ஞாயிறு, 9 மே, 2021

சென்னையில் இருந்து 3,800 பஸ்கள் இயக்கம்- மூட்டை முடிச்சுகளுடன் குவிந்த வெளியூர் மக்கள்

சென்னையில் இருந்து 3,800 பஸ்கள் இயக்கம்- மூட்டை முடிச்சுகளுடன் குவிந்த வெளியூர் மக்கள்
malaimalar : சென்னை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணி முதல் வருகிற 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய 34 ஆயிரத்து 619 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்கு வரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்யக்கூடியவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதல் முழு அளவில் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து சனி, ஞாயிறுக்கிழமைகளில் 9,636 பஸ்கள் இயக்கப்படுகிறது. முழு ஊரடங்கு குறித்த தகவல் வெளியானவுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய குவிந்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவு வரை கூட்டம் அதிகமாக இருந்தது.

இதே போல ஆம்னி பஸ் நிலையங்களிலும் ஏராளமான பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் நேற்று அதிகளவில் இயக்கப்பட்டன.

பகல் நேரங்களில் ஆம்னி பஸ்கள் இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அவர்கள் நேற்று முழுமையாக இயக்கினார்கள்.

வெளியூர் செல்லும் பயணிகள் ஆம்னி பஸ் நிலையங்களிலும் காத்திருந்த பயணத்தை தொடங்கினார்கள்.

நாளை முதல் பொது ஊரடங்கு அமலுக்கு வருவதால் அதிகாலைக்குள் தங்களது சொந்த ஊர் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று பெரும்பாலானவர்கள் பயணம் செய்வார்கள்.

வெளியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை மற்றும் அதனையொட்டி பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

இதனால் இன்று காலையில் இருந்தே கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெளியூர் செல்லும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வந்தனர். குடும்பமாக தங்கியிருந்த அவர்கள் குழந்தைகளுடன் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறினார்கள்.

ஒருசிலர் தங்கள் மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பி விட்டு அவர்கள் மட்டும் இங்கு தங்கி வேலை செய்கிறார்கள்.

வெளியூர் செல்லும் மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய விரிவான பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பயணிகள் வசதிக்காக ஆயிரக்கணக்கான அரசு பஸ்கள் வரிசையாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.

சென்னையில் இருந்து இன்று கடைசியாக புறப்படும் பஸ்கள் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்துக்கு மாலை 6 மணி, நாகர்கோவிலுக்கு இரவு 7 மணி, தூத்துக்குடிக்கு இரவு 7 மணி, செங்கோட்டைக்கு இரவு 7.30 மணி, நெல்லை, திண்டுக்கலுக்கு இரவு 8 மணி, மதுரைக்கு இரவு 11.30 மணி, திருச்சிக்கு இரவு 11.45 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இது தவிர கோயம்பேடு பஸ் நிலையத்தில் முன் பதிவு மையத்திலும் நேரடியாக முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யாமல் நேரடியாக பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “நேற்றை விட இன்று கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமாக இயக்கப்படும் 1,800 பஸ்களை விட கூடுதலாக 2 ஆயிரம் பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த பகுதிக்கு தேவை அதிகமாக உள்ளதோ அதை கண்டறிந்து அதற்கேற்றவாறு பஸ்களை இயக்க தயாராக உள்ளோம்.

தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பஸ் பயணத்தை நம்பிதான் பெரும்பாலானவர்கள் வரக் கூடும். அதனால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் தேவையை அறிந்து அதற்கேற்ப பஸ்கள் இயக்கப்படும்.

தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். அரசின் கொரோனா விதி முறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு வரை பஸ்களை இயக்குவற்கு தயாராக இருக்கிறோம். இங்கிருந்து புறப்படுகின்ற பஸ்கள் அதிகாலைக்குள் அந்தந்த இடங்களுக்கு சென்றடையும் வகையில் பஸ்கள் இயக்கப்படும்.

இன்று 350 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று 380 பஸ்கள் இயக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேட்டில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் இன்று இரவு வரை மாநகர பஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, மாதவரம் புதிய பஸ் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: