வெள்ளி, 14 மே, 2021

இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு!

இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு!

minnambalam : முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்த நிலையில் நேற்று (மே 13) மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுகிறார்கள். எனவே ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

முதல்வர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கச் சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் என்ற முறையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், டாக்டர் வெ.பரமசிவம், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் எம்.பூமிநாதன், கு.சின்னப்பா, விசிக சார்பில் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் நாகைமாலி, சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை.ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கைத் தீவிரப்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், “இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: