செவ்வாய், 11 மே, 2021

தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

 BBC :தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் தலைவராக மு. அப்பாவு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவையின் மிக முக்கியமான இந்தப் பதவியின் அதிகாரங்களும் பொறுப்புகளும் என்னென்ன?
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.
பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, சட்டப்பேரவை, அதன் அலுவலகம் ஆகியவற்றின் மீது முழு அதிகாரம் இருக்கும். பேரவைத் தலைவர்தான் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார் என்பதோடு, அவையில் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் கொண்டவர்.

அதேபோல, உறுப்பினர்கள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களைத் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு உண்டு.


உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுபவர், ஒரு அரசியல் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டுத்தான் வெற்றி பெறுகிறார் என்றாலும், சட்டப்பேரவையிலும் சட்டப்பேரவைக்கு வெளியிலும் கட்சி சார்பற்றவராகவே அவர் நடந்து கொள்ள வேண்டும்.

பேரவை நாள் குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டிருந்தால், எந்தவொரு நாளிலும் பேரவையைக் கூட்டும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உண்டு. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை, அதனை விதிமுறைகளின்படி நடத்திச் செல்லும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கே உண்டு.

பேரவைத் தலைவரை நீக்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 179 பிரிவு சி உட்பிரிவு அனுமதி அளிக்கிறது. இதற்கு, பேரவை உறுப்பினர் ஒருவர் எழுத்து மூலமாக தீர்மான வடிவை அளிக்க வேண்டும். இது தொடர்பான விவாதங்களின்போது, வேறு ஒருவரை பேரவைத் தலைவராக அவையை நடத்த, பேரவை தேர்வுசெய்யலாம்.

பேரவைத் தலைவர் எழுந்து நின்றால், யாரும் பேசக்கூடாது. உரையாற்றிக் கொண்டிருப்பவர் தனது உரையை நிறுத்தி விட்டு அமர்ந்து விட வேண்டும். பேரவைத் தலைவர் பேசிக்கொண்டிருக்கும்போது யாரும் எழுந்து செல்லக்கூடாது.

பேரவையில் வாக்கெடுப்புகள் நடந்தால், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது பேரவைத் தலைவரின் முடிவே இறுதியானது.

ஒழுங்குப் பிரச்சனைகள் குறித்தும் பேரவைத் தலைவரின் முடிவே இறுதியானது. ஒரு உறுப்பினரை பேச அனுமதிப்பது, பேச்சை நிறுத்துவது, அவதூறு சொற்களைப் பயன்படுத்தியிருந்தால், அந்தப் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது போன்ற உரிமைகளும் பேரவைத் தலைவருக்கு உரியது.

பேரவைக் கூட்டத்திலிருந்து ஒரு உறுப்பினரை வெளியேற்றுவது, அவை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைப்பது, பேரவைக் கூட்டத்தை ஒத்திவைப்பது போன்ற அதிகாரங்களும் பேரவைத் தலைவருக்கே உண்டு.

சட்டப்பேரவையைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இந்தியாவில் எங்கு கைது செய்யப்பட்டாலும் அந்தத் தகவலை பேரவைத் தலைவருக்கு முழு விவரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். பேரவை உறுப்பினர் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டால் அந்தத் தகவலும் பேரவைத் தலைவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

சட்டப்பேரவையின் அமைப்பு எல்லைக்குள், பேரவைத் தலைவரின் உத்தரவின்றி யாரையும் காவல்துறையினர் கைது செய்ய முடியாது. அதேபோல, உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது அறிவிப்பை பேரவை எல்லைக்குள் யாரிடமும் தரவும் கூடாது.

பேரவையின் மாண்பைக் குலைக்கும் வகையிலோ, களங்கம் கற்பிக்கும் வகையிலோ பேரவைக்கு வெளியில் செயல்பட்டாலும் அவர்களை அழைத்துக் கண்டிக்கும் மரபு தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு.

பேரவைக்குள் எந்த உறுப்பினராவது மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவரை சில நாட்களுக்கு இடைநீக்கம் செய்வது, முழுமையாக தகுதி நீக்கம் செய்வது போன்ற அதிகாரங்களும் பேரவைத் தலைவருக்கு உண்டு.

பேரவையின் நடவடிக்கைகளில், பேரவைத் தலைவர் பேரவைக்கு எடுக்கும் முடிவுகள் குறித்து பொதுவாக நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை.
பேரவையின் பின்னணி

இந்தியாவில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களையடுத்து 1919ல் இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 1921ல் சென்னை சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இதன் ஆயுள் 3 ஆண்டுகளாக இருக்கும். 132 உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். இதில் 34 பேரை ஆளுநர் நியமித்தார். மற்றவர்கள் தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்டனர். 1921 ஜனவரி 9ஆம் தேதி முதல் முறையாக சட்டப்பேரவை புனித ஜார்ஜ் கோட்டையில் கூடியது. கூட்டத்தொடரை கன்னாட் கோமகன் துவக்கி வைத்தார்.

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 1952ல் நடந்த தேர்தலையடுத்து, சென்னை மாகாண சட்டப்பேரவை செயல்பட ஆரம்பித்தது.
பேரவைத் தலைவரின் இருக்கை

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அமருக்கும் இருக்கை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள சபாநாயகரின் இருக்கையைப் போன்றே இந்த இருக்கையும் வடிவமைக்கப்பட்டது. வில்லிங்டன் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தபோது 1922 மார்ச் 6ஆம் தேதி இந்த நாற்காலியை பரிசளித்தார். பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி அவையின் முதல் தலைவராக இந்த நாற்காலியில் அமர்ந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை 17 பேர் சட்டப்பேரவைத் தலைவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் புலவர் கே. கோவிந்தன் மட்டும் இரண்டு முறை சபாநாயகராக இருந்திருக்கிறார்.

முதலாவது சட்டப்பேரவை காலத்தில் (1952-57) ஜே. சண்முகம் பிள்ளை, என். கோபாலமேனன் ஆகிய இருவரும் நான்காவது சட்டப்பேரவை காலத்தில் (1967 - 71) சி.பா. ஆதித்தனார், புலவர் கே. கோவிந்தன் ஆகிய இருவரும் ஐந்தாவது சட்டப்பேரவை காலத்தில் கே.ஏ. மதியழகன், புலவர் கே. கோவிந்தன் ஆகிய இருவரும் பதினான்காவது சட்டப்பேரவை காலத்தில் டி. ஜெயகுமார், பி தனபால் ஆகிய இருவரும் சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். மற்ற சட்டப்பேரவைகளில் துவக்கம் முதல் இறுதிவரை ஒருவரே சபாநாயகராக இருந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: