புதன், 12 மே, 2021

நகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது

நகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி :திருச்சி புத்தூர் மதுரைவீரன் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் ஜெயராஜ் (வயது 42).
இவர் திருச்சி கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்முதல் பிரிவில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்ட்டின் ஜெயராஜ் நகைகள் வாங்குவதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வாடகை காரில் புறப்பட்டு சென்றார்.
1½ கிலோ நகை
அந்த காரை திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டனை சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்த் (26) என்பவர் ஓட்டினார்.
சென்னை வந்ததும் மார்ட்டின் ஜெயராஜ் நகைக்கடையில் இருந்து 1 கிலோ 598 கிராம் நகைகளை வாங்கி கொண்டு காரில் திருச்சிக்கு புறப்பட்டார்.
ஆனால் அவர் திருச்சி செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.


இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் மதன், 1½ கிலோ நகையுடன் தனது ஊழியர் மாயமாகி விட்டதாக உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மார்ட்டின் ஜெயராஜை தேடிவந்தனர்.
ஊழியர் குத்திக்கொலை
தனிப்படை போலீசார், மார்ட்டின் ஜெயராஜ் சென்ற வாடகை காரின் டிரைவர் பிரசாந்தை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி திரும்பி கொண்டிருந்த போது, நகைக்காக ஆசைப்பட்டு தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மார்ட்டின் ஜெயராஜை கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியில் வைத்து கத்தியால் குத்திக்கொலை செய்து, அவரிடம் இருந்த 1½ கிலோ நகையை கொள்ளையடித்ததாகவும், பின்னர் அவருடைய உடலைத திருச்சி மாவட்டம் அழகியமணவாளம் கிராமத்தில் காட்டுப்பகுதியில் குழித்தோண்டி புதைத்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
7 பேர் கைது
கொள்ளையடித்த நகையை திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் பிரசாந்த உள்பட கொலையாளிகள் 7 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், கைதான 7 பேரையும் நேற்று மாலை அழகியமணவாளம் கிராமத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு மார்ட்டின் ஜெயராஜ் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினார்கள். இன்று மார்ட்டின் ஜெயராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: