சனி, 15 மே, 2021

எனது முதல் பணி ... வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். திரு. பிடிஆர்பி. தியாகராஜன், நிதி, மனிதவள மேம்பாட்டு அமைச்சர்,

May be an image of 1 person and text that says 'Umpire'

Fazil Freeman Ali  : க‌டைசியா பொருளாதார‌ம் தெரிந்த‌ நிதிய‌மைச்ச‌ர்
எனது முதல் பணி எனக்கு நானே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
ஒரு MLA-யாக‌,  முன்னாள் வங்கியாளராக, வங்கி ஒன்றின் முன்னாள் மேலாண் இயக்குநராக இருக்கும் நானே, நமது மாநிலத்தின் நிதி நிலையை புரிந்து  கொள்ளவில்லை என்றால் சாதாரண குடிமகன் எவ்வாறு அதைப் புரிந்து  கொள்வார்.
துறைக்குள்ளேயே சீராய்வு கூட்டம் நடத்தி அந்த விவரங்களை  பொதுமக்களுக்கு வெளியிடாமல்
இருக்க முடியும். ஆனால், எனது தலைவர் எம்.கே.ஸ்டாலின் மிகவும் தெளிவாக  சொல்லி விட்டார். இந்த அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்றும் மக்களுடன் இணைந்து
செயலாற்ற வேண்டும் என்று.
எனவே, மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை அறிந்து  கொள்ள ஒரு வெள்ளை அறிக்கையை தயாரித்து எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.


எனது முதல் அக்கறை கடன்கள் குறித்தது. நமக்கு கடன் பிரச்சினை இருக்கவே கூடாது. இதில் ஆபத்தான நிலைமை நிலவுவதாக  சொல்லமுடியாது. நம் முன் உள்ள அதிகபட்ச அபாயத்திலிருந்து நாம் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் உள்ள ஆபத்தான இடர்பாடு கடன் சுமைதான்.
நாம் மிகப்பெரிய அளவில் கடன் சுமையை பெற்றுள்ளோம். வட்டித்  தொகையும், அசல் தொகையும் மிக மிக அதிகம். இந்த தருணத்தில் நம் முன் உள்ள முதல் கேள்வி, இந்த கடன்  போதுமானதா..? ஓர் அரசு எப்போதும் திவால் நிலைக்கு  போகாது. அரசுக்கு ஏராளமான  சொத்துக்கள் உள்ளன. கையிருப்பில் உள்ள பணப்புழக்கம், காலத்திற்கேற்ற முடிவுகள் எடுப்பதும்தான் கவனிக்கப்படவேண்டியவை.
நமது செலவினங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளும் அளவு நமது கடன் தொகை போதுமானதாக உள்ளதா என்பதுதான் கவலைக்குரிய விஷயம். நாம் என்ன செய்ய வேண்டும்,  எப்போது எதை முதலில் செய்ய வேண்டும் என்பது குறித்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் நமக்கு உள்ளதா..?
எடுத்துக்காட்டாக  கோவிட் பெருந்தொற்று  போன்ற நெருக்கடி காலங்களில் நமது முதல் கடமை மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதுதான். அதன் மூலம் தேவைகளை மீட்க வேண்டும். நாம் மேற்கொண்ட நடவடிக்கை
சிறந்த  பேரினப் பொருளியலுக்கு (macro economic) எடுத்துக்காட்டு. இவற்றை இலவசங்கள் என்று குறிப்பிடுவது மிகவும் விபரீதமானது.
எனது கடன் விவகாரம் பற்றிய திட்டம் முதலில் செயல்படுத்தப்படவேண்டும். அதன் பின்னர்,  இந்த ஆண்டின் வரவு செலவு பற்றி நான் கவனம் செலுத்த வேண்டும். பிறகு நீண்டகால தேவைக்காக நிதிநிலையை எவ்வாறு கட்டமைப்பது என்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2004 முதல் 2014 வரை நாட்டின் முன்னணி மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு மீட்க என்ன செய்ய வேண்டும்..? அப்போது நிதி  பொறுப்பு சட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் வருவாய் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.5 முதல் 11 சதகமாக இருக்க வேண்டும். பிறகு மத்திய அரசில் இருந்து 3.5 சதம் பங்கை பெற வேண்டும். நமது வருவாய்க்கும் கடன் வட்டிக்குமான  விகிதம் 12 சதமாக பழைய நிலைக்கு குறையவேண்டும்.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது கடன் பழைய படி 20 சதமாக இருக்க வேண்டும்.  
இது தற்போது 25 சதமாக உள்ளது. வருவாய், கடன் வட்டியை கட்டுப்படுத்தல், கடனை கட்டுப்படுத்துதல் ஆகியவையே எனது முக்கிய கடமை.
2014ல் இருந்தது  போல நமது கடன் சுமை உள்நாட்டு உற்பத்தியில் 18 முதல் 17 சதமாக குறைய வேண்டும். அவ்வாறு குறைத்தால் தமிழ்நாட்டின் நிதி கட்டமைப்பை நாம் மீட்டு விட்டோம் என்று  சொல்லலாம்.
நிதி  பொறுப்பு சட்டத்தின் படி கடன் என்பது மூலதன முதலீடு ஆகும். அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பாலங்கள், சாலைகள், துறைமுகங்கள் கட்ட கடன் வாங்குதல்.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன் கூட, அதிமுக அரசு ஒரு ரூபாய் கடன் வாங்கினால், அதில் 50 பைசா வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட செலவிடப்பட்டுள்ளது. அதில் மீதி 50 பைசாதான் மூலதன முதலீடுகளில் செலவிடப்பட்டது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கட்டாய செலவினங்களை (கடன்) செலுத்தவும், அன்றாட செலவினங்களான சம்பளம், வட்டி ஆகிவற்றை செலுத்த கடன் வாங்குவதை வழக்கமாக்கி விட்டோம். இந்த நடைமுறையில் இருந்து நாம் விடுபட வேண்டும். இதை நான் செய்தே தீர வேண்டும்.
ஒதிசா, சட்டிஸ்கர் மாநிலங்களின் வரவு செலவு திட்டத்தைப் பாருங்கள். அவர்கள் வருவாயில்
கனிம சுரங்கங்கள் துறையில் இருந்து வரும் வருவாய் எவ்வளவு சதம் என்பதை கவனியுங்கள்.
நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இந்த திட்டத்தை நான் ஏற்கெனவே தொடங்கி விட்டேன். 2004 முதல் 2014 வரை நமது வருவாய் நன்றாகவே இருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது வருவாய் 10 முதல் 11 சதமாக இருந்தது. அது எப்படி சாத்தியமானது..?
டாஸ்மாக்(சாராயம் விற்பனை), கனிம சுரங்கம், வணிக வரி, தொழில் வரி, முத்திரை கட்டணம், பத்திரப் பதிவு இவற்றில் இருந்து எவ்வளவு வருவாய் நமக்கு கிடைத்தது..?
ஒவ்வொரு கணக்குத் தலைப்பிற்கும் தனி அட்டவணை தேவை. அப்போதுதான், வருவாய் எங்கிருந்து வந்தது, எங்கு தவறு ஏற்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எனது ஆரம்ப ஆய்வுகளின் படி கலால் துறையில் இருந்து வசூலாக வேண்டிய மிகப்பெரிய அளவிலான வருவாய் இப்போது காணவில்லை.
என்ன நடந்தது..? டாஸ்மாக்கில் அவ்வளவு ஊழல் பெருகி விட்டதா..? கலால் வரி எங்கு காணாமல்  போனது..? எனக்குத் தெரியவில்லை... அதை கண்டுபிடிக்க வேண்டும்.
நான் ரூபாய் கணக்கிட்டு எதையும் சொல்லவில்லை.  பொருளாதார சதவிதிதப்படி  சொல்கிறேன். உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்திற்கு 3 முதல் 3.5 சதம் வருவாய் கூட கிடைக்கவில்லை. இதற்கு என்ன  பொருள்..? எல்லாம் காற்றில் கரைந்து வானத்தில் மாயமாகிவிட்டதா..? ஆனால், உண்மை அதுவல்ல.
அரசுக்கு வந்து சேரவேண்டிய கணிசமான இந்த வருவாய் சமுதாயத்தின் செல்வந்தர்களிடம் முடங்கிக் கிடக்கிறது.
இந்த வசூலிக்கப்படாத வரியை மீண்டும் வசூலித்து மக்கள் நலனுக்காக மறுபங்கீடு செய்து செலவிட வேண்டும். அதை மாநில அரசு வசூலிக்காவிட்டால் அது தானாகவே பொருளாதார சமநிலையை குலைத்து, உள்ளடக்கிய வளர்ச்சியை மறுத்துவிடும்.
இரண்டு விஷயங்கள் நம் முன் உள்ளன.
ஒன்று அளவுகோல்; ஒரு தனி மனிதனுக்கு 1 ரூபாய்  கொடுப்பதற்கும் 1 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
இரண்டாவது; நமது  நோக்கம், சூழ்நிலை. மிக  மோசமான சூழலிலும்,  நாம் வழங்கும் இலவசங்கள், சலுகைகள் அனைத்திற்கும் அதிகபட்சமாக 10 ஆயிரம்  கோடி அல்லது 20 ஆயிரம் கோ கொடி தேவைப்படும். அதே சமயம் மாநிலத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பு 70 ஆயிரம்  கோடி. வருவாய் மேலாண்மையில் உள்ள குளறுபடியே இதற்கு காரணம்.
ஆண்டுதோறும் 40 ஆயிரம்  கோடி ரூபாய் கடன் வட்டியாக நாம் செலுத்துகிறோம்.  கோவிட் நெருக்கடி போன்ற ஊரடங்கு காலத்தில் நாம் மக்களுக்கு பணம்  கொடுக்கிறோம். இப்போது  பொருளாதாரத் தேவை அதல பாதாளத்தில் விழும் அபாயத்தில் உள்ளது. இந்த நிலையில் மேற்படி நடவடிக்கைகள் சரியானவையே என்று பெரும்பாலான் பேரினப்  பொருளாதார நிபுணர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
இந்த ஓட்டைகள் எங்கெல்லாம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் கண்டுபிடித்து அடைக்கப்  போகிறேன்.
வணிக வரி, கலால், கனிம வளம், பத்திரப் பதிவு, முத்திரைத் தாள் மற்றும் பல்வேறு கணக்குத் தலைப்புகளின் படி உள்நாட்டு உற்பத்தியில் அத்துறையின் சராசரி வருவாயை கணக்கிட வேண்டும். இந்த புள்ளி விவரங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டு அத்துறையின் இலக்காக வைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவர்கள் துறைக்கான் வருவாய் இலக்காக இவை நிர்ணயிக்கப்படும்.
- திரு. பிடிஆர்பி. தியாகராஜன்,
  மாண்புமிகு நிதி, மனிதவள மேம்பாட்டு       
  அமைச்சர்,
  தமிழ்நாடு அரசு
தி ஹிண்டு நாளித‌ழில் (13.5.2021) மூத்த பத்திரிகையாளர் திரு பி. கோலப்பன் அவர்களுக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்
தமிழ்நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌, இந்திய‌ அள‌வில் சென்ற‌ சுமார் 7 ஆண்டுக‌ளில் எந்த‌ நிதிய‌மைச்ச‌ராவ‌து இப்ப‌டி பேசி பார்த்திருக்கிறீர்க‌ளா...?
வெங்காய‌ விலையேற்ற‌த்தை ப‌ற்றி கேட்டால், "நான் வெங்காய‌ம் உண்ப‌தில்லை" என்று திமிராக‌ ப‌தில் சொல்ப‌வ‌ர்க‌ளுக்கிடையே இப்ப‌டியொரு பொருளாதார‌ம் தெரிந்த‌ நிதிய‌மைச்ச‌ரை பார்க்க‌ ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிற‌து.

கருத்துகள் இல்லை: