ஞாயிறு, 9 மே, 2021

முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய புரட்சி கலைஞர் விஜயகாந்த் ‘வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’!

முதல்வருடன் விஜயகாந்த் பேசிய வார்த்தை!
minnambalam.com : தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று (மே 8) தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அக்கட்சியின் துணைச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து விலகிய தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் திமுக மீதும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தேர்தலில் தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை.

திமுக வெற்றி பெற்ற நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற பேதமின்றி அனைவரையும் சந்தித்தார். இந்த வகையில் கடந்த மே 4-ம் தேதி திமுக வின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவர் வீடு தேடிச் சென்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின் தனது வெற்றிக்காக விஜயகாந்திடம் ஆசி பெற்றார்.

தேர்தலுக்கு முன் இருந்த நிலைமை தேர்தல் முடிவுகளுக்குப் பின் இருக்காது என்ற நாகரீக அரசியல் அடிப்படையில் இந்த அணுகுமுறை பார்க்கப்பட்டது. இந்த சூழலில் மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

பதவி ஏற்பு விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ள முடியாத நிலையில், நேற்று (மே 8) தேமுதிக சார்பில் துணைச் செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனோடு முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர்.

அவர்களை வரவேற்று உபசரித்த ஸ்டாலின் விஜயகாந்த் சார்பில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். ‘அப்பா உடம்பு நல்லா இருக்காங்களா?’ என்று விஜய பிரபாகரனிடம் கனிவாக விசாரித்தார் முதல்வர்.

சந்திப்புக்குப் பிறகு வீட்டுக்கு சென்ற விஜய பிரபாகரன் தன்னை முதல்வர் ஸ்டாலின் மிகுந்த மதிப்புக் கொடுத்து நடத்தியதாகவும், தேமுதிக குழுவினரை காக்க வைக்காமல் உடனடியாக சந்தித்ததாகவும் விஜயகாந்த்திடமும் பிரேமலதாவிடமும் தெரிவித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போன விஜயகாந்த் தன்னால் ஸ்டாலினை நேரில் சந்திக்க முடியவில்லையே என வருத்தப்பட்டு அவருக்கு தொலைபேசி செய்யுமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து முதல்வர் தரப்பைத் தொடர்பு கொண்ட விஜயகாந்த் குடும்பத்தினர் முதல்வருடன் விஜயகாந்த் பேச விரும்புவதைத் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நேரம் கொடுக்கப்பட முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார் விஜயகாந்த். தனது உடல் நலத்தையும் பாராமல் மெல்லிய குரலில், ‘வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’ இன்று இரண்டு மூன்று முறை உருக்கமாக கூறியுள்ளார் விஜயகாந்த். அதைக்கேட்டு ஸ்டாலினும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: