைப்படங்களை வைத்து கிளி ஜோசியம் சொல்லுகிறவரை ஒத்துள்ளது. பத்து ரூபாய் குடுத்து விட்டு நகர்ந்து விடலாம், ஆனால் சிறுவன் பாரிக்கு அவர் சொல்வதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கையிருப்பதை உணரமுடிகிறது.
அவருடைய ஓவ்வொரு பேச்சிற்கும், பேட்டிக்கும் கிடைக்கும் கவனிப்பும், ஆதரவும் மிகுந்த அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது. ஏற்கனவே சொன்னதைப்போல அடிப்படையான அறிவியலுக்கு, தர்க்கத்துக்கு (reasoning) ஒரு தலைமுறையே பயிற்றுவிக்கப் படவில்லை என்பதைத்தான் பாரிசாலன் அடிப்பொடிகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.
கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!
ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் சீமான் ஒரு செய்தி தொலைக்காட்சியில் வந்து ரஜினிகாந்தை இலுமினாட்டி என்று சொல்லும் கோமாளித்தனத்தை நிகழ்த்தும் அளவிற்கு இந்த இலுமினாட்டியை நம்பும் பொடியன்கள் தாக்கம் வளர்ந்திருக்கிறது. இது மிகுந்த கவலைக்கும், அச்சத்திற்கும் உரியது.
இது போன்ற சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களும், cult group (வெறி ஈடுபாட்டு குழுக்கள்) போல செயல்படுபவர்களும் இதுவரை மானுட சமூகத்திற்கு பேரழிவையே விளைவித்திருக்கிறார்கள். இவர்களிடம் நாம் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.
பாரிசாலன், பாஸ்கர் போன்ற ஆட்களை நாம் எப்படித்தான் கையாளுவது?
மனவியல் நிபுணர்கள் இவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தீவிரமாக அவர்களை மறுக்கிறீர்களோ அவர்கள் அதே தீவிரத்தோடு தங்களின் நம்பிக்கைகளை பற்றிக்கொள்வார்கள். அவர்களோடு நீங்கள் ஒருபோதும் விவாதித்து வெல்ல முடியாது. ஒரு போதும் அவர்களிடம் விவாதித்து அவர்களை மீட்க முடியாது. அவர்களிடம் நீங்கள் உரையாடும் நிலை வரும் பொழுது வெறும் அப்பட்டமான உண்மைகள்/தரவுகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள்.
உதாரணத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியபின் இத்தனை சதவிகிதமாக இருந்த போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை இத்தனை சதவீகிதமாக குறைந்துள்ளது என்கின்ற plain fact-டை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடுங்கள். இது தொடர்ந்து நடக்கும் பொழுது ஒருவேளை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கு மனதில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால் ஒரு கண்மூடித்தனமான உணர்ச்சி சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்க முடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.
பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.
(முற்றும்)
பின் குறிப்பு : வெவ்வேறு சமயங்களில் நான் சதியாலோசனை கோட்பாடுகளை பற்றி பார்த்தவை,கேட்டவை,படித்தவை கொண்டும், why do people believe in conspiracy theories என்ற கேள்விக்கு google சுட்டிய முதல் 10 கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த கட்டுரை எழுதப்பட்டது.
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

கருத்துகள் இல்லை: