சனி, 15 மே, 2021

ஏ...அண்ணாச்சி சிவா... போய் வாருங்கள்... Surya Xavier

May be an image of 1 person

Surya Xavier  :   ஏழு வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்.
அனந்தபுரி விரைவு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சென்றேன். இரண்டாவது குளிரூட்டப்பட்ட பெட்டியில் என் எதிரே தொப்பி போட்டு அமர்ந்திருந்தார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்ற நோக்கம் அதில் இருந்தது.
நான் அவரை உற்றுப் பார்த்து சிரித்தவுடன் சிரித்துவிட்டார்.
ஏ நீங்க சிரிப்பு நடிகர் அண்ணாச்சி சிவா தானேன்னு சொன்னேன்.
ஏ..பேசாம இருங்க என்று சொன்னார்.
பணகுடி அவரது சொந்த ஊர். அந்த ஊரின் வரலாறைச் சொன்னேன். பனை மரங்களுக்கு இடையே வாழ்ந்த குடிகள் என்பதால் பனைகுடி. அதன் பிறகு பனை கொடுத்த செல்வத்தால் பணகுடியாக மாறிப்போனது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்று சுகமானது. மலை அடிவாரத்தில் இருந்தாலும் அந்த ஊரில் காற்று வீசாது. அந்த ஊருக்கு காற்று வரவிடாமல் பெரும் மலை ஒன்று அருகே தடுத்து நிற்கும்.

 


எனவே அருகிலுள்ள மலை மீது மோதும் காற்று பணகுடிக்கு வரும். எனவே "கடன் வாங்கி காற்றடிக்கும் கந்தன் பணகுடி" என்று அழைப்பார்கள். இதை அவரிடம் சொன்னவுடன் "ஏ ஆமால்ல" என்றார். அவர் கொண்டு வந்த உணவில் எனக்கும் கொடுத்தார்.
அடுத்து பேச்சு தொடர்ந்தது.
அண்ணாச்சி என்று நெல்லையில் உள்ளவர்களை மட்டும் அழைப்பது ஏன் என்று சொன்னேன். ஆர்வத்தோடு " ஏ...நெறைய விசயம் வச்சுருக்கீகளே.. சொல்லுங்க சொல்லுங்க என்று கேட்கத் தொடங்கினார்.
திருநெல்வேலி என்றால் அல்வா தான் நினைவுக்கு வரும். அதிலும் இருட்டுக்கடை அல்வா தான் பெயர் பெற்றது. இருட்டுக்கடை அல்வா இங்கு அறிமுகப்படுத்தியது. ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து குடியேறிய ஹரிசிங் குடும்பத்தினர் தான். அவர்கள் தங்கள் கடைக்கு வருபவர்களை அண்ணனோடு சேர்த்து தங்கள் மொழியில் "ஜி" என்று சேர்த்து அழைத்தனர். அதுவே அண்ணன்+ஜி= அண்ணாச்சி என்றானது.
இது குறித்து பல்கலைக்கழக ஆய்வும் உண்டு. அன்றைய காலத்தில் பார்ப்பனியத்தால் அடக்கப்பட்ட பிரிவினராக நாடார் சமூகத்தினர் இருந்தனர். அவர்கள் ஹரிசிங் நடத்திய கடையோடு  தொடர்பு கொண்டு தங்கள் கிராமப் பகுதிகளில் இனிப்புக் கடைகளை தொடங்கினர். இப்படி இனிப்பு கடைகள் உருவாக்கிய குடும்பங்கள் "சிங்" என்ற பெயரை தங்களோடு இணைத்துக் கொண்டனர்.
தனசிங், ஜெயசிங்,பால்சிங் என்று பல பெயர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் உருவானது என்று நிறைய  சொல்லி முடித்தேன். ஆர்வத்தோடு கேட்டவர் " ஏ..சாதி என்ன சாதி. மனுச மக்க எல்லாரும் ஒன்னா இருந்தாத்தானே நாடு வெளங்கும்" என்றார்.
காலையில் அவரை அழைக்க சென்னை ரயில் நிலையத்துக்கு கார் வந்தது. எனக்கு ஒரு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தேவையும் எழவில்லை. நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தி, அவரோடு பயணித்த அந்த இரவுப் பொழுதை கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியது.
சிறந்த நகைச்சுவை கலைஞனை தமிழகம் இழந்திருக்கிறது.
ஏ...அண்ணாச்சி சிவா...
போய் வாருங்கள்.
ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
உங்கள் நகைச்சுவை தமிழக மக்களின் செவிகளில் எப்போதும் ஒலிக்கும்.
நாங்கள் புத்துயிர் பெறுவோம்.
அண்ணாச்சி சிவாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
(திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உருவான வரலாறு குறித்து, நான் எழுதி நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கதையல்ல வரலாறு"  பதிவு குறித்த காணொளி லிங்க்கை இத்தோடு இணைத்துள்ளேன். பாருங்கள்.
அன்பும்-நன்றியும்
சூர்யா சேவியர்)

கருத்துகள் இல்லை: