வியாழன், 13 மே, 2021

ஊரடங்கை நீட்டிக்கலாமா?: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (மே 13) மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் அனைத்துக் கட்சியினரிடம் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாநகர, நகர, கிராமப்புறங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளதா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மக்கள் நடமாட்டத்தையும், வாகனங்கள் செல்வதையும் காணமுடிகிறது. இந்நிலையில், ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும், கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள பகுதிகளில் இன்னும் இரு மாதங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்திருக்கிறது.

இந்தச்சூழலில் தான் மாலை 5 மணிக்கு, தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருப்பதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில், தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தேவை, கொரோனா உயிர்ப்பலியைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்குதான் ஒரே வழி என்ற நிலையில், அதனைத் தீவிரப்படுத்துவது குறித்தும், மே 24ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கருத்துகள் இல்லை: